நாம் எல்லா துறைகளிலும் தோல்வியை எதிர்கொண்டுள்ளோம் – மிஸ்பா உல் ஹக்

92
©AFP

இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான T20i தொடரை இழந்திருப்பதால், தனது அணி வீரர்கள் மீது நம்பிக்கை இழந்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், அதன் தேர்வாளர்களில் ஒருவருமான மிஸ்பா உல் ஹக் தெரிவித்திருக்கின்றார். 

இலங்கை அணிக்கு எதிரான T20i தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் 64 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்த தோல்விகளால் T20i தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இலங்கை கிரிக்கெட் அணி தொடரினை 2-0 என கைப்பற்றியிருக்கின்றது. 

நாம் இரண்டு போட்டிகளிலும் சிறந்த கிரிக்கெட் ஆடவில்லை – சர்பராஸ் அஹமட்

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது T20 ………

இவ்வாறாக இலங்கை அணிக்கு எதிராக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதன் காரணமாகவே மிஸ்பா உல் ஹக் தனது அணி வீரர்கள் மீது நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டிருக்கின்றார்.  

”தோற்பது என்பது எப்போதும் சிறந்த விடயம் கிடையாது. குறிப்பாக சிரேஷ்ட வீரர்கள் இல்லாத அணி ஒன்றுக்கு எதிராக தோற்பது எங்களது கண்களை திறக்கும் விடயமாக இருக்க வேண்டும்.” 

”பந்துவீச்சு, துடுப்பாட்டம் சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதம், பிந்திய (Death) ஓவர்கள் வீசும் விதம் என அனைத்திலும் (எங்களது தரப்பில்) ஒவ்வொரு பகுதியிலும் குறைபாடுகள் இருப்பதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.”  

பாகிஸ்தான் அணி நீண்டகால இடைவெளி ஒன்றின் பின்னர், அனுபவம் கொண்ட துடுப்பாட்ட வீரர்களான அஹமட் ஷேசாத் மற்றும் உமர் அக்மல் ஆகியோருக்கு வாய்ப்பினை வழங்கியிருந்தது. இவ்வீரர்கள் இலங்கை அணிக்கு எதிராக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் ஜொலிக்க தவறியிருக்கின்றனர். இவர்கள் ஏன் பாகிஸ்தான் அணிக்கு உள்வாங்கப்பட்டனர் எனக் கேட்டபோது மிஸ்பா உல் ஹக், இவ்வாறு பதில் தந்திருந்தார். 

”இரண்டு வீரர்களும், கடந்த ஒரு ஆண்டில் தாங்கள் எங்கு விளையாடினார்களோ அங்கு தமது சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அஹமட் ஷேசாத் பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, உமர் அக்மலின் ஆட்டமும் நல்லபடியாக இருந்தது.”

”T20i போட்டிகளினை எடுத்தும் போது, அவர்களை தவிர வேறு யாரும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியதாக நான் நினைத்திருக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே, நாம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தோம்.” 

உமர் அக்மல், அஹமட் ஷேசாத் ஆகிய இரண்டு வீரர்களும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு T20i போட்டிகளிலும் ஒற்றையிலக்க ஓட்டங்களையே பெற்று ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், அடுத்த ஆண்டு இடம்பெறும் T20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்த மிஸ்பா உல் ஹக், உலகக் கிண்ணத்திற்காக ஒரு குழாத்தை உருவாக்க பாகிஸ்தான் பரீட்சித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். 

”நாங்கள் போட்டியில் வெற்றியீட்டி தரக்கூடிய ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களை இனம் காண வேண்டியிருக்கின்றது. எங்களுக்கு பெரிதும் தங்கியிருக்க கூடிய துடுப்பாட்ட வீரர்கள் தேவை. அந்தவகையில், எமது ஓட்டங்களை அதிகரிக்ககூடிய வலுவான துடுப்பாட்ட வீரர்கள் தேவை. பந்துவீச்சினை பொறுத்தவரையில் நாம் முதல் ஓவர்களிலும் பிந்திய ஓவர்களிலும் விக்கெட்டுகளை சாய்க்ககூடிய வீரர்களை எதிர்பார்க்கின்றோம்.”

”எனினும், மொத்தமாக பார்க்கும் போது நாம் எல்லாத் துறைகளிலும் தோல்வியினையே சந்தித்திருக்கின்றோம். இந்த விடயத்தை நாங்கள் கட்டாயம் சரி செய்ய வேண்டியிருக்கின்றது. எங்களது பலம் என்னவோ நாங்கள் அதை கொண்டு ஆடியிருக்கவில்லை. நாங்கள் ஓரிரு துடுப்பாட்ட வீரர்களில் தங்காமல் அதனைவிட கூடிய பொறுப்புள்ள துடுப்பாட்ட வீரர்களில் தங்கவே எதிர்பார்க்கின்றோம்.” 

T20 தொடரை இழந்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கை அணிக்கு எதிராக ஆறுதல் வெற்றி ஒன்றினை எதிர்பார்த்து T20 தொடரின் கடைசி போட்டியில் புதன்கிழமை (9) லாஹூர் மைதானத்தில் வைத்து ஆடவுள்ளது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<