ஜிம்பாப்வேயுடனான டெஸ்டில் அறிமுக வீரருடன் களமிறங்கும் இலங்கை

3530
Sri Lanka Test squad again zim

இலங்கை கிரிக்கெட் வாரியமானது, ஜிம்பாப்வே அணிக்கெதிராக வெளிக்கிழமை (14) ஆரம்பமாகவிருக்கும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களின் குழாத்தின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

மூன்று வகையான போட்டிகளிலும் இலங்கை அணித் தலைவர் பொறுப்பிலிருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் பதவி விலகியிருக்கும் காரணத்தினால், இலங்கை அணியின் டெஸ்ட் தலைவராக இனிவரும் காலங்களில் தினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார்.

மெதிவ்சின் பொறுப்பு தரங்க மற்றும் சந்திமாலுக்கு பிரித்து வழங்கப்பட்டது

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான…

இதனடிப்படையில் சந்திமால் ஜிம்பாப்வே அணியுடனான இந்த டெஸ்ட் தொடரின் மூலம் இலங்கை அணியின் டெஸ்ட் தலைவராக தனது பொறுப்பினை முதல் தடவையாக எடுத்துக்கொள்கின்றார்.

அறிவிக்கப்பட்டிருக்கும் அணியானது, 6 துடுப்பாட்ட வீரர்கள், 6 பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 சகல துறை ஆட்டக்காரர்கள் ஆகியோரினை உள்ளடக்கியிருக்கின்றது.

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களான தனன்ஞய டி சில்வா, நுவான் பிரதீப், விக்கும் சஞ்சய மற்றும் மலிந்த புஷ்பகுமார போன்ற வீரர்கள் இத்தொடரில் உள்வாங்கப்படவில்லை. அவர்களுக்கு பிரதியீடாக அஞ்செலோ  மெதிவ்ஸ், துஷ்மந்த சமீர, விஷ்வ பெர்னாந்து மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை டெஸ்ட் குழாத்தில் முதல் முறையாக வாய்ப்பு பெற்றிருக்கும் தனுஷ்க குணத்திலக்க இறுதியாக நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணியுடனான தொடரில், 5 போட்டிகளில் ஆடி 323 ஓட்டங்களினை குவித்திருந்தார். அதுவே, அவர் டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணியில் முதல் தடவையாக இணைக்கப்பட்டதற்கான காரணமாக அமைகின்றது.

முதல்தரப் போட்டிகளில் 31.77 என்கிற ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் குணத்திலக்க, ஒரு சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவும் காணப்படுகின்றார்.

அதோடு, காயம் காரணமாக நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாடாமல் இருந்த நுவான் பிரதீப்பிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட  துஷ்மந்த சமீரவும், விஷ்வ பெர்னாந்துவும் ஜிம்பாப்வே அணியுடனான இந்த தொடர் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள…

இதுவரையில், 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் சமீர, இறுதியாக தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். 206 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியடைந்த அந்தப் போட்டியில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே சமீர கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவராக மாறியிருக்கும் அஞ்செலோ மெதிவ்ஸ், இத்தொடரில் மிகப் பெரிய ஒரு பொறுப்பை விட்டுப் பிரிந்திருப்பதானது, அவரது திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதோடு பங்களாதேஷ் அணியுடனான தொடரில் பங்கேற்காத தனன்ஞய டி சில்வாவின் இடத்திற்குப் பதிலாக டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பினை பெற்றிருக்கும் சகல துறை வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ், இத்தொடரில் பந்து வீசசாளராக மீண்டும் செயற்படுவது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. எனவே, அவரினை ஒரு துடுப்பாட்ட வீரராக மாத்திரமே எதிர்பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணிக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம்

தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), உபுல் தரங்க, ரங்கன ஹேரத், அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, சுரங்க லக்மால், லஹிரு குமார, தில்ருவான் பெரேரா, லக்ஷன் சந்தகன், துஷ்மந்த சமீர, தனுஷ்க குணத்திலக்க, விஷ்வ பெர்னாந்து