4-1 என தொடரை வென்றது அவுஸ்ரேலியா

288
Aus v SL 5th ODI

இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகெலேயில் இன்று நடைபெற்றது. இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் உபதலைவராக செயற்பட்ட தினேஷ் சந்திமால் பதவியை ஏற்றார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி அந்த அணியின் தனஞ்செயா டி சில்வா, தனுஷ்க குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ஸ்டாக்ஹாஸ்டிங் மற்றும் போலந்து ஆகியோரின் வேகத்தை சமாளித்து ஓட்டங்களை  சேர்த்தனர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 73 ஓட்டங்களை சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர். 13.5 ஓவரில் 73 ஓட்டங்களை எடுத்திருக்கும் போது இலங்கை அணி முதல் விக்கெட்டை இழந்தது. டி சில்வா 47 பந்தில் 34 ஓட்டங்களை  சேர்த்தார். அடுத்து குசல் மெண்டிஸ் களம் இறங்கினார்கள்.

பின் குணதிலக 39 ஓட்டங்களோடும், மெண்டிஸ் 33 ஓட்டங்களோடும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். அதன் பின்  வந்தவர்கள் சொற்ப ஓட்டங்களில்  வெளியேறியமையால் இலங்கை அணி 40.2 ஓவர்களிலேயே 195 ஓட்டங்களை எடுத்து சகல விக்கட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக டி சில்வா 34 ஓட்டங்களையும், குணதிலக 39 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 33 ஓட்டங்களையும், சச்சித் பதிரன  32 ஓட்டங்களையும் பெற்றனர்அவுஸ்ரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், சம்பா மற்றும் ஹெட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 196 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்அவுஸ்ரேலிய அணியின் தலைவர் டேவிட் வோர்னர், விக்கெட் காப்பாளர்  வடே  ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வடே 3 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கவாஜா 6 ஓட்டங்களை பெற்ற நிலையில் பெவிலியன் திரும்பினார்.

3-வது விக்கெட்டுக்கு வோர்னர் உடன் பெய்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. பெய்லி 44 ஓட்டங்களை  எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ஆனால், வோர்னர்  சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்த அவர் 106 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். வோர்னர் ஆட்டம் இழந்தாலும், அவுஸ்ரேலியா 43 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலிய அணி  ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4-1 எனக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் டில்ருவான் பெரேரா 3 விக்கட்டுகளையும், தனஞ்சய டி சில்வா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.  போட்டியின் ஆட்ட நாயகனாக டேவிட் வோர்னரும் போட்டித் தொடரின் நாயகனாக ஜோர்ஜ் பெயிலியும் தெரிவானார்கள்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 195/10 (40.2)

தனஞ்சய டி சில்வா 34 , குணதிலக 39, குசல் மெண்டிஸ் 33, சச்சித் பதிரன  32 – மிச்சல் ஸ்டார்க் 40/3, எடம் சம்பா 43/2, டிராவிஸ் ஹெட் 22/2

அவுஸ்ரேலியா – 199/5 (43)

டேவிட் வோர்னர் 106, ஜோர்ஜ் பெயிலி 44, டிராவிஸ் ஹெட் 13 – டில்ருவான் பெரேரா 51/3, தனஞ்சய டி சில்வா 35/2

அவுஸ்ரேலிய அணி 5 விக்கட்டுகளால் வெற்றி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்