இளையோர் ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இலங்கை கனிஷ்ட அணி

398
Sri Lanka U19

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் கனிஷ்ட அணிகள் மோதும் ஒரு நாள் தொடரின், இன்றைய நான்காவது போட்டியில் திறமையாக செயற்பட்டிருந்த அவுஸ்திரேலிய இளம் வீரர்கள் இலங்கை கனிஷ்ட அணியை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றியினை தம்வசப்படுத்திக் கொண்டனர்.

அத்துடன் இவ்வெற்றியுடன், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரையும் 3-1 என அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி கைப்பற்றியுள்ளது.

ஹொபர்ட் நகரில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியடைந்த இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொண்டார்.

இதன்படி, துடுப்பாட மைதானம் சென்ற இலங்கை கனிஷ்ட அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விஷ்வ சத்துரங்க தான் எதிர் கொண்ட முதல் பந்தினை பவுண்டரியாக மாற்றி அசத்தல் ஆரம்பத்தினை தந்திருந்தார்.

எனினும், சிறப்பான முறையில் பந்து வீசிய அவுஸ்திரேலிய இளம் வீரர்கள் இலங்கை கனிஷ்ட அணியினர் முதல் நான்கு விக்கெட்டுகளையும் 40 ஓட்டங்களினை தாண்டுவதற்குள் இழந்து போட்டியின் ஆதிக்கத்தையும் எதிரணிக்குத் தந்தனர்.

தொடர்ந்து, அணியின் நிலையறிந்து மத்தியவரிசை வீரர்களாக களமிறங்கியிருந்த புனித ஜோசப் கல்லூரி வீரர் ஜெஹான் டேனியல் மற்றும் கிரிஷான் ஆராச்சிகே ஆகியோர் சாதுவான முறையில் துடுப்பாடி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை மெதுமெதுவாக உயர்த்தியிருந்தனர்.

இதில் டேனியல் 70 பந்துகளுக்கு 36 ஓட்டங்களையும் ஆராச்சிகே 29 ஓட்டங்களையும் பெற்று குறுகிய நேர இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.  

பின்வரிசையில் வந்த, நிப்புன் ரன்சிக்க (28) மற்றும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ரஷ்மிக்க தில்ஷான் (25*) ஆகியோரின் ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை கனிஷ்ட அணி 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி தரப்பு பந்து வீச்சில், அதி சிறப்பாக செயற்பட்டிருந்த ஸேக் ஈவன்ஸ் வெறும் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அய்ன் கார்லைல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.  

இதனை அடுத்து இலகு வெற்றியிலக்கான 164 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு மைதானம் விரைந்த அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் அவ்வணி இரண்டு ஓட்டங்களினை தாண்டுவதற்குள் ரஷ்மிக்க தில்ஷான், பி.டி. எஸ் குலரத்ன கல்லூரி வீரர் நிப்புன் ரன்சிக்க  ஆகியோரின் அபார பந்து வீச்சு காரணமாக இலங்கை கனிஷ்ட அணி வீழ்த்தி அதிரடி ஆரம்பத்தினைப் பெற்றுக்கொண்டது.

இதனால் அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி பாரிய அழுத்தம் ஒன்றினை எதிர்கொண்டிருப்பினும், மத்திய வரிசையில் ஆடியிருந்த ஒஸ்டின் வோஹ் மற்றும் ஜொனத்தன் மெர்லோ ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டம் அவ்வணியினை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றது.

இறுதியில், 45.4 ஓவர்கள் முடிவில் அவுஸ்த்திரேலிய கனிஷ்ட அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களுடன் வெற்றியலக்கினை அடைந்தது.

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஒஸ்டின் வோஹ் 4 பவுண்டரிகள் அடங்கலாக 125 பந்துகளுக்கு 60 ஓட்டங்களையும், ஜொனதன் மெர்லோ 5 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று 43 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இலங்கை கனிஷ்ட அணியின் பந்து வீச்சில் நிப்புன் ரன்சிக்க மற்றும் ஹரீன் வீரசிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் தம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக பந்து வீச்சில் சிறப்பித்திருந்த அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் ஸேக் ஈவன்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கனிஷ்ட அணி – 163/8 (50) – ஜெஹான் டேனியல் 36, கிரிஷான் ஆராச்சிகே 29, நிப்புன் ரன்சிக்க 28, ரஷ்மிக்க தில்ஷான் 25*, ஸேக் ஈவன்ஸ் 30/4, அய்ன் கார்லைல் 18/2

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி – 164/6 (45.4) – ஒஸ்டின் வோஹ் 60, ஜொனத்தன் மேர்லோ 43*, மெத்திவ் ஸ்பூர்ஸ் 32, ஹரீன் வீரசிங்க 22/2, நிப்புன் ரன்சிக்க 22/2

போட்டி முடிவு – அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

இத்தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான இளையோர் ஒரு நாள் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெறவுள்ளது.