மட்டக்களப்பு மாவட்டத்தின் கூடைப்பந்து திருவிழாக்களில் ஒன்றான ஹேர்பேர்ட் கிண்ணத் தொடரின் ஏழாவது பருவகாலம் இன்று (28) கோலாகலமாக ஆரம்பமாகியது.

ஆண்டு தோறும்  ஏப்ரல் மாதம் 28 ஆம், 29 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் (கொழும்புக் கிளை) ஏற்பாடு செய்யப்பட்டு கூடைப்பந்தாட்ட கழகங்களுக்கு இடையில் நடைபெறும் இந்த போட்டித் தொடர் இம்முறை 20 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலைகளுக்காக புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கிலும், மியானி ஆண்கள் நகர மைதானத்திலும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தொடரில் நாடளாவிய ரீதியில் கூடைப்பந்தாட்ட விளையாட்டுக்கு பிரபல்யமாக இருக்கும் எட்டுப் பாடசாலைகள் (A,B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு) பங்குபற்றுகின்றன.

இந்தப் பருவகாலத்திற்கான ஹேர்பேர்ட் கிண்ணத்தின் முதல் நாளில் ஆறு குழு நிலைப் போட்டிகள் ஆரம்பமாகியிருந்ததுடன், அதில் தாம் பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிரடியான ஆரம்பத்தைக் காட்டியிருக்கின்றது.

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு எதிர் புனித மைக்கல் கல்லூரி, மட்டக்களப்பு

2018 ஆம் ஆண்டுக்கான ஹேர்பேர்ட் கிண்ணத்தின் முதல் ஆட்டமாக இடம்பெற்றிருந்த இப்போட்டியில் குழு A இனைச் சேர்ந்த கொழும்பு ஸாஹிரா கல்லூரியும், தொடரை நடாத்தும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியும் மோதியிருந்தது.

புதுப் பொலிவுடன் நடைபெறும் 2018ஆம் ஆண்டுக்கான ஹேர்பேர்ட் கிண்ணம்

புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கில் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் ஆரம்பமாகிய முதல் போட்டியில், இரண்டு அணியினரும் துரித கதியில் செயற்பட்டு புள்ளிகளைப் பெறத் தொடங்கினர். இரண்டு அணிகளுக்கும் புள்ளிகள் வேட்டையில் பெரும் போட்டி காணப்பட்ட போதிலும் முதல் கால்பகுதி ஒரு புள்ளி வித்தியாசத்தில் 14:15 என்ற புள்ளிகள் கணக்கில் ஸாஹிராவின் முன்னிலையுடன் முடிவடைந்தது.

இரண்டாம் கால்பகுதியில் மட்டக்களப்பு பாடசாலை அணியினர் மந்த கதியில் செயற்பட அவர்களால் 07 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது. மறுமுனையில் அபாரம் காட்டிய ஸாஹிரா கல்லூரி இப்பாதியில் 17 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டதால் ஆட்டத்தின் முதல் அரைப்பகுதி 22:32 என்ற புள்ளிகள் கணக்கில் மீண்டும் ஸாஹிராவின் முன்னிலையுடனேயே முடிந்தது.

மூன்றாம் கால்பகுதியில் தாம் எதிரணியினைவிட 10 புள்ளிகளால் பின்தங்கியிருப்பதை உணர்ந்த  புனித மைக்கல் கல்லூரியினர் அவர்களது தாக்குதல் வீரர்களின் செயற்பாடுகளினால் 18 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர்.  எனினும், இக்கால்பகுதியில் ஸாஹிரா கல்லூரி பெற்றுக் கொண்ட 17 புள்ளிகள் அவர்களை ஆட்டத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்க உதவியது.  

இறுதிக் கால்பகுதியிலும், முன்னைய சுற்றுக்களைப் போன்று புனித மைக்கல் கல்லூரி சிறப்பாக ஆடி  ஸாஹிராவை விட அதிகமாக புள்ளிகள் பெற்ற போதிலும் முன்னைய பாதிகளில் விட்ட தவறுகள் அவர்களுக்கு போட்டியை ஸாஹிராவுக்கு கொடுக்க காரணமாகிவிட்டது. இப்பாதியில் புனித மைக்கல் கல்லூரியினால் 15 புள்ளிகளும் ஸாஹிரா கல்லூரியினால் 11 புள்ளிகளும் பெறப்பட்டிருந்த நிலையில், ஸாஹிரா கல்லூரி 55:60 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை வெற்றிகொண்டது.


மஹிந்த கல்லூரி, காலி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

மியானி கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்ற குழு B அணிகளின் இந்த ஆட்டத்தில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும், காலி மஹிந்த கல்லூரியும் மோதியது.

ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் அசுர வேகத்தில் ஆடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 20 புள்ளிகளைப் பெற்றது. ஆனால் காலி அணியினர் 12 புள்ளிகளை மாத்திரமே பெற்றனர்.

இரண்டாம் கால்பகுதியிலும் மாரிஸ் ஸ்டெல்லாவின் ஆதிக்கம் நீடித்தது. இப்பகுதியில் 15 புள்ளிகளை அவர்கள் பெற, காலி பாடசாலை அணியினர் 09 புள்ளிகளை மாத்திரமே பெற்றனர். இதனால், ஆட்டத்தின் முதல் அரைப்பகுதி 35:21 என்ற புள்ளிகள் கணக்கில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் ஆதிக்கத்துடன் முடிவடைந்தது.

பின்னர் மூன்றாம் கால்பகுதியில் மஹிந்த கல்லூரி சற்று முன்னேற்றகரமாக ஆடி 11 புள்ளிகளைப் பெற்றது. இப்பாதியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 05 புள்ளிகளை மட்டும் பெற்றிருந்த போதிலும், அது அவர்களுக்கு மூன்றாம் கால்பகுதியில் முன்னிலை பெறப் போதுமாக இருந்தது. இதன்படி ஆட்டத்தின் மூன்றாம் கால்பகுதி 40:32  என்ற புள்ளிகள் கணக்கில் மாரிஸ் ஸ்டெல்லாவின் ஆதிக்கத்துடன் முடிந்தது.

இறுதிக் கால்பகுதியில் மீண்டும் ஆதிக்கத்தைத் தொடர்ந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 13 புள்ளிகளைப் பெற்றனர். ஆனால், மஹிந்த கல்லூரியினர் 05 புள்ளிகளை மாத்திரமே இம்முறை எடுத்தனர். இதன் அடிப்படையில் 53:37 என்ற புள்ளிகள் கணக்கில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஆட்டத்தின் வெற்றியாளர்களாக மாறினர்.


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

புனித மைக்கல் கல்லூரி அரங்கில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில், குழு A அணிகளான கண்டி திரித்துவக் கல்லூரியும் கொழும்பு வெஸ்லி கல்லூரியும் பங்கேற்றிருந்தன.

2020 இல் தியகமவில் சர்வதேச தரத்திலான விளையாட்டுத் தொகுதி

போட்டியின் முதல் கால்பகுதியில் திரித்துவக் கல்லூரி 12 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. மறுமுனையில் வெஸ்லி கல்லூரியினர் 9 புள்ளிகளையே சேர்த்தனர்.

இரண்டாம் கால்பகுதியிலும், இதே நிலைமை நீடித்தது. இப்பாதியில் மொத்தமாக திரித்துவக் கல்லூரி 19 புள்ளிகளையும், வெஸ்லி கல்லூரியினர் முதல் கால்பகுதி போன்று 9 புள்ளிகளை மாத்திரமே பெற்றனர். இதன்படி, ஆட்டத்தின் முதல் அரைப்பகுதி 31:18 என்ற புள்ளிகள் கணக்கில் திரித்துவக் கல்லூரியின் ஆதிக்கத்தோடு முடிந்தது.

மூன்றாம், நான்காம் கால்பகுதிகளில் மிகவும் திறமையான தடுப்பு வீரர்களை கொண்டிருந்த திரித்துவக் கல்லூரியைத் தாண்டி வெஸ்லி கல்லூரி அணியினர் புள்ளிகள் சேர்க்க மிகவும் சிரமப்பட்டனர். இந்த இரண்டு கால்பகுதிகளிலும் மொத்தமாக 18 புள்ளிகளை வெஸ்லி கல்லூரியினர் சேர்த்திருந்தனர். மறுமுனையில் இரண்டு கால்பகுதிகளிலும் 31 புள்ளிகளைச் சேர்த்த திரித்துவக் கல்லூரி அணியினர் 62:36 என்ற புள்ளிகள் கணக்கில் ஆட்டத்தின் வெற்றியாளர்களாக மாறினர்.


ஏஞ்சல் சர்வதேச பாடசாலை, யாழ்ப்பாணம் எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு

புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்ற B குழுவுக்கான இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியும், கொழும்பு புனித பேதுரு கல்லூரியும் மோதியிருந்தன.

இப்போட்டியின் முதலாம் மற்றும் இரண்டாம் கால்பகுதிகளில் யாழ்ப்பாணம் ஏஞ்சல் கல்லூரி அற்புதமாக ஆடி முதல் அரைப்பகுதியை தமக்கு சொந்தமாக்கியது. முதல் கால்பகுதியில் 23 புள்ளிகளை சேர்த்த யாழ்ப்பாண அணியினர் இரண்டாவது கால்பகுதியில் 20 புள்ளிகளையே பெற்றனர். மறுமுனையில் பேதுரு கல்லூரியினால் முதல் கால்பகுதியில் 17 புள்ளிகளையும் இரண்டாம் கால்பகுதியில் 18 புள்ளிகளையும் பெற்றிருந்தனர். இதனடிப்படையில் ஆட்டத்தின் முதல் அரைப்பகுதி 43:37 என்ற புள்ளிகள் கணக்கில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையின் முன்னிலையுடன் முடிந்தது.

மூன்றாம் கால்பகுதியில் இரண்டு பாடசாலைகளும் தலா, 15 புள்ளிகள் வீதம் பெற்றனர். இரண்டும் சம புள்ளிகளைப் பெற்றதால் மூன்றாம் கால்பகுதியும் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையின் முன்னிலையுடன் 58:52 என்ற புள்ளிகள் கணக்கில் முடிந்தது.

நான்காம் கால்பகுதியில் வேகத்தைக் காட்டிய பேதுரு கல்லூரியினரால் 14 புள்ளிகள் பெற முடிந்தது. எனினும், ஏஞ்சல் கல்லூரிக்கு இக்கால்பகுதியில் சேர்த்துக் கொண்ட 9 புள்ளிகளும் போட்டியில் வெற்றி பெற போதுமாக இருந்தது. எனவே, 67:64 என்ற புள்ளிகள்  கணக்கில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை வெற்றியாளர்களாக மாறியது.


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் ஸாஹிரா கல்லூரி, கொழும்பு

புனித மைக்கல் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற குழு A இற்கான இப்போட்டியில், திரித்துவக் கல்லூரியும் ஸாஹிரா கல்லூரியும் மோதின. இவ்விரண்டு அணிகளும் ஆட்டத்தின் முதல் நாளில் ஒவ்வொரு வெற்றிகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் திரித்துவக் கல்லூரி 13 புள்ளிகளையும், ஸாஹிரா கல்லூரியினர் 08 புள்ளிகளையும் பெற்றிருந்தனர்.

எனினும், இரண்டாம் கால்பகுதியில் சிறந்த தடுப்பினையும், தாக்குதல்களையும் காட்டிய ஸாஹிரா வீரர்கள் எதிரணிக்கு பதிலடி தந்தனர். இக்கால்பகுதியில் ஸாஹிரா கல்லூரியினால் 09 புள்ளிகள் பெறப்பட்டிருந்ததுடன், திரித்துவக் கல்லூரி வீரர்களினால் வெறும் 04 புள்ளிகள் மாத்திரமே பெறப்பட்டிருந்தது. இதனால், போட்டியின் முதல் அரைப்பகுதி 17:17 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளதும் சமநிலையில் முடிந்தது.

போட்டியின் மூன்றாம் கால்பகுதியில் உற்சாகமடைந்த ஸாஹிரா வீரர்கள் அதிரடியாக இம்முறை புள்ளிகள் சேர்க்கத் தொடங்கினர். இதன்படி 18 புள்ளிகளை இக்கால்பகுதியில் ஸாஹிராக் கல்லூரி பெற்றுக் கொண்டது. மறுமுனையில் திரித்துவக் கல்லூரியும் சவால்தரும் வகையில் செயற்பட்ட போதிலும் அவர்களால் 15 புள்ளிகளையே பெற முடிந்தது. இதன்படி, மூன்றாம் கால்பகுதியில் ஸாஹிரா கல்லூரி 35:32 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையத் தொடர்ந்தது.

போட்டியின் இறுதிக் கால்பகுதியில் ஆக்ரோஷமாக செயற்பட்டு திரித்துவ கல்லூரி 14 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும், ஸாஹிராவுக்கு கிடைத்த 11 புள்ளிகள் அவர்களை வெற்றியாளர்களாக மாற்ற போதுமாக இருந்தது.

இதன் மூலம், ஸாஹிரா கல்லூரி அணியினர் 44:46 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று ஹேர்பேர்ட் கிண்ண  முதல் நாளில் கிடைத்த இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தனர்.


புனித மைக்கல் கல்லூரி, மட்டக்களப்பு எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

தம்முடைய முதல் போட்டிகளில் தோல்வியைச் சந்திருந்த குழு A அணிகள் மோதியிருந்த இந்த ஆட்டமும் புனித மைக்கல் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

கிந்துஷனுக்கு இரட்டைத் தங்கம்: வேகநடையில் வட பகுதி வீரர்கள் அசத்தல்

இரண்டு அணிகளும் முதல் வெற்றியை எதிர்பார்த்த வண்ணம் போட்டியில் ஆடத் தொடங்கியிருந்தன.

தமது ரசிகர்கள் முன்னிலையில் அதிரடியாக செயற்பட்ட புனித மைக்கல் கல்லூரி அணியினர் 27 புள்ளிகளை முதல் கால்பகுதியில் பெற்று, இந்தப் பருவகால ஹேர்பேர்ட் கிண்ணத் தொடரின் ஆரம்ப நாளில் பாடசாலை ஒன்று முதல் கால்பகுதியில் பெற்ற அதிக புள்ளிகளை பதிந்தனர். ஆனால், வெஸ்லி கல்லூரியினர் 16 புள்ளிகளை மாத்திரமே பெற்றனர்.

எனினும், இரண்டாம் கால்பகுதியில் வெஸ்லி வீரர்கள் 17 புள்ளிகள் பெற்று இப்பகுதியைக் கைப்பற்றினர். இக்கால்பகுதியில் சற்று வேகத்தை இழந்த மைக்கல் கல்லூரியினரால் 11 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது. எனினும், ஆட்டத்தின் முதல் அரைப்பகுதியை 38:33 என்ற புள்ளிகள் கணக்கில் மைக்கல் கல்லூரியே தக்கவைத்திருந்தது.

மூன்றாம் கால்பகுதியில் தமது முன்னைய பாதியில் விட்ட தவறை திருத்திக் கொண்ட புனித மைக்கல் கல்லூரியினர் 18 புள்ளிகளை சேர்க்க, வெஸ்லி வீரர்களினால் 13 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது. எனவே, மூன்றாம் கால்பகுதியிலும் 56:49 என்ற புள்ளிகள் கணக்கில் புனித மைக்கல் கல்லூரி தமது முன்னிலையை நீடித்துக் கொண்டது.

இறுதி கால்பகுதியில் வெஸ்லி வீரர்கள் 13 புள்ளிகளை பெற்றனர். ஆனாலும், மைக்கல் கல்லூரிக்கு இக்கால்பகுதியில் கிடைத்த 10 புள்ளிகள் ஆட்டத்தில் அவர்களது முன்னிலையை நீடித்து, வெஸ்லி கல்லூரியை 66:59 எகிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி ஆரம்ப நாளில் முதல் வெற்றியைப் பதிவு செய்யவும் போதுமாக இருந்தது.