அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய செவன்ஸ் ரக்பி கிண்ணத்தின் இறுதி பாகம் இவ்வார இறுதியில் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை குழாம் கடந்த 10ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இலங்கை ரக்பி அணியின் முன்னாள் தலைவர் சுதர்ஷன முதுதந்திரி முன்னர் இடம்பெற்ற பாகங்களில் அணியில் உள்ளடக்கப்படாமல் இருந்த பொழுதும் இறுதி பாகத்திற்கு அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளார். இவரின் வருகை இலங்கை அணிக்கு புது ஊக்கம் அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. சுதர்ஷன முதுதந்திரி வருகை தந்தாலும், கடந்த இரு பாகங்களிலும்   தலைமை வகித்த தனுஷ்க ரஞ்சனே இறுதி பாகத்திற்கும் தலைமை வகிப்பார்.  காயம் காரணமாக தென் கொரியாவில் நடைப்பெற்ற இரண்டாம் பக்கத்தில் இருந்து விலகி இருந்த ஜேசன் திசாநாயக்க மற்றும் கெவின் டிக்சன் ஆகியோரும் குழாமில் இணைக்கப்பட்டமையானது இலங்கை அணிக்கு மேலும் வலுவூட்டியுள்ளது.

தலைமைத்துவத்தை பற்றி சுதர்ஷன முதுதந்திரி கருத்து தெரிவித்த பொழுதுதனுஷ்க ரஞ்சனின் தலைமைதுவத்தின் கீழ் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் முதல் இரண்டு பாகங்களிலும் இலங்கை அணியை வெற்றிகரமாக வழி நடத்தி அவர் தனது சிறந்த தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளார்.” என தெரிவித்தார்.

2ஆம் பாகத்திற்காக தென் கொரியாவிற்கு விஜயம் செய்த ஹிரந்த பெரேரா, சஷான் மொஹமட் மற்றும் சாலிய ஹந்தபாங்கொட ஆகியோரே இம்முறை குழாமில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களாக உள்ளனர். கடற்படை அணியின் சிறந்த வீரரான சாலிய ஹந்தபாங்கொட, கடந்த இரு பாகங்களிலும் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்திய பொழுதும், 2ஆம் பாகத்தின் இறுதி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்முறை குழாமில் அவர் உள்ளடக்கப்படவில்லை.

இலங்கைக்பி அணியின் முகாமையாளரான ரோஹன் சிந்தக Thepapare.com இடம் கருத்து தெரிவித்த பொழுது ”ஹொங் கொங்கில் நடைபெற்ற முதல் பாகத்திலும், தென் கொரியாவில் நடைப்பெற்ற இரண்டாவது பாகத்திலும் நாங்கள் முதலாமிடத்தை சிறு தவறுகளால் தவறவிட்டோம். ஆனால் இம்முறை சிறந்த குழாமொன்று நமக்கு காணப்படுகின்றது. ஆகவே இம்முறை தாய்நாட்டில் நாம் சிறப்பாக செயற்படுவோம் என எதிர்பார்க்கின்றேன்.” என தெரிவித்தார்.

இலங்கை குழாம்

தனுஷ்க ரஞ்சன் (தலைவர்) , ஸ்ரீநாத் சூரியபண்டார , ரிச்சர்ட் தர்மபால , துலாஜ் பெரேரா , தனுஷ் தயான் , காஞ்சன ராமநாயக்க , தரிந்த ரத்வத்த , கவிந்து பெரேரா, ஜேசன் திசாநாயக்க, கெவின் டிக்சன், சுதர்ஷன முதுதந்திரி, ஒமல்க குணரத்ன