இந்தியாபாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆறு போட்டித் தொடர்களை நடத்துவதற்கு ஏற்கனவே .சி.சி அனுமதி வழங்கியிருந்தது. குறிப்பாக பொதுவான இடமொன்றில் கிரிக்கெட் தொடரொன்றை நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வந்திருந்த போதிலும், இந்திய அரசு அவ்வாறான போட்டித் தொடரொன்றை நடத்துவதற்கு தொடர்ந்த மறுப்பு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் ஐ.சி.சியில் அங்கம் வகிக்கின்ற அனைத்து நாடுகளும் 2017ஆம் – 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச போட்டி அட்டவணையை அறிவித்து வருகின்றன. இதன்படி கிரிக்கெட் உலகில் தற்பொழுது முன்னணியில் இருக்கின்ற நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இந்தியாவும் அடுத்த பருவகாலப் போட்டி அட்டவணையை நேற்று (01) அறிவித்தது. இதில் பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவிருந்த தொடரினால் ஏற்படுகின்ற வெற்றிடத்தை இலங்கைக்கு வழங்க இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சாதனை வெற்றிகளைப் பெற்ற SSC யில் இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை

காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து அசேல குணரத்ன மற்றும்…

இதேவேளை, கொல்கத்தாவில் நடைபெற்ற பி.சி.சி.ஐயின் போட்டி நிர்ணயக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அதன் செயலாளர் அமிதாப் சௌத்ரி கருத்து வெளியிடுகையில்,

”இலங்கை அணியுடனான போட்டித் தொடரை அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எனினும், மார்ச் மாத முற்பகுதியில் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. எனவே குறித்த தொடரை இவ்வருட இறுதியில் நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. எனவே ஐ.சி.சியின் வருடாந்த அட்டவணைப்படி பாகிஸ்தான் அணியுடனான இருதரப்பு கிரிக்கெட் தொடர் இடம்பெறாமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் இலங்கையுடன் விளையாட நாம் தீர்மானித்தோம்” என்றார்.

இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திரக் கிண்ண முத்தரப்பு தொடரில் இந்தியா பங்கேற்பதை உறுதி செய்த அவர், இலங்கை கிரிக்கெட்டுடன் இந்தியா எப்போதும் நல்லுறவைப் பேணி வருகின்றது.  எனவே குறித்த குறுகிய கால கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கை அணியுடனான போட்டித் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் நாடு திரும்பும் இந்திய அணியினர் எதிர்வரும் 3 மாதங்களில் உள்ளுரில் 23 சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தப் போட்டிகள் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டிசம்பர் வரை நடைபெறுகிறது. இதில் முதலாவதாக அவுஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வருகை தர உள்ளது. அந்த தொடர் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதைத் தொடர்ந்து 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து அணி இந்தியா வருகிறது. இந்த தொடர் ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து டிசம்பர் மாதத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்திய அணியை திணறடித்த இலங்கையின் துடுப்பாட்டம்

சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக, இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்ட குழு B இற்கான

இந்த பருவகாலத்தில் இந்திய அணி 3 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் ஒன்பது T20 போட்டிகளில் விளையாட உள்ளது. எனவே, டிசம்பர் மாதம் 3ஆம் வாரத்தில் இலங்கை தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட திட்டமிட்டுள்ளது. எனினும், குறித்த தொடரின் திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

4 மாத காலம் தொடர்ச்சியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குறித்த போட்டிகள் நடைபெற உள்ளதால் பல்வேறு மைதானங்களுக்கு போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அதிலும் குறிப்பாக அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள 3ஆவது T20 போட்டி, அசாம் மாநிலத்தின் குவஹாட்டியிலும், இலங்கை அணியுடனான முதலாவது T20 போட்டி கேரள மாநிலத்தின் திருவனந்தபுர கிரிக்கெட் மைதானத்திலும் முதற்தடவையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

அவுஸ்திரேலிய தொடர் (செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 11 வரை)
ஒரு நாள் போட்டிகள் (5) – சென்னை, பெங்களுரு, நாக்பூர், இந்தூர், கொல்கத்தா
T20 போட்டிகள் (3) – ஹைதரபாத், ரஞ்சி, குவஹாத்தி

நியுசிலாந்து தொடர் (ஒக்டோபர் 22 முதல் நவம்பர் 7 வரை)
ஒரு நாள் போட்டிகள் (3) – பூனே, மும்பை, கான்பூர்
T20 போட்டிகள் (3) – டெல்லி, கட்டாக், ராஜ்கோட்

இலங்கை தொடர் (நவம்பர் 15 முதல் டிசம்பர் 24 வரை)
டெஸ்ட் போட்டிகள் (3) – டெல்லி, கொல்கத்தா, நாக்பூர்
ஒரு நாள் போட்டிகள் (3) – தரம்சாலா, மொஹாலி, விசாகாப்பட்டணம்
T-20 போட்டிகள் (3) – கொச்சி (திவானந்தபுரம்), இந்துர், மும்பை