ஆசியாவின் கிரிக்கெட் சகோதரர்களாகக் கருதப்படும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்து மூன்று நாட்களே ஆகின்றது. டெஸ்ட் தொடரை இலங்கை வரலாற்று சாதனைகளுடன் 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில் இந்த இரண்டு ஆசிய கிரிக்கெட் ஜாம்பவான்களும் தம்மில் பலமிக்கவர் யார்? என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கோடு சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு (Pink) ஆட்டங்களில் இருந்து விடுபட்டு வெள்ளைப் பந்து உபயோகிக்கப்படும் ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் மோதவிருக்கின்றனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடர் துபாயில் வெள்ளிக்கிழமை (13) நடைபெறவுள்ள முதலாவது பகலிரவு ஆட்டத்துடன் ஆரம்பமாகின்றது. இனி நாம் இந்த சகோதரர்கள் இடையில் நடைபெறவிருக்கும் ஒரு நாள் சமர் தொடர்பான ஒரு முன்னோட்டத்தினை பார்க்கவுள்ளோம்.

 இலங்கைபாகிஸ்தான் ஒரு நாள்  போட்டிகள் வரலாறு

1975 ஆம் ஆண்டு உலக கிண்ணத் தொடர் மூலம் இரண்டு அணிகளும் முதற்தடவையாக ஒரு நாள் போட்டியொன்றில் மோதியிருந்தன. அக்காலத்தில் கத்துக்குட்டிகளாக காணப்பட்ட இலங்கை அணியை அனுபவமிக்க மஜித் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி 192 ஓட்டங்களால் தோற்கடித்திருந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெற்று ஏழு வருடங்களின் பின்னரே இலங்கை அணியினால் பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது ஒரு நாள் வெற்றியினை சுவைக்க முடிந்திருந்தது. 150 ஆவது ஒரு நாள் போட்டியாக அமைந்த இந்தப் போட்டியில் பந்துல வர்ணபுர தலைமையிலான இலங்கை அணி ஜாவேட் மியான்டாட் தலைமையிலான பாகிஸ்தான் அணியை 30 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது.

இவற்றோடு சேர்த்து அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு அணிகளும் 148 ஒரு நாள் போட்டிகளில் மோதியிருக்கின்றன. இவற்றில் பாகிஸ்தான் 85 போட்டிகளை கைப்பற்றியுள்ளதோடு இலங்கை 58 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது. ஒரு போட்டி சமநிலை அடைய 4 போட்டிகள் எந்தவித முடிவுகளுமின்றி நிறைவுற்றுள்ளன.

திரிமான்ன, கபுகெதரவின் தேர்வை நியாயப்படுத்தும் லெப்ரோய்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவர் கிரேம் லெப்ரோய்…

அத்தோடு இந்த ஒரு நாள் தொடர் நடைபெறும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் பாகிஸ்தான் அணியே சிறப்பான பதிவுகளை வைத்திருக்கின்றது. இதுவரையில் இரண்டு அணிகளும் இந்த மத்திய கிழக்கு நாட்டில் 45 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கின்றது. இவற்றில் 28 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற 16 போட்டிகளை மாத்திரமே இலங்கை அணியால் கைப்பற்ற முடிந்துள்ளது. அத்தோடு இரு அணிகளுக்குமிடையில் சமநிலை அடைந்த போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற போட்டியேயாகும்.

 அணிகளது அண்மைய ஆட்டங்களின் கள நிலவரங்கள்

இறுதியாக இரண்டு அணிகளும் இலங்கையில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்த இருதரப்பு ஒரு நாள் தொடர் ஒன்றில் சந்தித்திருந்தன. ஐந்து போட்டிகள் கொண்ட அத்தொடரை அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் தரப்பு 3-2 என கைப்பற்றியிருந்தது.

இந்த ஒரு நாள் தொடர் நடைபெற்றிருந்த போது காட்டிய நல்ல ஆட்டத்தை அண்மைய நாட்களில் இலங்கை வீரர்கள் வெளிக்காட்ட தவறியிருந்தனர். 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது. இந்த வருடத்தில் சம்பியன்ஸ் கிண்ணத்தோடு சேர்த்து ஐந்து ஒரு நாள் தொடர்களில் பங்கேற்றிருக்கும் இலங்கை அணி எந்தவொரு தொடரிலும் சிறப்பான பெறுபேறு ஒன்றினைத் தந்திருக்கவில்லை.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவினால் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை, அடுத்ததாக சவால் குறைந்த பங்களாதேஷ் உடனான தொடரையும் சமநிலைப்படுத்தியிருந்தது. இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத்திலும் முதல் சுற்றோடு வெளியேறியிருந்த இலங்கை வீரர்கள் அதனை அடுத்து ஜிம்பாப்வே உடன் நடைபெற்ற ஒரு நாள் தொடரையும் வரலாற்றில் முதற்தடவையாக பறிகொடுத்து அவமான தோல்வியை எதிர்கொண்டிருந்தனர். இன்னும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமது சொந்த மண்ணில் வைத்து இந்தியாவினாலும் ஒரு நாள் தொடரில் இலங்கை வைட் வொஷ் செய்யப்பட இலங்கை வீரர்களும், ரசிகர்களும் மிகவும் அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தனர்.

இவ்வாறான தொடர் தோல்விகளை சந்தித்த காரணத்தினால் ஒரு நாள் தரவரிசையிலும் எட்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட இலங்கை அணி அடுத்த உலகக் கிண்ணத்துக்கும் நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல்களை எதிர் கொண்டிருந்தது. எனினும், செப்டம்பரில் நடைபெற்ற இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றிய காரணத்தினால் 2019 ஆம் ஆண்டின் உலக கிண்ணத்திற்கான நேரடி வாய்ப்பை இலங்கை தக்கவைத்துக்கொண்டது.

இப்படியாக ஒரு தலையிடியில் இருந்து மீண்டு கொண்ட இலங்கை அணிக்கு  பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் கிடைத்த வெற்றி மீண்டும் சாதிக்க கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நடைபெறவிருக்கவிருக்கும் இந்த ஒரு நாள் தொடர் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சந்திமாலின் தலைமைத்துவத்தை பாராட்டும் குமார் சங்கக்கார

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, பாகிஸ்தான்…

எதனையும் எதிர்வுகூற முடியாத அணியாக காணப்படும் பாகிஸ்தான் இந்த வருடத்திற்கான சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் சவால் மிக்க இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்து வெற்றியாளராக மாறியிருந்தது. சம்பியன்ஸ் கிண்ணத்தை தவிர்த்து இவ்வருட ஆரம்பத்தில் பாகிஸ்தான் அவுஸ்திரேலியா உடனான ஒரு நாள் தொடரை 4-1 எனப் பறிகொடுத்திருந்தது. பாகிஸ்தான் இத்தொடரில் தோல்வியடைந்த போதிலும் சம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் முதற்கட்ட போட்டியொன்றில் இலங்கை அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளால் போராடி வெற்றி பெற்ற அவர்கள் இலங்கையையும் அத்தொடரிலிருந்து வெளியேற்ற காரணமாக அமைந்தனர். இது பாகிஸ்தானை எந்த நிலையிலும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு தக்க சான்றாக அமைகின்றது.

 இலங்கை அணி

இந்த ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் உபுல் தரங்க தலைமையிலான இலங்கை சில முக்கிய வீரர்களை இழந்து காணப்படுகின்றது. காயம் காரணமாக அஞ்செலோ மெதிவ்ஸ், ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இந்த ஒரு நாள் தொடரில் பங்கேற்கவில்லை. இவர்கள் இருவரும் சிறந்த ஒரு நாள் பதிவினை அண்மைய நாட்களில் காட்டியிருந்தனர். இன்னும் லசித் மாலிங்கவுக்கும் இலங்கையின் ஒரு நாள் குழாமில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

எனவே ஒரு இளம் வீரர்கள் அடங்கிய அனுபவம் குறைந்த இலங்கை அணியே பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது. இருக்கும் வீரர்களில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை வலுப்படுத்த நிரோஷன் திக்வெல்ல மற்றும் உபுல் தரங்க ஆகிய வீரர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். இவ்வருடத்தில் ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை (708) குவித்திருக்கும் நிரோஷன் திக்வெல்ல தனது வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க இல்லாத காரணத்தினால் அணித் தலைவர் உபுல் தரங்கவுடன் இணைந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வர எதிர்பார்க்க முடியும். அனுபவமிக்க உபுல் தரங்க இவ்வருடத்தில் சிறந்த ஓட்ட சராசரியைக் (47.21) காட்டியிருந்தார்.

அத்தோடு இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பு மூலம் இரண்டு அரைச் சதங்களை விளாசி சிறப்பு ஆட்டத்தைக் காட்டிய லஹிரு திரிமான்ன அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்க முடியும். இன்னும் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். நல்ல துடுப்பாட்டத்தை டெஸ்ட் தொடரில் காட்டியிருக்கும் அவரின் மூலமும் இலங்கை அணிக்கு ஒரு நாள் தொடரில் பிரயோசனங்களை எதிர்பார்க்க முடியும்.

உபுல் தரங்க

இலங்கை அணியின் பந்து வீச்சு துறையை எடுத்துப்பார்க்கும் போது இளம் சுழல் வீரர் அகில தனஞ்சய இந்திய அணியுடனான அண்மைய ஒரு நாள் தொடரில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்தார். அவரோடு சேர்த்து அணியில் மீண்டும் இணைக்கப்பட்ட சீக்குகே பிரசன்ன அணியில் சுழல் துறையை முன்னெடுக்க முடியும். வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் பாகிஸ்தானின் முன்வரிசை வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அகில தனஞ்சய

 

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க (அணித் தலைவர்), குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன, மிலிந்த சிறிவர்தன, திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன, அகில தனஞ்சய, சுரங்க லக்மால்நுவன் பிரதீப்

பாகிஸ்தான் அணி

சர்பராஸ் அஹ்மட் தலைமையிலான பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் காயமடைந்த  மொஹமட் அமீரை ஒரு நாள் தொடரில் இழந்துள்ளது. இளம் வீரர்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான் அணிக்கு இளம் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்கர் ஸமான் ஓட்டங்களை விரைவாக சேர்த்து உறுதுணையாக காணப்படுவார் என நம்பப்படுகின்றது.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஆறாம் இடத்துக்கு முன்னேறிய இலங்கை

தமது சொந்த மைதானத்தில் வைத்து இலங்கையுடனான டெஸ்ட் தொடரினை பறிகொடுத்திருக்கும்..

இன்னும் பாபர் அசாம் இறுதியாக பாகிஸ்தானுக்காக தான் விளையாடிய 10 ஒரு நாள் போட்டிகளிலும் மொத்தமாக 418 ஓட்டங்களைக் குவித்து 59.71 என்கிற ஓட்ட சராசரியைக் காட்டியிருக்கின்றார். அத்தோடு பாகிஸ்தான் அணியின் மூத்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மொஹமட் ஹபீஸ் இலங்கை அணிக்கெதிராக ஆடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். இதுவரையில் இலங்கைக்கு எதிராக ஹபீஸ் 24 போட்டிகளில் விளையாடி 601 ஓட்டங்களைக் குவித்து சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்த இந்த இரண்டு வீரர்களையும் இலங்கை பந்துவீச்சாளர்கள் சரியாகக் கையாள வேண்டும்.

பாபர் அசாம் – Courtsey – getty images

இன்னும் மற்றுமொரு அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான சொஹைப் மாலிக் மற்றும் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் ஆகியோர் அணியின் மத்திய வரிசைக்கு உறுதி தரக்கூடியவர்கள்.

பாகிஸ்தான் அணி முக்கியமாக வேகப்பந்து வீச்சாளர்களையே நம்பியுள்ளது. இளம் வீரர்களான ஹசன் அலி, ஜூனைத் கான் போன்ற வீரர்கள் அவர்களது அணிக்கு பலம் சேர்க்க கூடியவர்கள். வெறும் 23 வயதேயான ஹசன் அலி 21 ஒரு நாள் போட்டிகளில் இதுவரையில் பாகிஸ்தானுக்காக விளையாடி இதுவரையில் 42 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

ஹசன் அலி-Courtsey -getty images

மேலும் பாகிஸ்தானுக்கு அமீர் இல்லாதது ஒரு பாரிய இழப்பாகும். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அமீரின் பதிவுகள் சிறப்பானவை. பாகிஸ்தானின் சுழல் துறையினை சதாப் கான் மற்றும் இமாத் வஸீம் ஆகிய வீரர்கள் முன்னெடுப்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியும்.

எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி அஹ்மட் ஷேசாத், பக்கர் ஸமான், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக், சர்பராஸ் அஹ்மட் (அணித் தலைவர்), இமாத் வஸீம், சதாப் கான், ஹசன் அலி, ருமான் ரயீஸ், ஜூனைத் கான்

இனி இந்த இந்த ஒரு நாள் தொடரிலும், இலங்கை டெஸ்ட் தொடரில் காட்டிய அதே போராட்டத்தைக் காட்டி சிறப்பாக செயற்படுமா? அல்லது பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் தோல்விகளுக்கு இலங்கை அணிக்கு தகுந்த பதிலடி தருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.