மலேசியாவுடனான த்ரில் வெற்றியுடன் தோல்வியுறாமல் முன்னேறும் இலங்கை அணி

525

தற்போது நடைபெற்று வரும் 11ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் கிண்ணப் பிரிவுக்கான (Cup Category) இரண்டாவது போட்டியில் மலேசியாவுக்கு எதிராக 62-59 என்கிற புள்ளிகள் கணக்கில் இலங்கை வலைப்பந்து அணி த்ரில்லர் வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.

தர்ஜினியின் சிறப்பட்டத்தால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி

தர்ஜினி சிவலிங்கத்தின் அபார ஆட்டத்துடன் இலங்கை வலைப்பந்து அணி, 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் கிண்ணப்…

நேற்று (4)  இடம்பெற்ற கிண்ணப் பிரிவுக்கான முதல் போட்டியில் சிங்கப்பூரினை தோற்கடித்த இலங்கை வலைப்பந்து அணியிடம் இருந்து இந்தப் போட்டியின் முதல் கால் பகுதியினை மலேசிய வீராங்கனைகள் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் கைப்பற்றினர். அந்த வகையில் போட்டியின் முதல் கால் பகுதி 15-13 என மலேசியாவின் முன்னிலையோடு நிறைவுற்றது.

எனினும், இரண்டாம் கால் பகுதியில் நடப்புச் சம்பியன் மலேசியாவின் தடுப்புக்களை தகர்த்து இலங்கை வலைப்பந்து அணிக்காக தர்ஜினி சிவலிங்கம் போராடினார். இதனால், போட்டியின் இரண்டாம் கால் பகுதி இலங்கை வலைப்பந்து அணியின் ஆதிக்கத்தோடு நிறைவுற்றது. இரண்டாம் கால் பகுதியில் இலங்கை வலைப்பந்து அணி 19 புள்ளிகளை எடுக்க, மலேசிய வீராங்கனைகள் 12 புள்ளிகளையே எடுத்திருந்தனர்.

பின்னர் இரண்டாம் கால் பகுதியில் பெற்ற ஆதிக்கத்தினால் போட்டியின் முதல் பாதி இலங்கை வலைப்பந்து அணியின் ஆதிக்கத்தோடு முடிந்தது.

முதல் பாதி: இலங்கை 32 – 27 மலேசியா

எனினும் போட்டியின் மூன்றாம் கால் பகுதியில் மலேசிய மங்கைகள் மீண்டெழுந்தனர். மூன்றாம் கால் பகுதியில் தர்ஜினியினை புள்ளிகள் எடுக்கும் பிராந்தியத்திற்கு அப்பால் வைக்க முயற்சி செய்த மலேசிய வலைப்பந்து அணியின் தடுப்புக் குழாம் அதில் வெற்றியும் கண்டது.

இதேநேரம் இலங்கை வலைப்பந்து அணி மூன்றாம் கால் பகுதியின் ஆரம்ப நிமிடங்களில் புள்ளிகள் பெறுவதற்காக தர்ஜினியிடம் பந்தினை பரிமாற்றுவதில் சில தவறுகளை விட்டிருந்த போதிலும், பின்னர் அவற்றை சரி செய்த காரணத்தினால் மூன்றாம் கால் பகுதியிலும் தமது முன்னிலையினை 48-42 என்கிற புள்ளிகள் கணக்கில் நீடித்தது.

இந்தியாவை துவம்சம் செய்த இலங்கை வலைப்பந்து அணி

சிங்கப்பூரில் நடைபெறும் 11ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி தனது B குழுவின் இரண்டாவது போட்டியில் …

தொடர்ந்து முன்னேறிய ஆட்டத்தில் கடும் முயற்சிகளின் மூலம் மலேசிய வலைப்பந்து அணி (குறிப்பாக போட்டியின் இறுதி 3-4 நிமிடங்களில்) இலங்கையின் புள்ளிகளை நெருங்கி அச்சுறுத்தியது. எனினும் இதனை கருத்திற் கொள்ளாத இலங்கை மங்கைகள் போட்டியில் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில்லர் வெற்றியினை பதிவு செய்தனர்.

இதேநேரம், மலேசியாவுக்கு எதிராக கிடைத்த வெற்றி இத்தொடரில் இலங்கை வலைப்பந்து அணியின் தொடர்ச்சியான நான்காவது வெற்றியாகவும் பதிவாகியிருந்ததுடன், தொடரில் எந்தவொரு போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாகவும் இலங்கை முன்னேறுகின்றது.

முழு நேரம்: இலங்கை 62 – 59 மலேசியா

இலங்கை வலைப்பந்து அணி தமது இறுதி லீக் ஆட்டத்தில் நாளை ஹொங்ஹொங் அணியுடன் ஆடவுள்ளதுடன் அதனை தொடர்ந்து அரையிறுதிக்கான அணிகளின் விபரம் வெளியிடப்படும்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<