பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

191

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை அணி ஒரு வெள்ளி 5 வெண்கலம் உள்ளடங்களாக ஆறு பதக்கங்களைக் கைப்பற்றி பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட அதிகபட்ச பதக்கங்களாக இடம்பிடித்தது.

அதிலும் குறிப்பாக, போட்டியின் முதல் நாளிலேயே பளுதூக்கும் வீரர்கள் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுகொடுத்திருந்ததுடன், இரண்டாவது நாளிலும் பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை இந்திக்க திசாநாயக்க பெற்றுக்கொண்டார்.

‘ஈவா’ அகில இலங்கை வலைப்பந்து தொடர் ஜூன் 30இல் ஆரம்பம்

இந்நிலையில், குறித்த தினத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 53 கிலோகிராம் எடைப் பிரிவு பளுதூக்கலில் போட்டியிட்ட இலங்கையின் சமரி வர்ணகுலசூரிய, 172 கிலோ கிராம் எடையைத் தூக்கி தேசிய சாதனை படைத்தாலும், வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இறுதிநேரத்தில் துரதிஷ்டவசமாக தவறவிட்டார்.

சமரி வர்ணகுலசூரிய

குறித்த போட்டியில், ஸ்னெச் முறையில் 78 கிலோ கிராம் எடையைத் தூக்கிய அவர், கிளீன் அன்ட் ஜேர்க் முறையில் முதல் முயற்சியில் 94 கிலோகிராம் எடையைத் தூக்கினார். எனினும், 2 ஆவது மற்றும் 3 ஆவது முயற்சிகளில் 99 மற்றும் 104 கிலோகிராம் எடையைத் தூக்கி  தோல்வியைத் தழுவிய சமரிக்கு, தேசிய சாதனையுடன் 4 ஆவது இடத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இது இவ்வாறிருக்க, சமரியுடன் போட்டியிட்ட இந்திய வீராங்கனை சஞ்ஜிதா சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஆனாலும், போட்டிகள் நிறைவடைந்து ஒரு மாதங்களுக்குப் பிறகு உலக பளுதூக்குதல் சம்மேளனம் அவருடைய இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

அவ்வாறு எடுக்கப்பட்ட சஞ்ஜிதா சானுவின் மாதிரியில் தடைசெய்யப்பட்ட டெஸ்டோஸ்டெரோன் (testosterone) என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதனை உலக பளுதூக்குதல் சம்மேளனம் கடந்த 31 ஆம் திகதி அறிவித்தது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் சஞ்ஜிதா சானு தோல்வி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் அவர் பெற்றுக்கொண்ட தங்கப் பதக்கம் பறிபோவதோடு, போட்டித் தடையை எதிர்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

நட்பு ரீதியிலான அழைப்பு வலைப்பந்து சுற்றுத் தொடரின் சம்பியனாக இலங்கை

இது தொடர்பில் உலக பளுதூக்குதல் சம்மேளனம் வெளியிட்டிருந்த அறிக்கையில்,

இந்திய வீராங்கனை சஞ்ஜிதா சானுவின் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனை முடிவில் அவர் டெஸ்டோஸ்டெரோன் என்ற தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. எனவே ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்ஜிதா சானு அளித்த ஒரு பேட்டியில், ”நான் அப்பாவி. எந்தவித தவறும் செய்யவில்லை. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து எதுவும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் ஆதரவுடன் மேன்முறையீடு செய்வேன்” என்று தெரிவித்தார்

இந்நிலையில், சஞ்ஜிதா சானு ஊக்கமருந்து பயன்படுத்தினார் என்ற உலக பளுதூக்குதல் சம்மேளனத்தின் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்வோம் என இந்திய பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய பளுதூக்கல் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சஹ்தேவ் யாதவ் கூறுகையில், ”நாங்கள் முடிவைப் பெற்ற பிறகு, வழக்கில் வாதாட முன்னணி வழக்கறிஞரை வாடகைக்கு அமர்த்துவோம். சஞ்ஜிதா சானு எந்தவித ஊக்கமருந்தையும் எடுத்திருக்கமாட்டார் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். அவர் அப்பாவி என்பதை நாங்கள் நிரூபிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

  • Sanjita Chanu

முன்னதாக சஞ்ஜிதா சானு 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் போது பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இந்திய வீராங்கனை சஞ்ஜிதா சானு ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை வீராங்கனை சமரி வர்ணகுலசூரியவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளதுடன், பப்புவா நியூகினியா வீராங்கனை டிகா டோவா தங்கப் பதக்கதையும், கனடா வீராங்கனை ரேவல் லிபிலேன்க்-பெசினட் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொள்வர்.

இதன்படி, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் சமரிக்கு கிடைக்கவுள்ள பதக்கத்துடன் பளுதூக்குதல் போட்டியில் இலங்கை அணி ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கஙக்ளை வென்று மற்றுமொரு மைல்கல்லை எட்டியது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<