வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இலங்கை?

89

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போதும், முதல் முறையாக இரு அணிகளதும் சம்மதிப்புடன் டெஸ்ட் தொடரொன்று ஆரம்பமாகிறது. குறித்த கடினமான காலப்பகுதிக்கு பின்னர் பாகிஸ்தானில் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடராகவும் இந்த தொடர் அமைந்துள்ளது.

இலங்கையுடன் மோதவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மற்றும்……

இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க இந்தப் போட்டித் தொடரின் முதல் போட்டியானது மிகவும் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமாகவிருக்கின்றது. இதுவரையில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதாத ராவல்பிண்டியில் முதல் போட்டி ஆரம்பிக்கவுள்ளமை இரு அணிகளுக்கும் ஒரு சவாலான ஆரம்பமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இந்தத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களது வெற்றிகளை குறிவைத்து களமிறங்கவுள்ளன. இறுதியாக நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியானது நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு ஒரு போட்டியில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்திருந்தது.

எனினும், பாகிஸ்தான் அணியானது அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தாங்கள் விளையாடிய ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதல் தொடரிலேயே தோல்வியை தழுவியிருந்தது. அதுவும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இன்னிங்ஸ் அடிப்படையில் தோல்விகண்டிருந்த பாகிஸ்தான் அணி இந்த தொடரை அழுத்தத்திற்கு மத்தியில் எதிர்கொள்ளவுள்ளது.

டெஸ்ட் தொடருக்காக சென்றுள்ள இலங்கை அணியை பொருத்தவரை, முழு பலமான அணியாக பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது. இதற்கு முதல் பாகிஸ்தானில் நடைபெற்ற T20I தொடருக்கு இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் செல்லாமல் இருந்த போதும், இம்முறை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா மற்றும் டில்ருவான் பெரேரா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் டெஸ்ட் தொடருக்கு சென்றுள்ளனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, அனுபவ வீரரான சுரங்க லக்மால் தொடரிலிருந்து சுகவீனம் காரணமாக வெளியேறியுள்ள போதும், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் பந்துவீச்சை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், இலங்கை அணி தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளது.

பாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

அத்துடன், இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என…..

அதேநேரம், பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இழந்திருந்தாலும், தங்களுடைய சொந்த மண்ணில் எதிரணிகளுக்கு சவால் கொடுக்கக்கூடிய அணி. அது மாத்திரமின்றி ராவல்பிண்டியில் பாகிஸ்தான் அணி முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளது. 

இலங்கை அணியானது குறித்த மைதானத்தில் எந்தவொரு போட்டியிலும் விளையாடியதில்லை. எனவே, தங்களுடைய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு இலங்கை அணிக்கு கடுமையான போட்டியை பாகிஸ்தான் அணி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இதுவரையில் 53 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் 19 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், 16 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளன. இதில்,  18 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

அத்துடன், பாகிஸ்தானில் இரண்டு அணிகளும் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், பாகிஸ்தான் அணி 8 போட்டிகளிலும், இலங்கை 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இவ்வாறு பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ள போதும், இறுதியாக 2017/18 ஆம் ஆண்டு பருவகாலத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

அதேநேரம், இறுதியாக பாகிஸ்தானில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடர், தீவிரவாத தாக்குதல் காரணமாக சமநிலைக்கு வந்ததுடன், குறித்த தொடருக்கு முன்னர் 2004/05 ஆம் ஆண்டு பருவகாலத்தில் இரண்டு அணிகளும் பாகிஸ்தானில் வைத்து மோதியதில், தொடர் 1-1 என சமநிலையாகியிருந்தது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

அஞ்செலோ மெதிவ்ஸ்

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக தொடர்ச்சியாக பிரகாசித்து வருபவர் அஞ்செலோ மெதிவ்ஸ். உபாதை காரணமாக போட்டிகளில் அதிகமாக விளையாட கிடைக்காவிட்டாலும் அணிக்காக சிறப்பாக ஓட்டங்களை குவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியை தவிர்த்து, அதற்கு முந்திய போட்டிகளில் மிகச்சிறப்பாக ஓட்டங்களை குவித்துள்ளார். அதுமாத்திரமின்றி இப்போது, உள்ள வீரர்களில் அதிகம் அனுபவம் கொண்ட வீரர் என்ற அடிப்படையில் இவர் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார். அதுமாத்திரமின்றி பாகிஸ்தான் சென்றிருக்கும் இலங்கை குழாத்தில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை குவித்தவராகவும் (1309 ஓட்டங்கள்) உள்ளார்.

பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் இளம் வீரராக இருந்து, தற்போது அந்த அணியின் T20 அணியின் தலைவராகவும், டெஸ்ட் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள பாபர் அசாம் அந்த அணியின் எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்ட வீரராக உள்ளார்.

கடந்த காலங்களில்  ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டங்களை இவர் வெளிப்படுத்தி வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் சோபிக்கத் தவறியிருந்தார். எனினும், கடைசியாக நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 97 ஓட்டங்களை அவர் விளாசிய விதம் மற்றும் கடந்த 12 மாதங்களில் அவர் துடுப்பெடுத்தாடிய விதம் என்பன அந்த அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் கடந்த 12 மாதங்களில் பாபர் அசாம் 431 ஓட்டங்களை குவித்துள்ளார்.  10 போட்டிகளில் 43.10 என்ற ஓட்ட சராசரியில் மேற்குறித்த ஓட்டங்களை குவித்துள்ள இவர், இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ஓட்டங்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடருக்கான அணிக்குழாம்கள்

இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவன் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, ஓஷத பெர்னாண்டோ

பாகிஸ்தான் குழாம்

அஸார் அலி (அணித்தலைவர்), ஆபித் அலி, அஸாட் சபீக், பாபர் அஸாம், பவாட் அலாம், ஹரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், இம்ரான் கான், காஸிப் பாத்தி, மொஹம்மட் அப்பாஸ், மொஹமட் றிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), நஸீம் ஷாஹ், சஹீன் அப்ரிடி, ஷான் மஸூத், யாஸிர் ஷாஹ், உஸ்மான் ஷின்வாரி

Photos: The Departure Ceremony of the National Cricket Team to Pakistan

ThePapare.com | Waruna Lakmal | 08/12/2019 Editing and re-using…..

இந்த டெஸ்ட் தொடரை பொருத்தவரை இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடராக அமையவுள்ளது. குறிப்பாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 1-1 என சமப்படுத்திய இலங்கை அணி, வெற்றியை உறுதிசெய்ய தவறியிருந்தது.

பாகிஸ்தான் அணியும் தாங்கள் விளையாடிய ஐசிசி சம்பியன்ஷிப்புக்கான முதல் தொடரை 2-0 என அவுஸ்திரேலிய அணியிடம் இழந்துள்ளது. இவ்வாறான நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டு அணிகளும் நிலைத்து நிற்கவும், புள்ளிப்பட்டியலில் முன்னேற்றத்தை காணவும் இந்த தொடர் ஒரு முக்கியமான தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<