தோல்வியிலும் சாதனை படைத்த ஷெஹான் ஜயசூரிய – தசுன் ஷானக்க ஜோடி

86
Sri Lanka's batsmen Dasun Shanaka (R) and Shehan Jayasuriya run between the wicket during the second one day international (ODI) cricket match between Pakistan and Sri Lanka at the National Cricket Stadium in Karachi on September 30, 2019. (Photo by ASIF HASSAN / AFP)

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 67 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றிவாகை சூடியுள்ளது.
எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் இலங்கையை சேர்ந்த ஷெஹான் ஜயசூரிய மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் இரண்டு சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.

ஷானக, ஷெஹானின் சாதனை இணைப்பாட்டம் வீண்

இலங்கை அணிக்கு எதிராக கராச்சி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள்…


பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடிவருகின்றது.

இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக எந்தவொரு பந்தும் வீசப்படாமல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், 29 ஆம் திகதி நடத்தப்படவிருந்த இரண்டாவது போட்டியும் 30 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரின் இரண்டாவது போட்டி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கராச்சியில் நேற்று (30) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

306 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள், பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களை சமாளிப்பதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டனர்.

இலங்கை அணியின் முதல் 5 விக்கெட்டுகளும் 28 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட

ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஷெஹான் ஜயசூரிய மற்றும் தசுன் ஷானக்க ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்காக 177 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் அணிக்கு போட்டியில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை அளித்தனர்.

எனினும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய  ஷெஹான் ஜயசூரிய 96 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது உஸ்மான் ஷின்வாரியின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் சர்ப்ராஸ் அஹமட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஷெஹான் ஜயசூரியவிற்கு பக்கபலமாக விளையாடிய தசுன் ஷானக்கவும் சதாப் கானின் பந்துவீச்சில் 68 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

இருவரும் ஆட்டமிழந்த பின்னர் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க தடுமாறிய இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

சங்கீத், கமிந்து அபாரம் ஆட்டம்: வலுவான நிலையில் இலங்கை A அணி

இலங்கை A கிரிக்கெட் அணிக்கும், பங்களாதேஷ் A கிரிக்கெட் அணிக்கும்…


போட்டியின் இறுதியில் 46.5 ஓவர்களை எதிர்கொண்ட இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.

இந்தப் போட்டியில் ஷெஹான் ஜயசூரிய மற்றும் தசுன் ஷானக்க ஜோடி மூலம் இரண்டு சாதனைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆறாவது விக்கெட்டுக்காக அதிக இணைப்பாட்டத்தை பெற்ற வீரர்கள் என்ற சாதனை இவர்கள் இருவர் வசமாகியுள்ளது. ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜெஃப் டுஜோன் ஆகியோர் இணைந்து இந்த சாதனையை படைத்திருந்தனர். இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்காக 154 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இந்த சாதனையையே ஷெஹான் ஜயசூரிய மற்றும் தசுன் ஷானக்க ஜோடி முறியடித்துள்ளது.

இதனைத் தவிர இலங்கை அணி சார்பில் ஆறாவது விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட சாதனையும் ஷெஹான் ஜயசூரிய மற்றும் தசுன் ஷானக்க ஜோடி வசமாகியுள்ளது.

ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சாமர கப்புகெதர மற்றும் சாமர சில்வா ஆகியோர் இணைந்து 159 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சாதனை படைத்திருந்தனர்.
அத்துடன் அணியொன்று ஐந்து விக்கெட்டுக்களை இழந்த பின்னர் பெற்றுக்கொண்ட அதிகூடிய இணைப்பாட்டமாகவும் இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க