பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 90 ஓட்டங்களால் படு தோல்வியடைந்திருக்கும் இலங்கை அணியானது நடைபெற இருக்கும் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை சமப்படுத்த பூரணமான ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கின்றது.

முதல் போட்டியில் இலங்கை அணியானது பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் மோசமாக செயற்பட்டிருந்த வேளையில் பங்களாதேஷ் அணியானது, ஏனைய வளர்ந்திருக்கும் சர்வதேச அணிகளின் ஆட்டத்தினைப் போல் திறமையாக செயற்பட்டிருந்தது.

இலங்கை

இரண்டாம் ஒரு நாள் போட்டியில் அணிக்குத் திரும்பி முன்வரிசை துடுப்பாட்டத்தினை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிரோஷன் திக்வெல்ல பயிற்சி ஆட்டத்தின் போது, தனது விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அணியில் இணைத்துக்கொள்ளப்படுவது சந்தேகமாகியுள்ளது. இதனால், தனஞ்சய டி சில்வாவிற்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக மோசமான ஆட்டத்தினை காண்பித்திருந்த சில்வா பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்றிருந்த ஒருநாள் பயிற்சிப்போட்டியில் அரைச்சதம் ஒன்றினை விளாசியிருந்தார்.

அதேபோன்று சில்வாவிற்கு பதிலாக (திக்வெல்லவின் ஓய்வினால்) மீண்டும் இலங்கை அணியின் ஆரம்ப வீரராக ஆடும் வாய்ப்பு தனுஷ்க குணதிலகவிற்கு நீடிக்கவும் வாய்ப்புண்டு. இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான ஒரு நாள் தொடரில் அதிக ஓட்டங்களினை குவித்திருந்த வீரரான குணதிலக முதல் போட்டியில் துரதிஷ்டவசமாக ஓட்டம் ஏதுமின்றி வெளியேறியிருந்தார். தனக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்து இரண்டாம் போட்டியில் சாதிப்பார் எனின் தேசிய அணியில் தொடர்ந்து நிலைத்திருக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டும்.

நிரோஷன் திக்வெல்லவிற்கு பதிலாக அணியில் சகல துறை ஆட்டக்காரர் தில்ருவான் பெரேரா இணைக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. தில்ருவான் பெரேரா பங்களாதேஷ் அணிக்கு அழுத்தம் தந்த வீரர்களில் ஒருவராவார்.

முதலாவது ஒரு நாள் போட்டியில் இரண்டு வருடங்களின் பின்னர் அரைச்சதம் ஒன்றினைப் பெற்றுக் கொண்டிருக்கும் திசர பெரேராவின் துடுப்பாட்டம் இரண்டாம் போட்டியில் இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். எனினும் அவரது பந்து வீச்சு அவ்வளவு சரியானதாக இருக்கவில்லை. அதே போன்று கடந்த போட்டியில் பந்தினை கையாள்வதில் சசித் பத்திரன சிக்கல்களை எதிர் கொண்டிருந்தார். எனினும், துடுப்பாட்டத்தில் அவர் ஒரு தடுப்பினை வெளிப்படுத்தி இருந்தார். அத்தோடு, இலங்கை அணியின் ஏனைய சகல துறை ஆட்டக்காரரான மிலிந்த சிறிவர்தன மோசமாக செயற்பட்டிருப்பது, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏன் தூய துடுப்பாட்ட வீரர் ஒருவரின் இடத்திற்கு பிரயோஜனம் இன்றிய ஒரு சகல துறை ஆட்டக்காரரை விளையாட வைக்கின்றது எனும் கேள்வியினை எழுப்புகின்றது.

மிலிந்த சிறிவர்தனவின் இடத்திற்கு பதிலாக இலங்கை சகல துறை ஆட்டக்காரர் ஒருவரினை எதிர்பார்க்கும் எனில் தில்ருவான் பெரேராவிற்கு வாய்ப்பு தரலாம்.

பந்து வீச்சு துறையில், முதலாவது ஒரு நாள் போட்டியில் லக்‌ஷான் சந்தகன் மற்றும் சுரங்க லக்மால் சிறப்பானதொரு பந்து வீச்சினை வெளிக்காட்டினர். லக்மால் அன்றைய போட்டியின் போது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக தனது அனைத்து ஓவர்களையும் முழுமையாக வீசத் தவறியிருந்தார்.

அத்துடன் அவரது காயம் சரிவராத நிலையில் இரண்டாம் போட்டிக்காக நுவன் குலசேகர மற்றும்  நுவன் பிரதீப் ஆகியோர் அணிக்கு இணைக்கப்பட்டுள்ளனர். இருவரில் ஒருவர் இலங்கை அணியின் பந்து வீச்சினை சரிவர கொண்டு செல்ல வேண்டும்.

அத்துடன் பங்களாஷ் அணி அதிக ஓட்டங்கள் பெறக்காரணமாய் அமைந்திருந்த லஹிரு குமாரவிற்கு பதிலாக விக்கும் சஞ்சயவிற்கு இரண்டாம் போட்டியில் வாய்ப்புத் தரலாம்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை குழாம்:

தனுஷ்க குணதிலக்க/தனஞ்சஞய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, தில்ருவான் பெரேரா, தினேஷ் சந்திமால், திசர பெரேரா, சசித் பத்திரன, நுவன் குலசேகர/நுவன் பிரதீப், விக்கும் சஞ்சய, லக்‌ஷான் சந்தகன்

பங்களாதேஷ்

சனிக்கிழமை நடைபெற்றிருந்த போட்டியில் முழு நிறைவான ஆட்டத்தினை வெளிக்காட்டிய பங்களாதேஷ் அணியினை, அப்போட்டிக்கு முன்பாக இருவாரங்களுக்கு முன்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியுடன் விண்ணுக்கு (மகிழ்ச்சியில்) சென்றிருந்தது. அவ்வணியினை இப்போட்டியின் மூலம் மீண்டும் பூமிக்கு இலங்கை அணி அழைத்து வரும் என நினைத்திருந்த அனைவரது முகங்களிலும் பங்களாதேஷ் அணி மீண்டும் கரியினை பூசியிருந்தது. இவ்வாறாக ஒரு உறுதியான அணியினை கொண்டிருக்கும் பங்களாதேஷ் இரண்டாவது போட்டியில் பாரிய மாற்றங்களை செய்யப் போவதில்லை.

பங்களாதேஷ் அணி இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயற்பட முக்கிய காரணியாக இருப்பது அவர்களின் மாறாத்தன்மையே, முக்கியமாக அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் சீராக ஓட்டங்களினை குவித்து வருகின்றனர். அத்துடன் அவ்வணிக்கு செளம்யா சர்க்கர் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோரும் மேலதிக உறுதியினை வழங்குகின்றனர்.

அத்துடன், அவ்வணியின் பந்து வீச்சு துறையும் கடந்த போட்டியில் விக்கெட்டுகளை சாய்த்திருந்த முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹமட் மற்றும் அணித்தலைவர் மசரபி மொர்தஸா ஆகியோரினால் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன், மெஹதி ஹஸனும் பந்து வீச்சுத்துறையினை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்வார். இதனால், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணிக்கு இலகுவாக எந்தவொரு பந்து வீச்சாளரும் இருக்கப் போவதில்லை.

இரு அணிகளுக்கு இடையிலும் வேறுபடுத்தி பார்க்க கூடிய ஒரு முக்கிய விடயம் என்னவெனில் இரு அணிகளதும் களத்தடுப்பு பாணி, கடந்த போட்டியில் இலங்கையின் மோசமான களத்தடுப்பினால் 20 இற்கு மேலான ஓட்டங்கள் எதிரணியினால் பெறப்பட்டிருந்தது. ஆனால், பங்களாதேஷ் அணியினால் மேற்கொள்ளப்பட்டிருந்த சிறந்த களத்தடுப்பு மூலம் இலங்கை அணிக்கு முதலாம் போட்டியில் அழுத்தம் வழங்கப்பட்டிருந்தது.

எதிர்பார்க்கப்படும் பங்களாதேஷ் அணி

செளம்யா சர்க்கர், தமிம் இக்பால், சபீர் ரஹ்மான், முஸ்பிகுர் ரஹீம், சகீப் அல் ஹஸன், மொசாதிக் ஹொசைன், மஹமதுல்லாஹ், மசரபி மொர்தஸா, மெஹதி ஹஸன், தஸ்கின் அஹமட், முஸ்தபிசுர் ரஹ்மான்