இலங்கை தேசிய ரக்பி அணியின் முன்னாள் வீரருக்கு 2 வருட போட்டித்தடை

115

முன்னாள் இலங்கை தேசிய ரக்பி அணியின் வீரரும் தற்போதைய கண்டி விளையாட்டுக் கழகத்தின் வீரருமான விஸ்வமித்ர ஜயசிங்ஹவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சகல விதமான ரக்பி போட்டிகளிலும் பங்கேற்பதற்கு 2 வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஜூலை மாதம் நடந்த 47ஆவது வர்த்தக அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் போது போட்டி மத்தியஸ்தர் ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டதே 27 வயதான விஸ்வமித்ர ஜயசிங்ஹவின் இத்தடைக்கு காரணமாகும்.  

எக்செஸ் அணி (Access Group) சார்பாக விளையாடிய விஸ்வமித்ர ஜயசிங்ஹ வர்த்தக அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடரின் மாஸ் ஹோல்டிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதுடன் போட்டி நிறைவுற்றதன் பின்னர், அதிகாரி ஒருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  

மீண்டும் 5ஆம் இடத்துடன் தொடரை முடித்துக்கொண்ட இலங்கை ரக்பி அணி

விஸ்வமித்ர ஜயசிங்ஹவினால் தாக்குதலுக்கு உள்ளாகிய போட்டி மத்தியஸ்தர் சார்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அங்கு வரவழைக்கப்பட்ட ஜயசிங்ஹ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்.