த்ரில்லர் வெற்றியுடன் T-20 தொடரினையும் கைப்பற்றிய பாகிஸ்தான்

278

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T-20 தொடரின் இரண்டாம் போட்டியில் 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கும் பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக அபுதாபி ஷேய்க் செய்யத் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் ளத்தடுப்பினை தேர்வு செய்திருந்தார்.

ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரில் மஹ்ரூப் தலைமையில் இலங்கை அணி

ஹொங்கொங்கின் கௌலூன் கிரிக்கெட்…

பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரண்டு அணிகளும் இந்தப் போட்டிக்காக எந்தவித மாற்றங்களையும் தங்களது குழாங்களில் மேற்கொள்ளாது களமிறங்கியிருந்தன.

தொடர்ந்து துடுப்பாட மைதானம் விரைந்த இலங்கை அணிக்கு தில்ஷான் முனவீர மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் நல்லதொரு ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர். எனினும் இமாத் வஸீமின் ரன் அவுட்டினால் முனவீரவின் இன்னிங்ஸ் துரதிர்ஷ்டவசமாக 19 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.

இதையடுத்து களம் நுழைந்த சதீர சமரவிக்ரம தனுஷ்க குணத்திலக்கவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டியெழுப்பியிருந்தார். இரண்டு வீரர்களினாலும் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 63 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டிருந்தது. தொர்ந்து மீண்டும் ஒரு ரன்அவுட் மூலம் சதீர விக்ரம இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை திரும்ப வேண்டி ஏற்பட்டது. ஆட்டமிழக்கும் போது சமரவிக்ரம 31 பந்துகளில் 2 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 32 ஓட்டங்களினை சேர்த்திருந்தார்.

சமரவிக்ரமவினை அடுத்து சில வினாடிகளிலேயே சதாப் கானின் சுழலில் தனுஷ்க குணத்திலக்க வீழந்தார். இப்போட்டி மூலம் தனது கன்னி T-20 அரைச்சதத்தினை கடந்த குணத்திலக்க மொத்தமாக 48 பந்துகளில் 4 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 51 ஓட்டங்களினை குவித்து சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி தமது மூன்றாம் விக்கெட்டினை அடுத்து தமது மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களை ஓற்றை இலக்க ஓட்டங்களுடன் பறிகொடுத்தது. தொடர்ந்து போட்டியின் 19 ஆவது ஓவரினை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பாஹிம் அஷ்ரப்பினால் பெறப்பட்ட ஹட்ரிக் மூலம் இலங்கை மேலும் நெருக்கடிக்குள்ளாகியது.

முடிவில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணியானது 124 ஓட்டங்களினை  பெற்றுக் கொண்டது.

பின்வரிசையில் மோசமாக செயற்பட்ட இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் மூன்று வீரர்கள் மாத்திரமே இரு இலக்க ஓட்டங்களை பெற்றிருந்ததோடு இலங்கை அணி தமது இறுதி 8 விக்கெட்டுக்களையும் 13 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மலிக், ஹசன் அலியின் சிறப்பாட்டத்தினால் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அவ்வணிக்காக T-20 போட்டிகளில் முதற்தடவையாக ஹட்ரிக் ஒன்றினை கைப்பற்றியிருந்த பாஹிம் அஷ்ரப் மொத்தமாக 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும்,  ஹசன் அலி  2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 125 ஓட்டங்களினை பெற பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி நல்லதொரு ஆரம்பத்தினை காட்டியிருந்த போதிலும் இலங்கை அணியின் சிறந்த பந்து வீச்சினால் ஒரு கட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

சிறிது நேரம் போராடிய அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் அவர்களது அணிக்கு நல்லதொரு இணைப்பாட்டம் (39) ஒன்றினை வழங்கி அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டிருந்தனர்.

எனினும் இக்கணத்தில், இலங்கை அணித்தலைவர் திசர பெரேராவின் கூர்மையான வியூகத்தினாலும், இலங்கை அணியின் சிறந்த களத்தடுப்பினாலும் பாகிஸ்தானின் பின்வரிசை விக்கெட்டுக்கள் விரைவாக வீழ்த்தப்பட்டிருந்தன.

இதனால், போட்டியின் வெற்றிவாய்ப்பு இலங்கை அணிக்கு சாதமாகியிருந்தது. வெற்றிபெற  இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் பாகிஸ்தானுக்கு தேவைப்பட அந்த வெற்றி ஓட்டங்களை இளம் வீரர் சதாப்கானின் மூலம் பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது. முடிவில் விறுவிறுப்பான இந்தப்போட்டியில் 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் 125 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்து கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் 28 ஓட்டங்களினை குவித்திருந்தார். அதோடு சதாப் கானும் வெறும் 8 பந்துகளில் 16 ஓட்டங்களினை விளாசி தனது அணிக்கு வெற்றி வாய்ப்பினைப் பெற்றுத்தந்ததோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் அணித்தலைவர் திசர பெரேரா 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு அணிகளுக்குமான மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டி பாகிஸ்தானின் லாஹூரில் (29) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 124/9 (20) தனுஷ்க குணத்திலக்க 51(48), சதீர சமரவிக்ரம 32(31), பாஹிம் அஷ்ரப் 16/3(3), ஹசன் அலி 31/2(4)

பாகிஸ்தான் – 125/8 (20) சர்பராஸ் அஹ்மட் 28(26), திசர பெரேரா 24/3(4)

போட்டி முடிவு பாகிஸ்தான் 2 விக்கெட்டுக்களால் வெற்றி