இன்று ஆரம்பமாகிய 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்தொடரின், ஆரம்பப் போட்டிகளில் ஒன்றான நேபாளம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில், இறுதிக் கட்டப் போராட்டத்தின் பின்னர் இலங்கை கனிஷ்ட அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றி வாகை சூடியது.

இன்று, கொழும்பு NCC மைதானத்தில் ஆரம்பமாகிய குழு A இற்கான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாள அணியின் தலைவர் சந்தீப் லமிச்ஹானே, முதலில் இலங்கை கனிஷ்ட அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதன்படி, கமிந்து மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி, ரேவான் கெல்லி மற்றும் விக்கெட் காப்பாளர் விஷ்வ சத்துரங்க ஆகியோருடன் தனது ஆட்டத்தினை ஆரம்பம் செய்தது. போட்டியின் முதல் பந்திலேயே இலங்கை கனிஷ்ட அணி தனது முதல் விக்கெட்டினை கமல் சிங் இன் பந்தில் LBW முறையில் பறிகொடுத்தது. இதனால், ஓட்டம் எதுவும் பெறாமல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஷ்வ சத்துரங்க வெளியேறினார்.

இதனையடுத்து, அடுத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரெவான் கெல்லி, புதிதாக வந்த வீரரான ஹஸித்த பொயாகொடவுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களை பகிர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர், சீரான ஓட்ட இடைவெளிகளில் இலங்கை கனிஷ்ட அணி விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இருப்பினும் ஹஸித்த பொயாகொட மற்றும் அஷ்கன் பண்டார ஆகியோரின் நிதானமான  ஆட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை கனிஷ்ட அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட ஹஸித்த பொயாகொட 103 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் உள்ளடங்களாக 83 ஓட்டங்களை பெற்றார். இவருடன், அஷ்கன் பண்டாரவும் நல்ல ஆட்டத்தினை வெளிப்படுத்தி, 47 பந்துகளிற்கு 48 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

பந்து வீச்சில், நேபாள அணி சார்பாக கமல் சிங் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், பவன் சர்ரப் 27 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்கள்.

இதனையடுத்து, வெற்றி இலக்கான 228 ஓட்டங்களை  50 ஓவர்களில் பெற களமிறங்கிய நேபாள அணியினர், போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஓவர்களில் தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சந்தீப் சுனார், மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோரை இழந்து தடுமாறினர். இதனையடுத்து, மூன்றாவது விக்கெட்டும், 32 ஓட்டங்களை பெற்றிருந்த போது கமிந்து மெண்டிஸின் சுழலில் பறிபோக, போட்டி இலங்கை அணியின் பக்கம் சாதமாகியது.

இதன் காரணமாக ஓரளவு நிதானமாக ஆடி நேபாள அணி அமைதியாக ஓட்டங்களினை சேர்க்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நேபாள அணி மீண்டும் சொற்ப ஓட்ட இடைவெளிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து மீண்டும் சரிவு நிலைக்கு உள்ளாகியது.

எனினும், மூன்றாவது விக்கெட்டின் பின்னர் களத்திற்கு வந்த திபேந்தர சீங் ஐரி மற்றும் ஐந்தாவது விக்கெட்டின் பின்னர் வந்த அவினாஷ் கார்ன் ஆகியோரின் நிதமான ஆட்டத்தின் காரணமாக போட்டி மெதுவாக நேபாளத்தின் பக்கம் சாய ஆரம்பித்தது.

இதன் பின்னர், 6ஆவது விக்கெட்டாக அவின்ஷ் கார்ன் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல, அடுத்தடுத்து ஏனைய விக்கெட்டுக்களும் வீழ்ந்தது. எனினும், இலங்கை அணிக்கு நெருக்கடி தந்த, தீபெந்திர சிங் ஐரியின் ஆட்டம் காரணமாக, இறுதி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்று தீர்மானிக்க முடியாமல் இருந்தது.

இந்த நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மீதமிருந்தது. அதுபோல், நேபாளம் வெற்றி பெற  4 பந்துகளிற்கு இரண்டு ஓட்டங்கள் மாத்திரம் தேவையாக இருந்த சிக்கலான தருணத்தில், இலங்கை கனிஷ்ட அணியின் இடது கை சுழல் பந்து வீச்சாளர் பிரவின் ஜயவிக்ரமவின் மாய சுழலில் சிக்கி, இலங்கை அணியினை மிரட்டிக்கொண்டிருந்த தீபெந்திர சிங் ஐரி  LBW முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

இதனால், இறுதிவரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற இரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, இலங்கை அணி ஒரு ஓட்டத்தினால் இப்போட்டியில் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியினை இறுதி வரை மிரட்டியிருந்த தீபெந்திர சிங் ஐரி 99 பந்துகளிற்கு ஒரு சிக்ஸர் 9 பவுண்டரிகள் உள்ளடங்களாக 90 ஓட்டங்களை நேபாள கனிஷ்ட அணி சார்பாக பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக, கமிந்து மெண்டிஸ் சிறப்பாக செயற்பட்டு மூன்று விக்கெட்டுக்களையும், தில்ஷான் கமகே, நிப்புன் ரன்சிக்க, ஜெஹான் டேனியல், அஷ்கன் பண்டார, திருப்புமுனையாக அமைந்த பந்தினை வீசிய பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கனிஷ்ட அணி: 227/8(50) – ஹஸித்த பொயாகொட 83(106), அஷ்கன் பண்டார 48(47), கிரிஷன் ஆராச்சிகே 28(47), கமல் சிங் 43/3(8), பவன் சர்ரப்  27/2(6)

நேபாள கனிஷ்ட அணி: 226/10(49.3) – தீபெந்திர சிங் ஐய்ரி 90(99), பவன் சர்ரப் 40(64), ஆதில் கான் 39(69), கமிந்து மெண்டிஸ் 37/3(8)

போட்டி முடிவு – இலங்கை கனிஷ்ட அணி 1 ஓட்டத்தினால் வெற்றி


இந்தியா எதிர் மலேசியா

இன்று நடைபெற்ற குழு A இற்கான ஆசிய கிண்ணத்தொடரின் மற்றுமொரு போட்டியில் இந்திய கனிஷ்ட அணியும், மலேசிய கனிஷ்ட அணியும் மோதிக்கொண்டன.

இன்று கொழும்பு கிரிக்கட் கழக மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய கனிஷ்ட அணி, ப்ரீத்வி சாவ், அபிஷேக் சர்மா, ஹெட் பட்டேல் ஆகியோரின் அரைச்சத உதவியுடன், 50 ஓவர்கள நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் மலேசியா சார்பாக, முகம்மது அமீர் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து, வெற்றி இலக்கான 290 ஓட்டங்களை பெற களமிறங்கிய மலேசிய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து, 22.3 ஓவர்கள் நிறைவில் 53 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மேலதிக 235 ஓட்டங்களை பெற முடியாமல், இந்திய கனிஷ்ட அணியிடம் படுதோல்வி அடைந்தது.

இவ்வெற்றியினை பெற பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட, கமலேஷ் நாகர்கோட்டி, இந்திய கனிஷ்ட அணி சார்பாக நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

இந்திய கனிஷ்ட அணி: 289/8(50)-  ப்ரீத்வி சாவ் 89(79), அபிஷேக் சார்மா 59(66), ஹீட் பட்டேல் 58(62), முஹம்மட் அமீர் 33/3(10), செயத் அஸீஸ் 84/2(10)

மலேசிய கனிஷ்ட அணி: 54/10(22.3) – முஹம்மட் ஹாபிஸ் 14(26), அர்ஜுன் தில்லை நாதன் 14(36),  கமலேஷ் நாகர்கோட்டி 12/4(7)

போட்டி முடிவு – இந்தியா 235 ஓட்டங்களினால் வெற்றி


பாகிஸ்தான் எதிர் சிங்கப்பூர்

காலியில் இடம்பெற்ற குழு B இற்கான மற்றுமொரு போட்டியில் பாகிஸ்தான் கனிஷ்ட அணியும், சிங்கப்பூர் கனிஷ்ட அணியும் மோதிக்கொண்டன.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் கனிஷ்ட அணியின் தலைவர் முதலில் சிங்கப்பூர் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதன்படி களமிறங்கிய சிங்கப்பூர் அணி ஒரு நல்ல ஆரம்பத்துடன் இருந்த போதும் பின்னர் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல் 25.1 ஓவர்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 78 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக ரோகன் ரங்கராஜன் சிங்கப்பூர் அணிக்காக 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து, இலகு வெற்றியிலக்கான 79 ஓட்டங்களினை பெற களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்ப வீரர் மன்சூர் அலியின் அபார அரைச்சதத்துடன் 8.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 80 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

சிங்கப்பூர் கனிஷ்ட அணி: 78/10(25.1) – ரோஹன் ரங்கராஜன் 22(52), சஹீன் அப்ரடி 27/3(7), முஹம்மட் ஹஸ்னைன் 31/2(7)

பாகிஸ்தான் கனிஷ்ட அணி: 80/1(8.3) – மன்சூர் அலி 56(32)*, ஜனக் பிரகாஷ் 15/1(3)

போட்டி முடிவு – பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்களால் வெற்றி


ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நடைபெற்ற குழு B இற்குரிய மற்றுமொரு போட்டியான இதில், நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது. இதனால், முதலில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 48.3 ஓவர்கள் நிறைவில்  சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக நிசார் வஹ்தட் 32 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில், பங்களாதேஷ் அணி சார்பாக, காசி ஒனிக் 4 விக்கெட்டுக்களையும், முகிதுல் இஸ்லாம் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை 50 ஓவர்களில் பெற களமிறங்கிய பங்களாதேஷ், சயிப் ஹஷன், ரயான் ரஹ்மான் ஆகியோரின் நிதனமாக ஆட்டத்தின் துணையுடன், 43.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட சயிப் ஹஷன் 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில், ஆப்கானிஸ்தான் சார்பாக சஹீர் கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணி: 146/10(48.3) நிசார் வஹ்டாட் 32(66), நவீன் உல்  ஹக் 27(44), காசி ஒனிக் 22/4(8), முகிதுல் இஸ்லாம் 29/3(6.3)

பங்களாதேஷ் கனிஷ்ட அணி: 150/6(43.1) – சயிப் ஹஷன் 67(129), ரயான் ரஹ்மான் 32(54), ஸஹீர் கான் 21/2(9)

போட்டி முடிவு – பங்களாதேஷ் 4 விக்கெட்டுக்களால் வெற்றி