‘ஓற்றுமைக் கிண்ண’ கால்பந்தாட்ட தொடரில் பங்குபற்றும் இலங்கை

478
afc-solidarity-cup-official-draw

வளர்ந்து வரும் ஆசிய கால்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான முதலாவது “ஒற்றுமைக் கிண்ண” கால்பந்து சுற்றுத் தொடர் மலேசிய நாட்டில் நடைப்பெற உள்ளதாக ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் புதன்கிழமை அறிவித்தது.

இப்போட்டிகள் நவம்பர் 2ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைப்பெற உள்ளதாகவும், இதில் பங்குகொள்ளும் நாடுகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடாத்தப்படும் எனவும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்தது.

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஷேய்க் சல்மான் பின் இப்ராகிம் அல்  கலீபா இது குறித்து கருத்து தெரிவித்த பொழுது

“ஒற்றுமைக் கிண்ணமானது ஆசிய நாடுகளின் கால்பந்தாட்ட அபிவிருத்திக்கு ஒரு சிறந்த போட்டியாக அமையும். இப்போட்டித் தொடர் தொடர்பாக ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் மிகவும் ஆர்வமாக உள்ளது. எங்களுடைய நோக்கம் ஆசிய நாடுகளை கால்பந்தாட்டத்தில் வலுவாக்குதல் மற்றும் உலக நாடுகளை எதிர்கொள்ளும் தரத்திற்கு அவ்வணிகளை உயர்த்துதல் என்பனவாகும்” என்று குறிப்பிட்டார்.

இப்போட்டி தொடரனானது ஆசிய சம்மேளனத்தின் அங்கத்துவம் பெற்றுள்ள, ஆனால் ஆசிய சர்வதேச போட்டிகள் மற்றும் பிபா போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நாடுகளுக்கு சிறந்த போட்டி தன்மையுடைய தொடராக இருக்கும்.

ஆசிய ஒற்றுமைக் கிண்ணம் ஒரு தனித்தன்மை உடைய போட்டி தொடராகும். இதனுடைய நோக்கம் அங்கத்துவ நாடுகளை உலக தரத்திற்கு உயர்த்துவது மட்டுமல்லாது, கால்பந்தாட்டம் சம்பந்தமான திறன், கல்வி, பயிற்சி போன்றவற்றை அதிகரிப்பதும் ஆகும்.  அத்தோடு எதிர்காலத்தில் சர்வதேச நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதற்கு நாடுகளை தயார்படுத்தும் விதமாக அங்கத்துவ நாடுகளின் நிர்வாக குழுக்களுக்கு ‘நிகழ்ச்சி மேலாண்மை’ பயிற்சியும் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியிடப்பட்ட ஒற்றுமைக் கிண்ண சின்னத்தின் ஊடாக ஒற்றுமை, பலம், சக்தி, கூட்டு முயற்சி போன்ற இப்போட்டியின் முக்கிய பண்புகள்  வெளிக்காட்டப்பட்டன.

ஒற்றுமைக் கிண்ணம்

குழு ஏ யில் 5 அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நேபால், பாகிஸ்தான், புரூணை  ஆகியவை ஏ குழுவில் உள்ளடங்கியுள்ளதோடு எஞ்சிய இரண்டு அணியும் தெரிவுப் போட்டிகளின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளன. டிமோர் லெஸ்டெ அல்லது சைனீஸ் தாய்பேய் அணிகளில் ஒரு அணியும், பூட்டான் அல்லது பங்களாதேஷ் அணிகளில் ஒரு அணியும் இவ்விரண்டு இடத்தையும் நிரப்பும்.

குழு பி யில் இலங்கை, மக்காவு, மொங்கோலியா ஆகிய அணிகளும் மாலைதீவு அல்லது லாவோஸ் அணிகளில் ஒரு அணியும், உள்ளடங்கப்படவுள்ளன.

தெரிவுப் போட்டிகள் ஒக்டொபர் 11ஆம் திகதி முடிவடைய உள்ளதோடு, அதன் பின் போட்டிகளில் பங்குகொள்ளும் நாடுகள் உறுதிப்படுத்தப்படும்.

‘ஒற்றுமை (சொலிடாரிட்டி) என்ற பெயரின் அர்த்தத்தை போன்று இப்போட்டியும் அங்கத்துவ நாடுகளை ஒரு தனி நிகழ்வில் ஒன்றிணைக்கும்’ என ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் தெரிவித்தார்.

‘அபிவிருத்தியை நோக்காக கொண்ட இப்போட்டித் தொடரானது ஆசிய கால்பந்தாட்டத்தை புதிய தரத்திற்கு உயர்த்தும் ‘

மொத்தமாக 8 அல்லது 9 அணிகள் இப்போட்டி தொடரில் பங்குகொள்ளும். அவற்றில் இலங்கை, புரூணை, மக்காவு, நேபால், பாக்கிஸ்தான், மொங்கோலியா ஆகிய நாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ன. இந்த நாடுகள் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலக கோப்பை மற்றும், ஆசிய கிண்ண தெரிவு போட்டிகளிலும் இருந்தும் வெளியேற்றப்பட்ட நாடுகளாகும்.

மேலும் இரண்டு அல்லது மூன்று அணிகள் இப்போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட உள்ளன. லாவோஸ் அல்லது மாலைதீவு, சைனீஸ் தாய்பேய் அல்லது டிமோர் லெஸ்டெ மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் சில ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளில் இரண்டாம் சுற்றில் இருந்து வெளியேற்றப்படும். அவ்வாறு வெளியேற்றப்படும் நாடுகள் இப்போட்டிகளில் பங்கு கொள்ளும்.

ஆசிய கிண்ண தெரிவு போட்டிகளின் 2ஆம் சுற்றுக்கான போட்டிகள் 

மாலைதீவு – லாவோஸ், பூட்டான் – வங்காளதேசம், டிமோர் லெஸ்டெ – சைனீஸ் தாய்பேய் ஆகிய அணிகளுக்கிடையில் போட்டிகள் நடைபெறும். பூட்டான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டிகளில் பூட்டான் அணி தோல்வியுற்றாலும், விருப்பமின்மை காரணமாக அவ்வணி ஒற்றுமைக் கிண்ண தொடரில் பங்கு கொள்ளாது. எனவே, இரண்டு அணிகள் மட்டுமே ஒற்றுமைக் கிண்ண தொடரில் பங்குகொள்ளும்.

முதலாவது முறை  : 8 அணிகள் பங்குகொள்ளும் எனின் 

பூட்டான் அணி தோல்வியுறும் எனின் மொத்தமாக எட்டு அணிகள் போட்டிகளில் பங்குகொள்ளும். குழுவிற்கு 4 அணிகள் வீதம் 2 குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெரும். பின்னர் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் மோதும்.

இரண்டாவது முறை : 9 அணிகள் பங்குகொள்ளும் எனின் 

பூட்டான்  அணி பங்களாதேஷ் அணியுடன் வெற்றி கொள்ளும் எனின் 9 அணிகள் போட்டிகளில் பங்கு கொள்ளும். ஒரு குழுவிற்கு 4 அணி எனவும் அடுத்த குழுவிற்கு 5 அணி எனவும் 2 குழுக்கள் பிரிக்கப்படும். இரு குழுவிலும் வெற்றிப்பெறும் அணியானது இறுதி போட்டியில் மோதிக்கொள்ளும்.

ஆசிய தெரிவுப்போட்டியின் சுற்று 1க்கான அணிகள்  ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிபா வினால் வெளியிடப்பட்ட தரவரிசைக்கு ஏற்ப நிரற்படுத்தப்பட்டது.

Pot 1 : நேபால் (1ஆவது), இலங்கை (2ஆவது) Pot  2 : பாகிஸ்தான் (3ஆவது), மக்காவு (4ஆவது) Pot  3 : புரூணை (5ஆவது) மொங்கோலியா (6ஆவது)

ஆசிய தெரிவுப்போட்டி சுற்று 2 இல் உள்ள அணிகளுக்கு தர வரிசை இல்லை. அவ் அணிகள் Pot  4 இல் உள்ளடக்கப்படுவர்.

ஓற்றுமைக் கிண்ணம்

குழு A : நேபால், பாகிஸ்தான், புரூணை, டிமோர் லெஸ்டெ / சைனீஸ் தாய்பேய் , பங்களாதேஷ் / பூட்டான்

குழு B : இலங்கை, மக்காவு, மங்கோலியா , மாலைதீவு / லாவோஸ்

போட்டிகள் நவம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. இறுதிப் போட்டி 15ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.