லாஹூர் T20 யில் எதுவும் நடக்கலாம்

72

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 5ம் திகதி லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளதுடன், தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. கராச்சியில் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில், T20I தொடருக்காக அணிகள் லாஹூர் நோக்கி பயணித்திருக்கின்றன.

பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள்…………..

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்த போதும், அனுபவமற்ற இளம் இலங்கை அணி சிறந்த போட்டித் தன்மையுடன் விளையாடியிருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் செஹான் ஜயசூரிய, தசுன் ஷானக ஆகியோரது துடுப்பாட்ட இணைப்பாட்டம் மற்றும் இரண்டாவது போட்டியில் அறிமுக வீரர் மினோத் பானுக மற்றும் தனுஷ்க குணதிலக்க உட்பட இலங்கை அணியின் துடுப்பாட்டம் நம்பிக்கை தரக்கூடிய அம்சமாக அமைந்திருந்தது

இரண்டு அணிகளையும் பொருத்தவரை ஒருநாள் குழாத்திலிருந்து பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஒருநாள் போட்டிகளுக்கான அணித் தலைவர் லஹிரு திரிமான்னே T20i குழாத்தில் இணைக்கப்படாத நிலையில், இலங்கை T20I அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படவுள்ளார். ஒருநாள் தொடரில் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இவர், T20i போட்டிகளில் இலங்கை அணியை சிறந்த முறையில் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்துள்ள போதும், T20i போட்டிகளில் சிறப்பாக செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூரில் நடைபெற்ற T20i தொடர்களில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த வீரர்களே இந்த T20i குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களால், ஒருநாள் போட்டிகளையும் விட, T20i போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியை பொருத்தவரை இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணியை விட பலமான அணியாக உள்ளது. அதுமாத்திரமின்றி T20i தரவரிசையில், முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது. எனவே, பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரானது அதிகமான சவாலை கொடுக்க வாய்ப்பில்லை. 

இலங்கையுடனான T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிராக…………

அதேநேரம், பாகிஸ்தான் T20i குழாத்தில், ஒருநாள் குழாத்திலிருந்து மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதில், நீண்ட நாட்களுக்கு பின்னர், உமர் அக்மல் மற்றும் அஹமட் சேஷாட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வருகை பாகிஸ்தான் அணியை மேலும் வலுவுடையதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமாத்திரமின்றி, பாகிஸ்தான் அணி தங்களுடைய சொந்த இரசிகர்களுக்கு முன்னாள் முழுமையான தொடர் கொண்ட T20i போட்டியில் விளைாடுவது அந்த அணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாகவும் அமையும். 

எவ்வாறிருப்பினும் தற்போது பாகிஸ்தான் சென்றுள்ள இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி அனுபவம் இல்லாவிட்டாலும் T20i போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதையும் செய்யும் வீரர்களைக் கொண்டுள்ளமையினால், லாஹூரில் எதுவும் நடக்கலாம்.

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 18 T20i போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 13 போட்டிகளின் வெற்றிகளை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளதுடன், வெறும் 5 போட்டிகளில் மாத்திரமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

தொடர்களின்படி பார்க்கும் போது, இரண்டு அணிகளும் 6 இருதரப்பு தொடர்களில் மோதியுள்ளன. இதில், 4 தொடர்களில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளதுடன், 2 தொடர்கள் சமனிலையில் முடிவுடைந்துள்ளன. இதில், இறுதியாக நடைபெற்ற (2017) தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என கைப்பற்றியிருந்தது.

யாருடனும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடத் தயாராக உள்ள குனத்திலக்க

உபாதைக்குப் பிறகு இலங்கை அணியில்…………

அதன்படி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி எந்தவொரு இருதரப்பு T20i  தொடரையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

  • தசுன் ஷானக

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தசுன் ஷானக எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார். இவர் குறைந்த போட்டிகளில் விளையாடியிருந்தாலும், இவரது வேகமான ஓட்டக்குவிப்பு T20i  போட்டிகளுக்கு அவசியமாகும்.

தசுன் ஷானக

குறிப்பாக, கடந்த காலங்களில் நடைபெற்றிருந்த உள்ளூர் மற்றும் இலங்கை அணிக்காக விளையாடிய போட்டிகளில் இவர் பிரகாசித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஓட்டங்களையும் குவித்துள்ளார். துடுப்பாட்டத்தில் மாத்திரமின்றி, இவரது மிதவேகப்பந்து வீச்சும் அணிக்கு தேவையான ஒன்றாகும்.

  • பாபர் அசாம் 

பாகிஸ்தான் அணிக்கு அனைத்துவகையான போட்டிகளிலும் ஓட்டங்களை குவிக்கக்கூடிய வீரர் பாபர் அசாம். கடந்த காலங்களில் மிகச்சிறந்த பெறுபேறுகளை இவர் அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நடந்துமுடிந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் சதம் கடந்து அசத்தியிருந்தார்.

பாபர் அசாம்

பாபர் அசாம் இதுவரையில் 30 T20i போட்டிகளில் விளையாடி, 54.21 என்ற சராசரியில், 1,247 ஓட்டங்களை குவித்துள்ளார். எனவே, இலங்கை அணிக்கு எதிரான T20i தொடரில் சவாலான வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

T20i தொடருக்கான அணிக் குழாம்கள்

இலங்கை குழாம்

தசுன் ஷானக (அணித் தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, மினோத் பானுக, கசுன் ராஜித, இசுரு உதான, அவிஷ்க பெர்னாண்டோ, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன், செஹான் ஜயசூரிய, சதீர சமரவிக்ரம, ஒசாத பெர்னாண்டோ, அஞ்செலோ பெரேரா, வனிது ஹசரங்க, நுவன் பிரதீப், பானுக ராஜபக்ஷ, லஹிரு மதுசங்க 

பாகிஸ்தான் குழாம்

அஹமட் சேஷாட், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), பக்கார் சமான், பஹீம் அஸ்ரப், பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல், ஆசிப் அலி, உமர் அக்மல், இமாத் வஸீம், மொஹமட் நவாஸ், இப்திகார் அஹ்மட், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹட் அமீர், மொஹமட் ஹஸ்னைன், உஸ்மான் ஷின்வாரி

ஒருநாள் தொடரையடுத்து T20i  தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று முடிந்துள்ளன. உலகின் முதற்தர T20i அணியை எதிர்கொள்ள இலங்கையின் அனுபவம் குறைந்த இளம் அணி தயாராகியுள்ளது. இந்த அணியை எதிர்கொள்வது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரும் சவால் இல்லாவிட்டாலும், இலங்கை அணி திடீர் அதிர்ச்சிகளை எதிரணிகளுக்கு வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே, இந்த தொடரானது மிகவும் சுவாரஷ்யமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவை அனைத்திற்கும் மேலாக பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களின் பின்னர் விருந்து படைக்கக் கூடிய ஒரு தொடராகவும் இந்த T20i தொடர் இடம்பெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<