இளையோர் ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி

1457
Sri Lanka U19

ஆசிய நாடுகளின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஆசியக் கிரிக்கெட் பேரவை (ACC) ஒழுங்கு செய்து பங்களாதேஷில் நடாத்தி வரும், இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கையின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி, பங்களாதேஷின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

ஒரு நாள் போட்டிகளாக நடைபெறுகின்ற இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில், 8 நாடுகளின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட்  அணிகள் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறுகின்றன. இதில் இலங்கை – பங்களாதேஷ் ஆகியவற்றின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகளுக்கு இடையிலான போட்டி குழு B இன் முதல் லீக் ஆட்டமாக அமைந்திருந்தது.

>> த்ரில்லர் வெற்றியுடன் ஏழாவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்தியா

டாக்காவின் சாஹூர் செளத்ரி மைதானத்தில் இன்று (29) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, இலங்கையின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட அணியின் தலைவர் நிப்புன் தனன்ஞய, தெளஹித் ரிதோய் தலைமையிலான பங்களாதேஷ் தரப்பினை முதலில் துடுப்பாட பணித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி, இலங்கையின் இளம் வீரர்களின் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 141 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் அவ்வணியின் தலைவர் தெளஹித் ரிதோய் அதிகபட்சமாக 35 ஓட்டங்களை எடுத்திருந்த வேளையில், அவ்வணியில் ஏனைய ஒருவர் (தன்ஷித் ஹஸன்-24) மட்டுமே 20 ஓட்டங்களை தாண்டியிருந்தார்.

இதேநேரம், இலங்கை இளையோர் அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல் வீரர்களான கல்ஹார சேனாரத்ன, சஷிக்க துல்ஷான் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 142 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி, 37.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்புச் செய்த, மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி அணியின் வீரர் நுவனிது பெர்னாந்து அரைச்சதம் தாண்டி உதவியதுடன் 7 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக ஆட்டத்தின் இறுதிவரை 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்றார். இதேநேரம், பசிந்து சூரிய பண்டார 36 ஓட்டங்களைப் பெற்று இலங்கை தரப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தார்.

>> ரெட் புல் பல்கலைக்கழக டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

பங்களாதேஷின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சொரிபுல் இஸ்லாம், இலங்கை அணிக்கு ஆரம்பத்தில் 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அழுத்தம் தந்த போதிலும் அவரது தரப்பிற்கு அது வெற்றியைப் பெற்றுத்தர போதுமாக இருக்கவில்லை.

தமது முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி, இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் நாளை (30) ஹொங்கொங்கை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் (இளையோர் அணி) – 141 (46.4) – தெளஹித் ரிதோய் 35(63), தன்ஷித் ஹஸன் 24(31), சஷிக்க துல்ஷான் 11/2(10), கல்ஹார சேனாரத்ன 31/2(9.4), துனித் வெல்லாலகே 21/2(8)

இலங்கை (இளையோர் அணி) – 144/4 (37.6) – நுவனிது பெர்னாந்து 64(94), பசிந்து சூரியபண்டார 36(92), சொரிபுல் இஸ்லாம் 29/2(8)

முடிவு – இலங்கை 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<