எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மலேசியாவில் இடம்பெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கனிஷ்ட ரக்பி தொடருக்கான இலங்கை கனிஷ்ட ரக்பி அணியின் வீரர்கள் மேற்கொண்ட இரண்டு வார தொடர் பயிற்சிகளின் பின்னர் குழாமிற்கான வீரர்கள் 32 பேராகக் குறைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பாடசாலைகளை ஒன்றிணைத்த அணி மற்றும் கண்டி பாடசாலைகளை ஒன்றிணைத்த அணி என்பவற்றிற்கு இடையிலான ரக்பி போட்டியொன்று அண்மையில் இடம்பெற்றது. அதற்காக இரு அணிகளுக்காகவும் தலா 40 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த போட்டியில் இருந்து 39 பேர் கொண்ட குழாமொன்று ஆசிய கனிஷ்ட ரக்பி தொடருக்கான முதல் குழாமாக தெரிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. அதில் வீரர்கள் வெளிக்காட்டிய திறமைகளில் இருந்தே தற்பொழுது குறித்த 32 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய கனிஷ்ட ரக்பி தொடரிற்கான இலங்கை அணி வீரர்கள் 39 பேர் தெரிவு

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்தக் குழாமில் உள்ளவர்களில் சிலர் தற்பொழுது இடம்பெற்று வரும் டயலொக் ரக்பி கழக லீக் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களாகும். எனினும் இலங்கை கனிஷ்ட அணியின் இறுதிக் குழாம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், வீரர்களை உபாதைகளில் இருந்து பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு கழகப் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

தற்பொழுது தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த குழாமின் பலம் மற்றும் அதன் மீதான நம்பிக்கை குறித்து, 19 வயதின் கீழ்ப்பட்ட இலங்கை கனிஷ்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நில்பர் இப்ராஹிம் கருத்து தெரிவிக்கும்பொழுது,

”இம்முறை எமக்கு மிகவும் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு பயிற்சியின்போதும் அவர்கள் தம்மை முன்னேற்றுவதற்காக பல விடயங்களை அறியும் ஆவலோடு உள்ளனர். இம்முறை நாம் சிறந்த முறையில் செயற்பட்டு வெற்றிகளைப் பெற்று அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலக கனிஷ்ட ரக்பி கிண்ணத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு எமக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

ஆசிய கனிஷ்ட ரக்பி தொடரில் பங்கு கொள்ளும் இலங்கை அணியின் இறுதி குழாம் இம்மாதம் 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று அணியின் முகாமைக்குழு எதிர்பார்த்துள்ளது.

தற்பொழுது தெரிவாகியுள்ள 32 பேர் கொண்ட குழாம்

வகீஷா வீரசிங்க, அதீஷ எஷான், குஷான் இன்துனில், லஹிரு விஷ்வஜித், இசுரு உதயகுமார, கயான் விக்ரமரத்ன, ஹரித் பன்டார, ரனிது பத்மசன்க (இசிபதன கல்லூரி)  

சுபுன் விஜேசூரிய (கிங்ஸ்வுட் கல்லூரி)

உதய சன்ஜுல (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி)

நிகில குனதீர, அஷோக் விஜேகுமார் (ரோயல் கல்லூரி)  

நிரோஷ் பெரேரா, ஜனித் லக்சர, தனுஜ மதுரங்க, (சயன்ஸ் கல்லூரி)

பி. துல்ஷான், சாமுவேல் மதுவத்த (புனித அந்தோனியார் கல்லூரி)

ரமேஷ் பிரியன்க (புனித ஜோசப் கல்லூரி)

ரவின் யாபா, சன்தேஷ் ஜயவிக்ரம, ரொமேஷ் பெர்னாந்து (புனித பேதுரு கல்லூரி)

தனுஜ விஜேரத்ன, அஷ்வந்த ஹேரத், பன்துல டி சில்வா, நவீன் ஹேனகன்கனமகே (புனித தோமியார் கல்லுரி)

ராஹுல் கருனாதிலக, சாலிந்ர அலஹகோன், அவிஷா பிரியன்கர, லஷான் விஜேசூரிய, அனுக பொதகொட, (திரித்துவக் கல்லூரி)

சயான் சபர், (வெஸ்லி கல்லூரி)

ஏ.வாஜித் (ஸாஹிரா கல்லூரி)