ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் பயிற்சி ஆட்டங்களில் ஒன்றாக நடைபெற்று முடிந்திருக்கும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மோதலில், துடுப்பாட்டத்தில் முழுத்திறமையினையும் வெளிப்படுத்தியிருந்த நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வெற்றி கொண்டது.

பர்மிங்ஹம் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியின் முடிவுகளிற்கு அமைவாக நியூசிலாந்தினால் முதலில் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்டடிருந்த இலங்கை அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக நிரோஷன் திக்வெல்ல மற்றும்  உபுல் தரங்க ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.

மெதிவ்ஸ், குணரத்னவின் ஆட்டம் வீண்: பயிற்சிப் போட்டியில் வென்றது அவுஸ்திரேலியா

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ்..

இலங்கை அணியின் இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் அதிரடியான துடுப்பாட்டம் மூலம் சிறப்பான ஆரம்பம் ஒன்றினை அணிக்கு பெற்றுத் தந்தனர். முதல் விக்கெட்டுக்காக 65 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டதுடன், முதல் விக்கெட்டாக வெளியேறியிருந்த நிரோஷன் திக்வெல்ல 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து இன்றைய போட்டியில் இலங்கை அணியின் தலைவராக செயற்படும் உபுல் தரங்கவுடன் ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் இரண்டாம் விக்கெட்டிற்காக வலுவான இணைப்பாட்டம் ஒன்றினை (98) வழங்கியிருந்ததோடு, அரைச்சதம் கடந்து 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார்.

மெண்டிஸ் ஆட்டமிழந்ததை அடுத்து, அரைச்சதம் கடந்த நிலையில் அணியினை கட்டியெழுப்பும் பணியில் முழுக்கவனமும் செலுத்தியிருந்த உபுல் தரங்கவுடன் கைகோர்த்த தினேஷ் சந்திமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் களத்தடுப்பிற்கு தொடர்ச்சியாக சேதம் விளைவிக்கத் தொடங்கியிருந்த உபுல் தரங்க, சதம் கடந்து இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை மிகவும் வலுவான நிலைக்கு இட்டுச் சென்றிருந்தார்.

நியூசிலாந்தின் பல பந்து வீச்சாளர்களிற்கு சவாலாக காணப்பட்டிருந்த உபுல் தரங்க முடிவில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் மெக்லெனகனின் பந்து வீச்சில் அடம் மில்னே இடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்கும் போது தரங்க, 104 பந்துகளில் 13  பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து தினேஷ் சந்திமால் பெற்றுக்கொண்ட அரைச்சதம் மற்றும் குசல் பெரேராவின் அதிரடி ஆட்டம் என்பவற்றின் துணையுடன், 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ஓட்டங்களைக் குவித்துக்கொண்டது.

[rev_slider ct17-dsccricket]

.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால், மொத்தமாக 46 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 55 ஓட்டங்களைப் பெற்றதோடு, குசல் பெரேரா 28 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை கட்டுப்படுத்துவதில் சிரமத்தினை எதிர்கொண்டிருந்த நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில், ட்ரென்ட் போல்ட் மற்றும் டிம் செளத்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து, சவாலான வெற்றி இலக்கான 357 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி, தமது முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் அபார ஆட்டம் மூலம் தமது வெற்றி இலக்கைத் தொடும் பயணத்தில் உறுதியான நிலை ஒன்றினை ஆரம்பத்திலேயே அடைந்து கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்திருந்த மார்ட்டின் கப்டில் வியக்கத்தக்க வகையிலான அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி சதமடித்தார். அதே போன்று, அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தன் பங்கிற்கான அதிரடியினை காட்டி அணியினை மேலும் வலுப்படுத்தியிருந்தார்.

இவர்களது இணைப்பாட்டம் மூலம் இரண்டாவது விக்கெட்டுக்காக 157 ஓட்டங்களை துரித கதியில் பகிர்ந்து கொண்ட நியூசிலாந்து அணி, வெற்றி இலக்கினை அண்மிக்கும் நிலைக்கு விரைவாக சென்று கொண்டது.

தொடர்ந்து மத்திய வரிசையில் வந்திருந்த கோயி அன்டர்சன்  மற்றும் நீல் ப்ரூம் ஆகியோர் இலங்கை பந்து வீச்சாளர்களை தமது அதிரடியின் மூலம் சிதைத்து, நியூசிலாந்து அணி, 46.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 359 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கினை அடைய உதவினர்.

வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் சதம் கடந்த மார்ட்டின் கப்டில் வெறும் 76 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 116 ஓட்டங்களினைப் பெற்றதோடு, கேன் வில்லியம்சன் 88 ஓட்டங்களினை 60 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாகப் பெற்றிருந்தார். இன்னும் போட்டியின் இறுதி வரை அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த கோயி அன்டர்சன் 36 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

எதிரணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தும் மிகவும் மோசமாக செயற்பட்டு தோல்வியடைந்த இலங்கை அணியின் பந்து வீச்சில், சுழல் பந்து வீச்சாளர் சீகுகே பிரசன்ன 63 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இத்தோடு சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான, அனைத்து பயிற்சிப் போட்டிகளும் நிறைவடைகின்றன. இலங்கை அணியானது தமது முதல் போட்டியாக, எதிர்வரும் சனிக்கிழமை (3) சம்பியன்ஸ் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 356/8 (50) – உபுல் தரங்க 110(104), குசல் மெண்டிஸ் 57(50), தினேஷ் சந்திமால் 55(46), குசல் பெரேரா 38(28), நிரோஷன் திக்வெல்ல 25(19), டிம் செளத்தி 48/2(8), ட்ரென்ட் போல்ட் 47/2(5)

நியூசிலாந்து – 359/4 (46.1) – மார்ட்டின் கப்டில் 116(76), கேன் வில்லியம்சன் 88(60), கோயி அன்டர்சன் 50*(36), டொம் லேதம் 44(49), நீல் ப்ரூம் 37*(38), சீக்குகே பிரசன்ன 63/2(10)

போட்டி முடிவு – நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி