சர்மாவின் அதிரடி சதத்தோடு T-20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா

690
BCCI

நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T-20 போட்டியில், இந்தியா 88 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியிருப்பதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது.

முன்னதாக இந்தோரில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இந்திய அணிக்கு வழங்கியிருந்தார்.

இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 93 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி T-20 போட்டிகளில் தமது சிறந்த வெற்றியை பதிவு செய்திருந்தது. மறுமுனையில் இலங்கை அணி 87 ஓட்டங்களை மாத்திரம் பெற்று T-20 போட்டிகள் வரலாற்றில் தமது இரண்டாவது குறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்து படுதோல்வியடைந்திருந்தது. எனவே, தொடரை தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் நல்ல முடிவுகளை எதிர்பார்த்த வண்ணம் இலங்கை அணி இரண்டு மாற்றங்களை மேற்கொண்டவாறு இந்தப் போட்டியை எதிர்கொண்டது.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இந்தியா, அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை தொடங்கியது. இந்தியா மெதுவான ஆரம்பம் ஒன்றைக் காட்டியிருந்த போதிலும் போட்டியின் நான்காவது ஓவரை அடுத்து ரோஹித் சர்மா வாணவேடிக்கை காட்டத் தொடங்கினார்.

ப்ளூம்பீல்ட் கழகத்தை மட்டுப்படுத்திய சசித்ர சேனநாயக்க

இலங்கை அணியின் எந்தப் பந்து வீச்சாளர்களினாலும் சர்மாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் முதல் 9 ஓவர்களுக்குள்ளேயே இந்திய அணி 100 ஓட்டங்களை எட்டியது. சர்மாவின் அதிரடி தொடர வெறும் 35 பந்துகளில் சதம் கடந்த அவர் T-20 போட்டிகள் வரலாற்றில் அதிவேக சதம் கடந்த தென்னாபிரிக்க அணியின் டேவிட் மில்லரின் சாதனையை சமன் செய்தார்.

இவ்வாறாக சிறப்பான நிலையில் காணப்பட்ட இந்திய அணி 165 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், ரோஹித் சர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆட்டமிழக்கும் போது சர்மா 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 118 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். T-20 போட்டிகளில் இந்திய அணிக்கு அதிகூடிய முதல் விக்கெட் இணைப்பாட்டத்தை (165) லோக்கேஷ் ராகுலுடன் சேர்ந்து பகிர உதவிய சர்மா, இந்தப் போட்டியின் மூலம் தனது இரண்டாவது T-20 சதத்தையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்மாவின் விக்கெட் பறிபோனாலும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த லோக்கேஷ் ராகுல் இந்திய அணிக்கு அதிரடியான முறையில் ஓட்டங்களை சேர்த்தார். இத்தொடரில் ராகுல் பெற்ற தொடர்ச்சியான இரண்டாவது அரைச்சதத்தின் உதவி மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த மொத்த ஓட்டங்கள் மூலம் இந்தியா T-20 போட்டிகள் வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணியாக இலங்கையின் சாதனையையும் பகிர்ந்து கொண்டது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் லோக்கேஷ் ராகுல் தனது 3 ஆவது T-20 அரைச்சதத்துடன் 49 பந்துகளுக்கு 8 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 89 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

போட்டியின் இறுதி ஓவர்களிலேயே இந்திய அணிக்கு பந்து வீச்சில் ஓரளவு சவால் தர முடிந்த இலங்கை தரப்பில், அணித்தலைவர் திசர பெரேரா மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

T-20 போட்டிகளில் வரலாற்றில் இரண்டாம் இன்னிங்சில் வெற்றிகரமாக எட்டப்பட்ட வெற்றி இலக்கு 231 ஓட்டங்கள் என்பதால், இலங்கை அணிக்கு 20 ஓவர்களில் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 261 ஓட்டங்களைப் பெறுவது உலக சாதனை ஒன்றை நிகழ்த்த கிடைத்த வாய்ப்பாக அமைந்திருந்தது.

தொடர்ந்து இலங்கை  தமது இலக்கு தொடும் பயணத்தை நிரோஷன் திக்வெல்ல மற்றும் உபுல் தரங்க ஆகியோருடன் தொடங்கியிருந்தது. நிரோஷன் திக்வெல்ல சிறப்பான ஆரம்பத்தைக் காட்டியிருந்த போதிலும் அதனை நீண்ட இன்னிங்ஸ் ஒன்றாக மாற்றத் தவறியிருந்தார். இலங்கை அணியின் முதல் விக்கெட் 36 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஜய்தேவ் உனட்கட் மூலம் வீழ்த்தப்பட்டது. நிரோஷன் திக்வெல்ல 19 பந்துகளுக்கு 25 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஓய்வறை நடந்தார்.

சானகவின் சதத்தினால் லங்கன் கிரிக்கெட் கழகம் வலுவான நிலையில்

இதனையடுத்து இரண்டாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் ஜனித் பெரேரா மற்றும் உபுல் தரங்க ஆகியோர் இந்தியப் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி தரும் விதமாக செயற்பட்டு அதிரடியான முறையில் ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர். இதனால், போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. இரண்டு வீரர்களதும் அதிரடி ஆட்டத்தினால் இரண்டாம் விக்கெட்டுக்காக 109 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் உபுல்  தரங்கவை இலங்கை இரண்டாம் விக்கெட்டாக பறிகொடுத்தது. தரங்க 29 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இந்த விக்கெட்டைத் தொடர்ந்து குசல் பெரேரா அரைச்சதம் கடந்து இலங்கை அணிக்காக போராடிய போதும், இந்திய அணியின் சுழல் வீரர்கள் இலங்கையின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களை விரைவாக ஓய்வறை அனுப்பினர். இதில் குசல் பெரேரா இலங்கையின் ஐந்தாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்திருந்தார்.

முடிவில், அஞ்செலோ மெதிவ்ஸ் காயம் காரணமாக துடுப்பாட வர முடியாமையினால் 17.2 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இலங்கை பறிகொடுத்ததாக அறிவிக்கப்பட  போட்டியின் வெற்றியாளர்களாக இந்திய அணி மாறியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தனது 7 ஆவது T-20 அரைச்சதத்துடன் குசல் ஜனித் பெரேரா 37 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 77 ஓட்டங்களைக் குவிக்க மத்தியவரிசையில் துடுப்பாடிய ஒருவரேனும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறாமல் ஏமாற்றியிருந்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் சுழல் வீரர்களான யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இந்திய அணிக்கு தொடர் வெற்றியை பரிசளித்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடி சதம் கடந்த ரோஹித் சர்மா தெரிவாகியிருந்தார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடரின் மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டி 24 ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 260/5 (20) – ரோஹித் சர்மா 118(43), லோக்கேஷ் ராகுல் 89(49), திசர பெரேரா 49/2(4), நுவன் பிரதீப் 61/2(4)

இலங்கை – 172 (17.2) – குசல் ஜனித் பெரேரா 77(37), உபுல் தரங்க 47(29), யுஸ்வேந்திர சாஹல் 52/4(4), குல்தீப் யாதவ் 52/3(4)

முடிவு – இந்தியா 88 ஓட்டங்களால் வெற்றி