இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு எந்தவகையிலும் எதிர்பார்த்தவிதமாக அமையவில்லை. அடுத்தடுத்த வைட் வொஷ் தோல்விகள், பெறுமதிமிக்க வீரர்களின் உபாதைகள், ஏழு தடவைகளுக்கு மேலாக அணித் தலைவர் மாற்றங்கள் போன்ற விடயங்கள் அனைத்தும் இலங்கை கிரிக்கெட் ஒரு ஸ்தீர நிலையில் இல்லாது இருப்பதனையே காட்டுகின்றது.

தோல்விகளால் தலைமைப் பதவியிலிருந்து விலகமாட்டேன் – தரங்க

2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றை பார்த்தால் ஒரு முறை …

எனினும் இந்த வருடத்தில் ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் என்பவற்றோடு ஒப்பிடும் போது T-20 போட்டிகளில் இலங்கை அணியின் அடைவுகள் நல்ல நிலையிலேயே காணப்படுகின்றன.

இவ்வாறாக காணப்படும் இலங்கை அணிக்கு  பாகிஸ்தானுடன் வியாழக்கிழமை (26) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடர் மற்றுமொரு சவாலாக காணப்படுகின்றது.

இலங்கைபாகிஸ்தான் T-20 போட்டிகள் வரலாறு

ஆசியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்களான இந்த இரண்டு நாடுகளும் குறைந்த ஓவர்கள் கொண்ட இவ்வகைப் போட்டிகளில் முதற்தடவையாக 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற T-20 உலகக் கிண்ணத்தில் மோதியிருந்தன.

குறித்த அப்போட்டியில் 33 ஓட்டங்களால் இலங்கை அணியினை பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தது. அதேவருடத்தில் கனடாவின் ஒன்டோரியோ நகரில் இடம்பெற்ற போட்டியில் மஹேல ஜயவர்தன தலைமையிலான இலங்கை தரப்பு பாகிஸ்தானை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அவ்வணிக்கு எதிரான தமது முதல் வெற்றியினை சுவைத்திருந்தது.

இதுவரையில் இரண்டு அணிகளும் மொத்தமாக 15 T-20 போட்டிகளில் மோதியுள்ளதோடு அதில் 10 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதோடு இலங்கை அணி 5 போட்டிகளை கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானும், இலங்கையும் 2016ஆம் ஆண்டின் ஆசிய கிண்ண சம்பியன்ஷிப் தொடரில் இறுதியாக T-20 போட்டியொன்றில் சந்தித்தித்திருந்தன. குழுநிலைப் போட்டியாக அமைந்த அந்த ஆட்டத்தில் இலங்கை அணியினை பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்களால் வீழத்தியிருந்தது.

துயரத்தின் உச்சத்தை அனுபவிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரை முழுமையாக இழந்ததன் மூலம் ஒரு நாள் தொடரொன்றில் …

அணிகளது அண்மைய ஆட்டங்களின் நிலவரங்கள்

கடந்த 2014ஆம் ஆண்டின் T-20 உலக சம்பியன்களான இலங்கை அணியினர் கடந்த வருடத்தில் (2016) தாம் விளையாடிய போட்டிகளில் 18.75%  வெற்றியை மாத்திரமே காட்டியிருந்தனர். இது அவ்வாண்டில் கிரிக்கெட் அணியொன்றினால்  காட்டப்பட்ட மிகவும் மோசமான பதிவாக அமைந்திருந்தது. இதனால் T-20 தரவரிசையிலும் முதலிடத்தில் நீண்ட காலமாக நீடித்த இலங்கை அணி அதனை பறிகொடுத்து தற்போது 8ஆம் இடத்தில் காணப்படுகின்றது.

எனினும் இலங்கை அணியினை பொறுத்தவரையில் இந்த வருடம் T-20 போட்டிகளில் அவ்வளவு மோசமாக அமைந்திருக்கவில்லை. இந்த வருடம் மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் இலங்கை அவற்றில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது. அதோடு தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற திறமைமிக்க அணிகளுடனான T-20 தொடர்களையும் இலங்கை கைப்பற்றியிருக்கின்றது.

இவை இலங்கை அணி இந்த வருடத்தில் T-20 போட்டிகளில் முன்னேற்றத்தினை காண்பித்து வருவதையே காட்டுகின்றது. எனவே இத்தொடரிலும் இலங்கை பாகிஸ்தானுக்கு சவால் தருவதை எதிர்பார்க்க முடியும்.

இதேவேளை, T-20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் பாகிஸ்தானும் எதனையும் எதிர்பார்த்து கூறமுடியாத ஒரு அணியாக காணப்படுகின்றது. ஏனெனில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில்  இலங்கையினால் வைட் வொஷ் செய்யப்பட்ட அவர்கள், ஒரு நாள் தொடரில் இலங்கை அணியினை வைட் வொஷ் செய்து அதற்காக பதிலடி தந்திருந்தனர்.

மேலும், இவ்வருடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, உலக பதினொருவர் அணி ஆகிவற்றுக்கு எதிராக தாம் பங்குபற்றிய இரண்டு தொடர்களிலும் சிறப்பாக செயற்பட்ட பாகிஸ்தான் அணி அவற்றைக் கைப்பற்றியிருந்தது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை …

2016ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 22 போட்டிகளில் ஆடியிருக்கும் பாகிஸ்தான் அவற்றில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது. இன்னும் தமது இரண்டாம் தாயகமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் எப்போதும் பலமாகவே காணப்படும்.

இந்த விடயங்கள் அனைத்தும் இலங்கை  அணிக்கு  பாகிஸ்தான் மிகவும் கடினமாக அமையும் என்பதையே உணர்த்துகின்றது.

இலங்கை அணி

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரின் இறுதிப் போட்டி பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டினை மீளக்கொண்டுவரும் நோக்கோடு லாஹூர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அந்நாட்டில் பாதுகாப்புக் காரணங்களை கருதி இலங்கை அணி வீரர்கள் சிலர் தொடரின் மூன்றாவது போட்டியில் விளையாட மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

எனினும், மூன்று போட்டிகளிலும் விளையாட சம்மதம் தெரிவிப்பவர்களையே இந்த T-20 தொடருக்காக அறிவிப்போம் எனக் கூறியிருந்த இலங்கை கிரிக்கெட் வாரியம், தற்போது திசர பெரேரா தலைமையிலான இளம் வீரர்கள் உள்ளடங்கிய குழாமொன்றினை அறிவித்துள்ளது.

பெரும்பாலான அறிமுக வீரர்களுடன் காணப்படும் இந்த இலங்கை குழாத்தில் நடத்தைவிதி மீறல் காரணமாக போட்டித் தடையினைப்பெற்ற தனுஷ்க குணத்திலக்க இந்த T-20 தொடர் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் மறுபிரவேசத்தினை மேற்கொள்ளவுள்ளார். நிரோஷன் திக்வெல்ல இத்தொடரில் இலங்கை அணிக்காக இடம்பெறாததன் காரணமாக தனுஷ்க குணதிலக்க இலங்கை அணியின் ஆரம்ப வீரராக களமிறங்க எதிர்பார்க்க முடியும்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை இத்தொடரில் வலுப்படுத்த மற்றொரு வீரராக ஆரம்ப வீரர் தில்ஷான் முனவீரவினை எதிர்பார்க்க முடியும். அதிரடி வீரர்களில் ஒருவரான முனவீர இறுதியாக இந்தியாவுடன் நடைபெற்ற T-20 போட்டியில் அரைச்சதம் ஒன்றினை விளாசி  (53) இலங்கை அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.

இன்னும் தசுன் சானக்க, அணித் தலைவர் திசர பெரேரா ஆகியோர் அணியின் மத்தியவரிசையினை பலப்படுத்தக்கூடியவர்கள். உலக பதினொருவர் அணி சார்பாக  கடந்த மாதம் பாகிஸ்தானில் விளையாடியிருந்த திசர பெரேரா மொத்தமாக 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தோடு பாகிஸ்தானுக்கு எதிரான அந்த மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் 96 ஓட்டங்களினையும் குவித்திருந்தார்.

இன்னும் அணியில் காணப்படும் இசுரு உதான, சீக்குகே பிரசன்ன போன்ற வீரர்கள் விரைவாக ஓட்டங்கள் சேர்க்கக் கூடியவர்கள் என்பதோடு இலங்கை அணியின் பந்துவீச்சிலும் பெறுமதி சேர்க்கக் கூடியவர்கள்.

லஹிரு கமகே, விக்கும் சஞ்சய, ஜெப்ரி வன்டர்சேய், விஷ்வ பெர்னாந்து ஆகிய வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சினை இத்தொடரில் முன்னெடுக்கவுள்ளனர். இவர்களில் T-20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினைப் பெறாத லஹிரு கமகே பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரில் சிறப்பான பந்துவீச்சினை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இளம் வீரர்களுடன் காணப்படும் இலங்கை அணி பாகிஸ்தானை என்ன செய்யும் என்பதை நாம் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

தில்ஷான் முனவீர, தனுஷ்க குணத்திலக்க, சதீர சமரவிக்ரம, திசர பெரேரா (அணித் தலைவர்), தசுன் சானக்க, சீக்குகே பிரசன்ன, இசுரு உதான, ஜெப்ரி வன்டர்சேய், லஹிரு கமகே, விஷ்வ பெர்னாந்து

பாகிஸ்தான் அணி

சர்பராஸ் அஹ்மட் தலைமையிலான பாகிஸ்தான் அணி தமது வழமையான T-20 வீரர்களுடன் இலங்கையினை எதிர்கொள்கின்றது. அனுபவமிக்க அஹ்மத் ஷேசாத் பாகிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்டத்தினை பலப்படுத்தக்கூடிய ஒருவர். இதுவரையில் 1,300 இற்கு மேலான ஓட்டங்களினை T-20 போட்டிகளில் கடந்திருக்கும் ஷேசாத் மொத்தமாக ஒரு சதத்துடன் 7 அரைச் சதங்களினையும் பெற்றிருக்கின்றார்.

பாகிஸ்தான் அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விசேட நிபுணராக செயற்படும் பாபர் அசாமும் இலங்கை அணிக்கு நெருக்கடி தரக்கூடிய மற்றொரு வீரராக அமைகின்றார். இந்த வருடத்தில் T-20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (316) குவித்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் காணப்படும் அசாம், உலக பதினொருவர் அணிக்கெதிராக நடைபெற்ற சுதந்திர கிண்ண T-20 தொடரில் அதிக ஓட்டங்கள் (179) சேர்த்தமைக்காக தொடர் நாயகன் விருதினையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் அணித் தலைவர் சர்பராஸ் அஹ்மட், சொஹைப் மலிக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரின் துடுப்பாட்டத்துடன் பாகிஸ்தான் தமது மத்தியவரிசையினை மேலும் பலப்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியும்.

துயரத்தின் உச்சத்தை அனுபவிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரை முழுமையாக இழந்ததன் மூலம் ஒரு நாள் தொடரொன்றில்…

பாகிஸ்தானின் பந்துவீச்சினை எடுத்துப்பார்க்கும் போது காயத்தில் இருந்து மீண்டிருக்கும் மொஹமட் அமீர் கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் T-20 போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றுள்ளார். அதோடு இலங்கை அணியினை ஒரு நாள் தொடரில் வைட்-வொஷ் செய்ய முக்கிய காரணமாக அமைந்த ஹசன் அலியினையும் பாகிஸ்தான் கொண்டிருக்கின்றது. இந்த வீரர்களினால் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சுத்துறை இத்தொடரில் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னும் சுழல் வீரர்களாக ஒரு நாள் தொடரில் இலங்கைக்கு நெருக்கடி தந்த  சதாப் கான், இமாத் வஸீம் போன்ற வீரர்களும் பாகிஸ்தானுக்கு  பந்துவீச்சுத் துறையில் மேலும் வலுச்சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, இந்த பலமிக்க பாகிஸ்தான் குழாம் இலங்கை அணிக்கு ஒரு நாள் தொடர் போன்று மிகவும் சவால் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

பக்கார் ஷமான், அஹ்மட் ஷேசாத், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக், சர்பராஸ் அஹ்மட், இமாத் வஸீம், சர்பராஸ் அஹ்மட்(அணித் தலைவர்), சதாப் கான், மொஹமட் அமீர், ஹசன் அலி

இலங்கை கிரிக்கெட்டில் இருண்ட காலமாக மாறியிருக்கும் 2017ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடனான இத்தொடர் மூலம் இலங்கை ஒளியினை தேடுமா? இல்லை தொடர்ந்தும் இதே நிலைமையே நீடிக்குமா என்பதை நாம் அறிய இந்த தொடர் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.