ஜெஹானின் போராட்டம் வீண்; தோல்வியுடன் நாடு திரும்பும் இலங்கை கனிஷ்ட அணி

1168

இன்று நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான இளையோர் ஒரு நாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 23 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி வெற்றியீட்டியுள்ளது.

இப்போட்டியின் வெற்றியுடன் இளையோர் ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி 4-1 என கைப்பற்றியுள்ளது.

ஹொபர்ட் நகரில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.  

அவுஸ்திரேலிய இளம் தரப்பு நல்ல ஆரம்பத்தினை வெளிக்காட்டியிருப்பினும் குறுகிய ஓட்டங்களிற்குள் தமது முதல் விக்கெட்டினை இலங்கை கனிஷ்ட் அணியின் தலைவர் கமிந்து மெண்டிசின் பந்தில் பறிகொடுத்திருந்தது.

எனினும் அதன் மூலம் சோர்வடையாத அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி வீரர்களில், மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மெக்ஸ் பிரையன்ட், ஜேசன் சங்கா மற்றும் மெத்திவ் ஸ்பூர்ஸ் ஆகியோரின் அரைச்சதங்களுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்வடைந்தது.

இதனால், 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி 244 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் பிரையன்ட் அதிரடியாக துடுப்பாடி 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களை குவித்துக்கொண்டதுன், சங்கா 59 ஓட்டங்களையும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ஸ்பூர்ஸ் 65 ஓட்டங்களை 5 பவுண்டரிகள் அடங்கலாகப் பெற்றிருந்தார்.

இலங்கை கனிஷ்ட அணியின் பந்து வீச்சில் புனித செபஸ்டியன் கல்லூரி வீரர் பிரவீன் ஜயவிக்ரம சிறப்பாக செயற்பட்டு இரண்டு விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 245 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கனிஷ்ட அணியினால் நல்லதொரு ஆரம்பம் பெறப்பட்டிருந்தது.

பின்னர் வந்த துடுப்பாட்ட வீரர்களில் மத்திய வரிசையில் ஆடிய ஜெஹான் டேனியல் மற்றும் கிரிஷான் ஆராச்சிகே ஆகியோர் நிதான துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டி வெற்றி இலக்கை எட்டுவதற்கு அதிக சிரத்தை எடுத்திருந்தனர்.

இவர்கள் இருவரினதும் விக்கெட்டுகளைத் தொடர்ந்து குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை கனிஷ்ட அணி முடிவில், 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை கனிஷ்ட அணி சார்பாக போராட்டத்தினை வெளிப்படுத்திய ஜெஹான் டேனியல் மொத்தமாக 75 ஓட்டங்களை 89 பந்துகளில் பெற்றதோடு, கசுன் ஆராச்சிகே 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் பந்துவீச்சில் வில் சதர்லேன்ட் மற்றும் லொய்ட் போப் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் தம்மிடையே பங்கிட்டுக் கொண்டதுடன், மெத்திவ் ஸ்பூர்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்க கனிஷ்ட அணியில் போராட்டத்தை வெளிக்காட்டியிருந்த ஜெஹான் டேனியல் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி – 244/4 (50) – மெக்ஸ் பிரைன்ட் 67, மெத்திவ் ஸ்பூர்ஸ் 65*, ஜேசன் சங்கா 59, பிரவீன் ஜயவிக்ரம 47/2

இலங்கை கனிஷ்ட அணி – 221 (48.5) – ஜெஹான் டேனியல் 75, கிரிஷான் ஆராச்சிகே 36, விஷ்வ சத்துரங்க 31, வில் சதர்லேன்ட் 24/3, லொய்ட் போப் 40/3, மெத்திவ் ஸ்பூர்ஸ் 24/2

முடிவு – அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி 23 ஓட்டங்களால் வெற்றி.