ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டியில் இலங்கை அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கும் பாகிஸ்தான், மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.  

தோல்விகளால் தலைமைப் பதவியிலிருந்து விலகமாட்டேன் – தரங்க

அபுதாபி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான T-20 போட்டிகளுக்காக விஷேடமாக அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை அணியில் இந்தப் போட்டிக்காக நீண்ட காலத்தின் பின்னர் துடுப்பாட்ட வீரர் மஹேல உடவத்த அழைக்கப்பட்டிருந்ததோடு, இளம் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரமவும்  தனது கன்னி T-20 போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருந்தார்.

இவர்களோடு, போட்டித் தடையினைப் பெற்றிருந்த தனுஷ்க குணத்திலக்கவும் அணிக்கு திரும்பியிருந்தார். இன்னும், இப்போட்டி மூலம் திசர பெரேரா இலங்கை T-20 அணியின் 9ஆவது தலைவராக பொறுப்பேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக தமது துடுப்பாட்டத்தினை ஆரம்ப வீரர்களான தனுஷ்க குணத்திலக்க மற்றும் தில்ஷான் முனவீர ஆகியோருடன் தொடங்கிய இலங்கை அணிக்கு போட்டியின் மூன்றாவது பந்திலேயே இமாத் வஸீம் அதிர்ச்சியளித்தார். இதனால் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக போல்ட் செய்யப்பட்ட தில்ஷான் முனவீர ஓட்டமேதுமின்றி மைதானத்திலிருந்து நடந்தார்.

மோசமான ஆரம்பத்தினை இலங்கை பெற்றிருப்பினும் அதனை கருத்திற்கொள்ளாது அதிரடியாக ஆடிய தனுஷ்க குணத்திலக்க அணியின் ஓட்டங்களை விரைவாக அதிகரித்திருத்தார். எனினும்  பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கானினால் அவரது இன்னிங்ஸ் 18 ஓட்டங்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஒரு நாள் தொடரில் இலங்கையை வைட் வொஷ் செய்த பாகிஸ்தான்

இலங்கை அணியின் மத்தியவரிசை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் மிகவும் நெருக்கடிக்குள்ளாகியது. மஹேல உடவத்த, சஜித் பத்திரன, தசுன் சானக்க ஆகிய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 68 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்கு சென்றது. இந்நிலையில் களமிறங்கிய அணித் தலைவர் திசர பெரேராவும் இலங்கை அணிக்கு கைகொடுக்கவில்லை.

எனினும், இறுதியில் போராட்டத்தினை காட்டிய சீக்குகே பிரசன்னவினால் சரிவில் இருந்து சற்று மீண்டு கொண்ட இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 102 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சீக்குகே பிரசன்ன 2 சிக்ஸர்கள் அடங்கலாக 23 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழக்காது நின்றிருந்ததோடு சதீர சமரவிக்ரமவும் அதே ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு மொஹமட் ஹபீஸ் மற்றும் உஸ்மான் கான் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து, இலகு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 103 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி, ஆரம்பத்தில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஒரு தடுமாற்றத்தினை காண்பித்திருப்பினும் சொஹைப் மலிக்கின் சிறப்பாட்டத்தினால் வெற்றி இலக்கினை 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் டீஜேய் லங்கா, எல்.பி பினான்ஸ் அணிகள்

பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தில் அவ்வணியினை வெற்றிப்பாதையில் வழிநடாத்திய அனுபவ வீரர் சொஹைப் மலிக் மொத்தமாக 31 பந்துகளில் 4 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்ததோடு, முன்னாள் தலைவர் மொஹமட் ஹபீசும் 25 ஓட்டங்களுடன் அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான விக்கும் சஞ்சய 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிறப்பான பந்துவீச்சிற்காக உஸ்மான் கானுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T-20 போட்டி இதே மைதானத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெறும்.  

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 102/10  (18.3) சீக்குகே பிரசன்ன 23*(23), சதீர சமரவிக்ரம 23(23), ஹசன் அலி 26/3(3.3), மொஹமட் ஹபீஸ் 10/2(2), உஸ்மான் கான் 20/2(4)

பாகிஸ்தான் –  103/3 (17.2) சொஹைப் மலிக் 42(31)*, மொஹமட் ஹபீஸ் 25(23)*, விக்கும் சஞ்சய 20/2(4)

போட்டி முடிவு – பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்களால் வெற்றி