ஹெட்ரிக் வெற்றியுடன் SABA சம்பியன்ஷிப் தொடரில் முன்னேறும் இலங்கை

114

பங்களாதேஷ் டாக்கா நகரில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் (SABA) போட்டியொன்றில் இலங்கை கூடைப்பந்து அணி மாலைதீவு அணியை 82-57 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி அதிரடியான வெற்றியொன்றை பெற்றிருக்கின்றது.

2021 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ண கூடைப்பந்தாட்ட தொடரின் தகுதிகாண் போட்டிகளின் ஒரு அங்கமாக அமைகின்ற தெற்காசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தமது முன்னைய போட்டிகளில் பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளை எதிர்த்தாடிய இலங்கை அணி அவற்றில் முறையே 65-34, 70-57 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கு இரண்டாவது வெற்றி

பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்றுவரும் தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன…

எனவே, தற்போது மாலைதீவுடனான வெற்றி இலங்கை கூடைப்பந்து அணிக்கு தொடரில் கிடைத்த ஹெட்ரிக் வெற்றியாக இருப்பதுடன், இத்தொடரில் எந்தவொரு தோல்வியும் இல்லாது முன்னேறும் அணியாகவும் இலங்கை மாறியிருக்கின்றது.

இத்தொடரில் மாலைதீவு அணியும் பூட்டான், நேபாளம் ஆகிய அணிகளுடன் தமது முன்னைய போட்டிகளில் தோல்வி எதனையும் சந்திக்காத காரணத்தினால் ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் செயற்பட்டிருந்தனர். எனினும், இதற்கு பதில் தாக்குதல் தந்த இலங்கை அணி போட்டியின் முதல் கால்பகுதியை 16-10 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டது.

தொடர்ந்த போட்டியின் இரண்டாம் கால்பகுதியில் இலங்கை அணியினர் ஆக்ரோஷமாக ஆடினர். இதனால், இரண்டாம் கால்பகுதியில் 27 புள்ளிகளை இலங்கை அணி பெற்றுக் கொண்டது. ஆனால் மாலைதீவு அணி 19 புள்ளிகளையே எடுத்தது. இதன்படி, ஆட்டத்தின் முதல் அரைப்பகுதி 43-30 என இலங்கை கூடைப்பந்து அணியின் முன்னிலையுடன் முடிவடைந்தது.

போட்டியின் மூன்றாம் கால்பகுதியில் பிரனித் உடுமலகலவின் சிறப்பான ஆட்டத்தினால் இலங்கை அணியின் புள்ளிகள் பெறும் வீதம் அதிகரித்தது. இந்த கால்பகுதியில் இலங்கை 28 புள்ளிகளை சேர்க்க மாலைதீவு அணியினர் இலங்கையின் தடுப்பைத் தாண்டி 11 புள்ளிகளை மாத்திரமே பெற்றனர். இதனடிப்படையில் போட்டியின் மூன்றாம் கால்பகுதியை ஆரோக்கியமான முன்னிலை ஒன்றுடன் இலங்கை வீரர்கள் 71-41 எகிற புள்ளிகள் அடிப்படையில் முடித்துக் கொண்டனர்.

இலங்கை பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் காணப்பட்ட காரணத்தினால், இலங்கை அணிக்கு ஆட்டத்தின் இறுதி கால்பகுதியில் கிடைத்த 11 புள்ளிகள் போட்டியின் வெற்றியாளர்களாக மாற போதுமாக இருந்தது. மாலைதீவு அணி 16 புள்ளிகளை இறுதி கால்பகுதியில் பெற்ற போதிலும் முன்னைய கால்பகுதிகளில் அவர்கள் விட்ட தவறுகள் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவ காரணமாகியிருந்தது.

இறுதியில், 82-57 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்களாக இலங்கை வீரர்கள் மாறினர்.

நுவரெலியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்டம்

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தேசிய ஒலிம்பிக் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒலிம்பிக் தின…

இலங்கை அணிக்காக இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்றுத்தந்த வீரராக திமோத்தி நிதுஷன் காணப்பட்டிருந்தார். திமோத்தியினால் 17 புள்ளிகள் இலங்கை அணிக்கு கிடைத்திருந்தது. திமோத்தி இத்தொடரில் இலங்கை அணி கடைசியாக (நேபாளத்துடன்) விளையாடிய போட்டியிலும் இலங்கை சார்பாக அதிக புள்ளிகளை சேர்த்த வீரராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிரடியான வெற்றிகளை பெற்றுக் கொண்டு தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் முன்னேறும் இலங்கை அணி, தமது அடுத்த போட்டியில் பூட்டானை நாளை (30)  எதிர்கொள்கின்றது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க