2017ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடவிருக்கும் இலங்கை தேசிய அணியானது வியாழக்கிழமை (18) காலை இந்நாட்டு மக்கள் அனைவரினதும் கனவுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்த வண்ணம் இங்கிலாந்து செல்கின்றது. இதற்கு முன்னதாக, தேசிய அணியினை உத்தியோகபூர்வமாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வும், இறுதி ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பு மொவென்பிக் (Movenpick) ஹோட்டலில் புதன்கிழமை (17) நடைபெற்றிருந்தது.

“கடுமையான முயற்சிகளுடன் அமைந்த சிறந்த மதிப்பீடுகளின் பின்னர் தேர்வு செய்யப்பட்ட திறமைவாய்ந்த குழாம் இம்முறை எனக்கு தரப்பட்டிருக்கின்றது. மேலும் 15 நாட்கள் கடும் உழைப்புடன் கூடிய பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றோம். இதனால், நாங்கள் (சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக) எதிர்பார்த்த ஆயத்தத்தினைவிட அதிக ஆயத்தத்தில் உள்ளதாக நம்புகின்றேன். இப்போது நாங்கள் அங்கு சென்று எங்களது விளையாட்டினை காட்ட வேண்டியது மட்டுமே மிகுதியாக உள்ளது. (சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிற்கு முன்னதாக) இங்கிலாந்தில் போனஸாக எமக்கு கிடைத்திருக்கும் மேலதிக ஒரு வாரத்தில் விளையாடவுள்ள இரண்டு பயிற்சிப்போட்டிகள் எமது அணிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது.“

என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்திருந்தார்.

சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக வேண்டி இலங்கை குழாமிற்கு புதிதாக கண்டியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் செயற்திறன் மிக்க பயிற்சி மையத்தில் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் கிரகம் போர்ட் தலைமையின் கீழ் சிறப்பான முறையில் பயிற்சி வழங்கப்பட்டிருக்கின்றது.

புகைப்படங்கள் – ICC சம்பியன்ஸ் கிண்ணம் 2017 உத்தியோகபூர்வ புகைப்படம் மற்றும் ஊடகவியலாளர் மாநாடு

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தற்போது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடிக்கொண்டிருக்கும் லசித் மாலிங்க இந்தியாவில் தனது பங்களிப்பு முடிவடைந்தவுடன் இங்கிலாந்து பயணமாகி இலங்கை அணியுடன் இணையவிருக்கின்றார்.

“நாங்கள் ஓவல் மைதானத்தில் எங்களுக்குரிய இரண்டு குழுநிலை போட்டிகளை விளையாடுவது மிகவும் அதிர்ஷ்டமான விடயம் ஒன்றாகும். ஏனெனில் கோடை காலத்தின் ஆரம்பத்தில் சாதகமாக காணப்படக்கூடிய மைதான நிலைமைகளினை சரிவர உபயோகித்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எமக்கு இருப்பதை என்னால் பார்க்க முடிகின்றது. தொடரில் பெறப்போகும் ஓட்டங்கள் எப்போதும் அதிகமாகவே இருக்கும், அதுவும் எமக்கு பொருந்திப்போகும் ஒன்றாகும். ஆனால், இத்தொடரில் (எமது அணி) எந்தளவிற்கு சுழல் பந்துகளினை உபயோகப்படுத்த வேண்டி இருக்கின்றது என்பது என்னால் உறுதிப்படுத்த முடியாத ஒன்றாகும். ஏனெனில் தென்னாபிரிக்க அணிக்கு இம்ரான் தாஹிரும், இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினும் பெரும் பலமாக காணப்படுவார்கள். இத்தொடர் மூலம் நாங்கள் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிற்கான சிறந்த மைதானங்களையே எதிர்பார்க்கின்றோம்.“

என்று இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் கிரகம் போர்ட் இங்கிலாந்து நாட்டின் மைதானங்கள் பற்றி விபரிக்கும் போது குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அணியானது இந்த சுற்றுத்தொடரினை இம்மாதம் (மே) 21ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக நடைபெறும் இரண்டு ஒரு நாள் பயிற்சிப் போட்டிகள் மூலம் ஆரம்பிக்கின்றது. அதனை அடுத்து இலங்கை, அவுஸ்திரேலியா (மே 26) மற்றும் நியூசிலாந்து (மே 30) ஆகிய அணிகளுடன் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் பயிற்சிப் போட்டிகளில் விளையாடுகின்றது.

“நான் எனது விரல் உபாதையிலிருந்து 100% குணமடைந்திருக்கின்றேன். கண்டியில் இடம்பெற்ற பயிற்சி முகாம் மூலம் நான் பெற்றுக்கொண்ட அனுபவம் அணியுடன் ஒருமித்து செயற்பட உதவியாக இருக்கும். ஒவ்வொரு போட்டியும் எமக்கு மிக முக்கியமானதாக காணப்படும் ஏனெனில், இத்தொடரில் எந்தவிதமான தவறினையும் நாம் இழைத்துவிடும்படி செயற்பட்டுவிடக்கூடாது. தென்னாபிரிக்க அணியுடன் அவர்களது மண்ணில் நாம் அண்மையில் விளையாடியிருந்த தொடர் மூலம் அவ்வணியின் பலம், பலவீனம் என்பவற்றை தெரிந்து வைத்துள்ளோம். எனவே, இத்தொடரில் எமது முதல் இலக்கு அவர்களை வீழ்த்துவதே“

என உபாதை காரணமாக பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் மற்றும் T-20 தொடர்களில் விளையாடாதிருந்த நிரோஷன் திக்வெல்ல தனது தன்னம்பிக்கையினை வெளியிட்டு இருந்தார்.

உலகின் முதல் இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணியுடனும், நடப்புச் சம்பியன் இந்திய அணியுடனும் எதிர்பார்த்து கூற முடியாத பாகிஸ்தான் அணியுடனும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியானது குழு B இல் மோதுகின்றது.

இலங்கை அணியானது, 2002ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பலத்த மழை ஏற்பட்டிருந்ததன் காரணமாக, அவ்வருடத்திற்குரிய கிண்ணத்தினை இந்திய அணியுடன் பகிர்ந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“இந்த தொடரானது எனக்கும் எமது அணிக்கும் பெரும் சோதனைகளில் ஒன்றாக அமையவுள்ளது. கடந்த இரு வாரங்களிலும் இத்தொடரிற்காக கடுமையாக பயிற்சி பெற்றிருக்கின்றோம். இதன் மூலம், இத்தொடரிற்கு சிறப்பாக தயராகி இருக்கின்றோம் என எண்ணுகின்றேன். இன்னும் நான் இங்கிலாந்தில் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடிய பதிவினையும் கொண்டிருக்கின்றேன். உலகின் ஏனைய மைதானங்களை ஒப்பிடும் போது, இங்கிலாந்து நாட்டின் மைதானங்கள் பாரிய ஓட்டங்களைக் குவிக்க ஏதுவாக இருக்கின்றது. எனவே, நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணம் பொறிபறக்கும் தொடர்களில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.“

என இலங்கை அணியின் உப தலைவர் உபுல் தரங்க தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.

இலங்கை குழாம்

அஞ்சலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), உபுல் தரங்க (உப தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால், லசித் மாலிங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, அசேல குணரத்ன, சாமர கப்புகெதர, சுரங்க லக்மால், நுவன் குலசேகர, திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன, லக்‌ஷான் சந்தகன், நுவன் பிரதீப், அசங்க குருசிங்க – அணி முகாமையாளர், ரன்ஜித் பெர்னாந்து – தொடர் முகாமையாளர், கிரகம் போர்ட் – தலைமை பயிற்றுவிப்பாளர், அலன் டொனால்ட் – வேகப்பந்து வீச்சு ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளர், நிக் போத்துஸ் – களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர், நிக் லீ – பயிற்சி அளிப்பவர், அஜந்த வத்தேகம – உடற்பயிற்சியாளர், ஸ்ரீராம் சோமயஜூல –அணிப்பகுப்பாய்வாளர் (Analyst), ரொஹான் பிரியதர்ஷன – தசைவலிகளை சரி செய்பவர் (Masseur)

இலங்கை அணியின் சுற்றுத்தொடர் அட்டவணை

  • இலங்கை எதிர் தென்னாபிரிக்கா – ஜூன்  3 – ஓவல் மைதானம், லண்டன்
  • இலங்கை எதிர் இந்தியா –  ஜூன் 8 – ஓவல் மைதானம், லண்டன்
  • இலங்கை எதிர் பாகிஸ்தான் – ஜூன் 12 – கார்டிப் வேல்ஸ் மைதானம், கார்டிப்

ICC Champions Trophy 2017