இன்று, P. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாம் போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டியிருந்த பங்களாதேஷ் அணி, 4 விக்கெட்டுக்களால் இலங்கை அணியினை வீழ்த்தியது.

இதன் மூலம் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அணியினை டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெற்றிருக்கும் பங்களாதேஷ் அணி,  இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமன் செய்துள்ளது.

போட்டியின் நான்காம் நாளான நேற்று திமுத் கருணாரத்ன தவிர்ந்த ஏனைய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்தனர். எனினும் ஒருவாறாக இலங்கை நேற்றைய நாள் முழுதும் துடுப்பாடி தமது இரண்டாம் இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களினை பெற்று பங்களாதேஷ் அணியினரை விட 129 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது.

களத்தில் அதிக பந்துகளை சந்தித்து (126) நின்றிருந்த தில்ருவான் பெரேரா 26 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மல் 16 ஓட்டங்களுடனும் போட்டியின் இறுதி நாளினை தொடர்ந்தனர்.

பங்களாதேஷ் அணிக்கு சவால் தரும் ஒரு வெற்றி இலக்கினை நிர்ணயிப்பதற்கு இலங்கையின் இறுதி நம்பிக்கையாக காணப்பட்ட இருவரும் மதிநுட்பமாக துடுப்பாடி 9ஆம் விக்கெட்டிற்காக 80 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், இலங்கையின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை 300 ஐ தாண்டவும் செய்தனர்.

பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் அனைவருக்கும் சிம்ம சொப்பமனமாக இருந்த தில்ருவான் பெரேரா, மெஹதி ஹஸன் மற்றும் சுபாசிஸ் ரோய் ஆகியோரின் இணைந்த களத்தடுப்பு மூலம் ரன் அவுட் செய்யப்பட்டு இலங்கை அணியின் 9ஆம் விக்கெட்டாக பறிபோனார்.  

ஆட்டமிழந்த பெரேரா 174 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களினைப் பெற்று தனது நான்காம் சர்வதேச டெஸ்ட் அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்திருந்தார்.  அத்துடன் இது அவருக்கு இத்தொடரில் இரண்டாவது  அரைச்சதமாகும்.

அவரின் விக்கெட்டினைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும், 113.2 ஓவர்களில் பறிகொடுத்து 319 ஓட்டங்களினை தமது இரண்டாம் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியில், இறுதியாக ஆட்டமிழந்த சுரங்க லக்மல் 4 பவுண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களினை குவித்து, டெஸ்ட் போட்டியொன்றில் ஒரு இன்னிங்சிற்காக தான் பெற்ற அதிகப்படியான ஓட்டங்களினை இப்போட்டி மூலம் பெற்றுக் கொண்டார்.

இன்றைய நாளின் இரண்டாம் ஓவரில் மைதானத்தில் ஓடியதற்காக கள நடுவரிடமிருந்து எச்சரிக்கை ஒன்றினைப் பெற்ற லக்மல், தனது இரண்டாம் இன்னிங்ஸ் மூலம் பெற்றுக்கொண்ட 42 ஓட்டங்களால், 10 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இரு இன்னிங்ஸ்களிலும் (முதல் இன்னிங்ஸ் – 35) முப்பது ஓட்டங்களினை கடந்த வீரர் என்னும் அபூர்வ சாதனையினை செய்த வீரர்களில் ஒருவராக மாறினார்.

இன்றைய நாளில் பெறப்பட்ட ஒரே விக்கெட்டினை சகீப் அல் ஹஸன் பெற்றுக்கொண்டதுடன், அவர் இந்த இன்னிங்சில் மொத்தமாக நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அத்துடன் மறுமுனையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

இதனையடுத்து இலங்கை அணியில் இரண்டாம் இன்னிங்ஸ் காரணமாக வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 191 ஓட்டங்களினை பெற பதிலுக்கு தாம் விளையாடும் 100ஆம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை பங்களாதேஷ் ஆரம்பித்தது.

போட்டியின் மதிய போசஇடைவேளையின் முன்னர் பங்களாதேஷ் அணி 22 ஓட்டங்களினை பெற்றிருந்த போது, ரங்கன ஹேரத் வீசிய போட்டியின் 8ஆவது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளிலும் விக்கெட்டுக்களை கைப்பற்றி பங்களாதேஷ் அணியின் இலக்கு தொடும் பயணத்திற்கு இடைஞ்சல் விளைவித்தார்.

இதனால் பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர் செளம்யா சர்க்கர் 10 ஓட்டங்களினையும் அதனை அடுத்து வந்த தய்ஜூல் இஸ்லாம் ஓட்டம் ஏதுமின்றியும் ஓய்வறை நோக்கி நடந்தனர்.

போட்டியின் மதிய போசன இடைவேளையினை அடுத்து, இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தும் அதன் அழுத்தத்திற்கு ஆளாகாமல் நேர்த்தியான துடுப்பாட்டத்தினை மேற்கொண்ட ஏனைய ஆரம்ப வீரர் தமிம் இக்பால் மற்றும் சப்பீர் ரஹ்மான் ஜோடி மூன்றாம்  விக்கெட்டிற்காக 109 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டு வெற்றியலக்கினை நெருங்கியது.  

இந்நிலையில் களத்தில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இரு வீரர்களினையும் பங்களாதேஷ், விரைவான முறையில் பந்தினை கையில் எடுத்த தில்ருவான் பெரேரா இடம் பறிகொடுத்தது.

மூன்றாம் விக்கெட்டாக பறிபோன  இக்பால், தனது 22 ஆம் டெஸ்ட் அரைச்சதத்தினை பெற்றுக்கொண்டதுடன் 125 பந்துகளிற்கு 7 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மறுமுனையில் சப்பீர் ரஹ்மான் 41 ஓட்டங்களினை குவித்து போட்டியில் முக்கியமான ஓட்டக்குவிப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

எனினும் போட்டியின் தேநீர் இடைவேளையின் போது சகீப் அல் ஹஸன் (12) மற்றும் அணித்தலைவர் முஸ்பிகுர் ரஹீம் (6) மைதானத்தில் நின்று பங்களாதேஷ் அணியினை 150 ஓட்டங்களினை கடக்க வைத்தனர்.

போட்டியின் தேநீர் இடைவேளையினைத் தொடர்ந்து, பங்களாதேஷ் அணி மேலதிகமாக இரண்டு விக்கெட்டுக்களை குறுகிய இடைவேளையில் பறிகொடுத்திருந்தும் முடிவில், 57.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களினை இழந்து 191 ஓட்டங்களினை கடந்து வெற்றியினைப் பெற்றுக் கொண்டது.

இது 2001 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் பங்களாதேஷ் 15 தோல்விகளிற்குப் பின்னர் இலங்கையுடன் பெற்றுக்கொண்ட முதல் வெற்றியாகும்.

இலங்கை அணியின் பந்து வீச்சில், போட்டியின் இறுதிக்கட்டத்தில் துடுப்பாட வந்த மொசாதிக் ஹொசைன் இன் பிடியெடுப்பினை கோட்டை விட்ட இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத்  மற்றும்  தில்ருவான் பெரேரா ஆகியோர்  தலா மூன்று விக்கெட்டுக்களை சாய்த்திருந்தனர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக, இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் ஜொலித்திருந்த தமிம் இக்பால் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது சகீப் ல் ஹஸனிற்கு வழங்கப்பட்டது.

பங்களாதேஷ் அணி தமது இலங்கை சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்டமாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதுகின்றது. இதன் முதல் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.