சபீக், சர்பராஸ் ஆகியோரின் போராட்டத்தால் பாகிஸ்தான் உயிர்ப்பான நிலையில்

496

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றுவரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் (9) நிறைவில் அசாத் சபீக் மற்றும் சர்பராஸ் அஹ்மட் ஆகியோரின் வலுவான இணைப்பாட்டத்தோடு பாகிஸ்தான் தமது வெற்றி இலக்கான 317 ஓட்டங்களை அடையும் பயணத்தில் ஒரு சிறந்த நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை பந்து வீச்சாளர்களால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தான்

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது தமது இரண்டாவது இன்னிங்சில் வஹாப் ரியாஸின் அதிரடிப்பந்து வீச்சினால் இலங்கை அணி 14.3 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 34 ஓட்டங்களைப்பெற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டிருந்தது. களத்தில் குசல் மெண்டிஸ் 8 ஓட்டங்களுடன் நின்றிருந்தார்.

போட்டியின் நான்காம் நாளில் பாகிஸ்தானை விட 254 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சை இலங்கை ஆரம்பித்தது.

மூன்றாம் நாள் போன்று அல்லாது இன்றைய நாளில் சிறந்ததொரு துடுப்பாட்டத்தை எதிர்பார்த்த இலங்கை அணியை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கியிருந்தனர்.

ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக களம் நுழைந்த நிரோஷன் திக்வெல்ல நல்லதொரு ஆரம்பத்தைக் காட்டியிருப்பினும் வஹாப் ரியாஸின் வேகத்துக்கு இரையாகி 21 ஓட்டங்களுடன்  மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தார்.  

திக்வெல்லவை அடுத்து தில்ருவான் பெரேரா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே யாசிர் ஷாஹ்வினால் LBW முறையில் வீழ்த்தப்பட்டார். இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை அணி 60 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து மிகவும் மோசமான நிலைக்கு மாறியது.

இலங்கை அணி மிகவும் இக்கட்டான நிலையில் காணப்பட்ட காரணத்தினால் எதிரணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்கும் நோக்கோடு களத்தில் நின்ற குசல் மெண்டி மற்றும் ரங்கன ஹேரத் துரித கதியிலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

35 ஓட்டங்கள் வரையில் நீடித்த இவர்களின் இணைப்பாட்டம் இந்த இன்னிங்சின் 26ஆவது ஓவரை வீசிய ஹரிஸ் சொஹைலின் சுழலினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அணியின் 8ஆவது விக்கெட்டாக ரங்கன ஹேரத் 17 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். ஹரிஸ் சொஹைல் இலங்கையின் இறுதி இரண்டு விக்கெட்டுகளையும் அதே ஓவரிலேயே வீழ்த்த முடிவில் இலங்கை அணி 26 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களை 4 பவுண்டரிகள் அடங்கலாக பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில், வஹாப் ரியாஸ் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஹரிஸ் சொஹைல் வெறும் ஒரு ஓட்டத்துக்கு 3 விக்கெட்டுகளையும், யாசிர் ஷாஹ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கையுடனான ஒரு நாள் தொடரிலிருந்து ஆமிர் விலகல்

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 317 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனைப் பெற பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்சை ஷான் மசூத் மற்றும் சமி அஸ்லம் ஆகிய தொடக்க வீரர்களுடன் பாகிஸ்தான் ஆரம்பித்தது.

பாகிஸ்தானின் இரண்டாம் இன்னிங்சின் முதல் ஓவரிலேயே விக்கெட் ஒன்று இலங்கை அணிக்கு சுரங்க லக்மாலின் ஓவரின் மூலம் கிட்டியிருந்தது. எனினும் மூன்றாம் நடுவரின் தலையீட்டினால் அந்த ஆட்டமிழப்பு நிராகரிக்கப்பட்டது.

எனினும் நான்காவது ஓவரில் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான லஹிரு கமகே  குசல் மெண்டிசின் அருமையான பிடியெடுப்போடு பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இதனால், ஒரு ஓட்டத்துடன் சமி அஸ்லம் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பதற்றமான ஆரம்பத்தைக் காட்டிய பாகிஸ்தான் தொடர்ந்து போட்டியின் தேநீர் இடைவேளை வரை நிதானமாக ஆடி மேலதிக விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டிருந்தது.

தேநீர் இடைவேளையை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அசார் அலியின் விக்கெட்டை நுவன் பிரதீப் கைப்பற்றியிருந்தார். இதனால் அசார் அலியின் இன்னிங்ஸ் 17 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.

மேலும் தில்ருவான் பெரேரா இந்த இடைவெளியில் பாகிஸ்தானுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்திருந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷான் மசூத் உடன் சேர்த்து முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான ஹரிஸ் சொஹைல் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் பிரகாசிக்காத நிலையில் பெரேராவினால் வீழ்த்தப்பட்டிருந்தனர்.

இதனால் ஒரு கட்டத்தில் 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் தடுமாறியிருந்தது. இதன் போது களத்தில் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் மற்றும் அசாத் சபீக் ஆகிய வீரர்கள் நின்றிருந்தனர்.

இரண்டு வீரர்களும் தமது அணிக்கு ஏற்பட்ட அழுத்தங்களை கருத்திற்கொண்டு பொறுமையான முறையில் ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினர்.  இதன் காரணமாக பாகிஸ்தான் அணி இராப்போசணம் வரை மேலதிக விக்கெட் எதனையும் பறிகொடுக்கவில்லை.

போட்டியின் இராப்போசணத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் இரண்டு வீரர்களும் சிறப்பான முறையில் செயற்பட்டு ஆறாம் விக்கெட்டுக்காக 146 ஓட்டங்களை போட்டியின் ஆட்ட நேர நிறைவு வரை பகிர்ந்திருந்தனர். இவர்களது இந்தபோராட்டமான இணைப்பாட்ட உதவியினால் பாகிஸ்தான் அணி போட்டியின் நான்காம் நாள் நிறைவில் 73 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அத்தோடு பாகிஸ்தான் அணிக்கு இன்னும் வெற்றி பெற 119 ஓட்டங்களே தேவையாக உள்ளது.

அரைச்சதங்களை பூர்த்தி செய்தவாறு காணப்படும் அசாத் சபீக் 86 ஓட்டங்களுடனும், சர்பராஸ் அஹ்மட் 57 ஓட்டங்களுடனும் களத்தில் காணப்படுகின்றனர்.

போட்டியின் இறுதி இடைவெளியில் விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்ற முடியாத இலங்கை அணியின் பந்துவீச்சில் தில்ருவான் பெரேரா முன்னர் சிறப்பாக செயற்பட்டு மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 482 (159.2) – திமுத் கருணாரத்ன 196(405), தினேஷ் சந்திமால் 62(195), தில்ருவான் பெரேரா 58(76), நிரோஷன் திக்வெல்ல 52(53), சதீர சமரவிக்ரம 38(35), யாசிர் ஷாஹ் 184/6(55.5), மொஹமட் அப்பாஸ் 100/2(33)

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 262 (90.3) – அசார் அலி 59(128), ஹரிஸ் சொஹைல் 56(135), சமி அஸ்லம் 39(71), தில்ருவான் பெரேரா 72/3(26), ரங்கன ஹேரத் 84/3(23), சுரங்க லக்மால் 41/2 (17.3), லஹிரு கமகே 38/2 (15)

இலங்கை (இரண்டாம் இன்னிங்ஸ் ) – 96 (26) – குசல் மெண்டிஸ் 29(49), நிரோஷன் திக்வெல்ல 21(21), வஹாப் ரியாஸ் 41/1, ஹரிஸ் சொஹைல் 1/3, யாசிர் ஷாஹ் 47/2

பாகிஸ்தான் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 198/5 (73) – அசாத் சபீக் 86*(141), சர்பராஸ் அஹ்மட் 57*(113), தில்ருவான் பெரேரா 76/3(21)

போட்டியின் ஐந்தாவது மற்றும் இறுதியுமான நாள் நாளை தொடரும்