கௌண்டி கிரிக்கெட்டில் கால் பதிக்கும் திமுத் கருணாரத்ன

873

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் தற்காலிக தலைவராக செயற்பட்டவருமான திமுத் கருணாரத்ன இங்கிலாந்து கௌண்டி (உள்ளூர்) கிரிக்கெட் தொடரில், ஹெம்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குசல் மெண்டிசின் துடுப்பாட்ட திறனை புகழும் ஸ்டீவ் ரிக்ஸன்

இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ….

டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுக்குப் பதிலாக இலங்கை அணியின் தலைவராக முதன்முறையாக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டார். தனது முதல் தொடரிலேயே, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று வெற்றியை இலங்கைக்கு அவர் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இலங்கை அணியை பொருத்தவரை சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வளம் வரும் திமுத் கருணாரத்ன, 2018ம் ஆண்டு 46 என்ற ஓட்ட சராசரியில் 743 ஓட்டங்களை குவித்ததுடன், கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்திருந்தார். இவ்வாறான சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியிருப்பதன் காரணமாக, ஹெம்ஷையர் அணி வெளிநாட்டு வீரர் என்ற அடிப்படையில் திமுத் கருணாரத்னவை அணியில் இணைத்துள்ளது.

ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள திமுத் கருணாரத்ன எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள T20 பிளாஸ்டிற்கு முன்னரான காலப்பகுதியில் ஹெம்ஷையர் அணிக்காக விளையாடுவார் என அணி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. T20 பிளாஸ்டிற்கு முன் நடைபெறும் கௌண்டி சம்பியன்ஷிப் மற்றும் றோயல் இலண்டன் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் அவர் விளையாடவுள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் மார்ச் மாத இறுதிப் பகுதியில் ஹெம்ஷையர் அணியுடன் திமுத் கருணாரத்ன இணையவுள்ளார் என அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியை பொருத்தவரை, முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவுக்கு அடுத்தப்படியாக கௌண்டி கிரிக்கெட் தொடரின் பிரிவு 1 (டிவிஷன் 1) போட்டிகளில் விளையாடவுள்ள முதல் வீரர் என்ற பெருமையை திமுத் கருணாரத்ன பெற்றுள்ளார். கௌண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடிய குமார் சங்கக்கார 2017ம் ஆண்டு முதற்தர போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். இதன் பின்னர் சீகுகே பிரசன்ன கௌண்டி தொடரில் விளையாடியிருந்த போதும், அவர் பிரிவு 2 போட்டிகளில் மாத்திரமே பங்கேற்றிருந்தார்.

இதேவேளை, கௌண்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள திமுத் கருணாரத்ன, “கௌண்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவு. அந்த கனவு நிறைவேறியதுடன், ஹெம்ஷையர் போன்ற அணிக்கு விளையாட கிடத்தமை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு சிறந்த முறையில் தேசிய அணிக்கு பங்களித்தமை போன்று, ஹெம்ஷையர் அணிக்காக எனது பங்கினை சிறந்த முறையில் வழங்குவதற்கு எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இலங்கை டெஸ்ட் அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தி வரும் திமுத் கருணாரத்ன, 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36.05 என்ற சராசரியில் 4,074 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 8 சதங்கள் மற்றும் 22 அரைச்சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<