பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 22 பேர் கொண்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 22 பேர் கொண்ட குழாத்தின் அடிப்படையில், உலகக் கிண்ணத்தில் இணைக்கப்பட்டிருந்த ஜீவன் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் குழாத்திலிருந்து  நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, உலகக் கிண்ண குழாத்தில் மேலதிக வீரர்களாக இணைக்கப்பட்டிருந்த அஞ்செலோ பெரேரா மற்றும் ஓஷத பெர்னாண்டோ ஆகியோரும் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட….

உலகக் கிண்ணத்தில் 3 போட்டிகளில் விளையாடிய ஜீவன் மெண்டிஸ் மொத்தமாக 19 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதுடன், விக்கெட்டுகள் எதனையும் வீழ்த்தவில்லை. அதேநேரம், சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளரான சுரங்க லக்மாலும் எந்தவித விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை என்பதுடன், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோரும் திறமையை வெளிப்படுத்த தவறியிருந்தனர்.

எனினும், இலங்கை அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, மிகச் சிறந்த முறையில் பந்துவீசி உலகக் கிண்ணத்தில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மொத்தமாக 225 ஒருநாள் போட்டிகளில் 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

“லசித் மாலிங்க மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம், மாலிங்க ஓய்வுபெறுவது குறித்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் இதுவரை கிடைக்கபெறவில்லை” என அசந்த டி மெல் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், உலகக் கிண்ணத் தொடருக்கான குழாத்தில் இடம்பெற தவறியிருந்த நிரோஷன் டிக்வெல்ல, தசுன் சானக, லஹிரு குமார, லஹிரு மதுஷங்க, தனுஷ்க குணதிலக்க மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகிய வீரர்கள் இந்த 22 பேர் கொண்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்திய A அணிக்கு எதிரான தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய நிரோஷன் டிக்வெல்ல 216 ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்துடன், இந்திய A அணிக்கு எதிரான தொடரில் 2 சதங்களுடன் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 320 ஓட்டங்களை பெற்ற ஷெஹான் ஜயசூரியவும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுழல் பந்துவீச்சினை பலப்படுத்தும் வகையில் லக்ஷான் சந்தகன், அகில தனன்ஜய மற்றும் அமில அபோன்சோ ஆகியோரும் இந்த குழாத்தில் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 28 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில்  அடுத்த இரண்டு போட்டிகளும் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளது.

மூன்று மாற்றங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய உலகக்…

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன, தனுஷ்க குணதிலக்க, லஹிரு மதுஷங்க, ஷெஹான் ஜயசூரிய, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, வனிது ஹசரங்க, லக்ஷான் சந்தகன், அமில அபோன்சோ, தசுன் சானக, திசர பெரேரா, இசுரு உதான, லசித் மாலிங்க,  கசுன் ராஜித, லஹிரு குமார, நுவான் பிரதீப்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<