வரலாற்றில் முதல் முறையாக பொதுநலவாய கனிஷ்ட போட்டிகளில் இலங்கை ரக்பி அணி

272

கடந்த வருடம் ஹொங்கொங் மற்றும் சைனீஸ் தாய்பேய் நாடுகளில் நடைபெற்ற 18 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி செவன்ஸ் (Asia Rugby 7’s) போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், இலங்கை 18 வயதிற்கு உட்பட்ட ரக்பி அணி வரலாற்றில் முதன் முறையாக பொதுநலவாய கனிஷ்ட போட்டிகளில் பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

எனவே, எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பஹாமாஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய கனிஷ்ட போட்டிகளில் பங்குகொள்வதற்காக இலங்கை அணி பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை அணிக்காக ஆறுதல் ட்ரை வைத்த அனுருத்த வில்வார

எனினும் கடந்த வருடம் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்களுக்கு வயது அதிகம் என்பதால் இத்தொடரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1999ஆம் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிறந்த வீரர்களே இவ்வருடம் விளையாட தகுதி உடையவர்கள் ஆவர்.

எனவே இப்போட்டிகளுக்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட தேர்வு பரீட்சை இம்மாதம் 20ஆம் திகதி கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஆசியாவிலிருந்து இலங்கை அணி மட்டுமே இப்போட்டிகளில் பங்குகொள்ளவுள்ளதோடு, பிஜி, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் ரக்பி அணிகள் இத்தொடரில் பங்குகொள்ளவுள்ளன.

Handre Polard – Springboks rugby player in action in the Commonwealth youth games few years ago
Handre Polard – Springboks rugby player in action in the Commonwealth youth games few years ago

இப்போட்டிக்கான இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை தெரிவு செய்யும் பணியினை இலங்கை ரக்பி சம்மேளனம், விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் ரக்பி சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தவுள்ளன. மேலும், தெரிவு செய்யப்படும் வீரர்களுக்கான பயிற்சிகள், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரக்பி லீக் போட்டிகள் மற்றும் நடைபெறவிருக்கும் ஜனாதிபதிக் கிண்ண நொக் அவுட் போட்டிகளுக்கு இடையூறு இல்லாதவாறு நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.