அம்லா, டு ப்ளேசிஸ் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தோடு பயிற்சி போட்டி நிறைவு

630

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிகளுக்கு இடையில் கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்று வந்த இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இந்த சுற்றுப் பயணத்தில் முதல் கட்டமாக இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்த வாரம் விளையாடவிருக்கின்ற நிலையிலையே, இந்தப் பயிற்சிப் போட்டி நேற்றைய தினம் (07) ஆரம்பமாகியிருந்தது.

பயிற்சிப் போட்டியில் மெதிவ்ஸ், சில்வா, குணத்திக்க ஆகியோர் அரைச்சதம்

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்ட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி அஞ்செலோ மெதிவ்ஸ் (92), கெளஷால் சில்வா (76) மற்றும் தனுஷ்க குணத்திலக்க (53) ஆகியோரது அரைச்சதங்களின் துணையுடன் முதல் இன்னிங்சுக்காக 287 ஓட்டங்களை குவித்த பின்னர், தென்னாபிரிக்க அணி தமது முதல் இன்னிங்ஸில் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது. களத்தில் டீன் எல்கார் 14 ஓட்டங்களுடனுடம், ஹஷிம் அம்லா 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.

இன்று (08) போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளில் தென்னாபிரிக்க அணி 270 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்தது.

இன்றைய நாளில் தென்னாபிரிக்காவின் முதல் விக்கெட்டாக டீன் எல்கார் 42 ஓட்டங்களுடன் வேகப்பந்து வீச்சாளரான விகும் சஞ்சயவின் பந்துவீச்சுக்கு இரையாகியிருந்தார். எனினும், களத்தில் நின்ற அனுபவமிக்க ஹஷிம் அம்லா மற்றும் புதிதாக களம் வந்த வலதுகை துடுப்பாட்ட வீரரான டெம்பா பவுமா ஆகியோர் பெறுமதி மிக்க அரைச்சதங்களுடன் தென்னாபிரிக்க அணிக்கு வலுச்சேர்த்தனர். இதில் ஹஷிம் அம்லா 11 பெளண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தனது துடுப்பாட்டத்தை முடித்துக் கொண்டார். அம்லா போன்று மறுமுனையில் அரைச்சதம் தாண்டியிருந்த டெம்பா பவுமா 58 ஓட்டங்களோடு வனிது ஹஸரங்கவின் சுழலில் வீழ்ந்தார்.

இவர்களைஅடுத்து தென்னாபிரிக்க அணி இன்னுமொரு அரைச்சதத்துடன் வலுப்பெற்றது. இந்த அரைச்சதத்தை மத்திய வரிசையில் ஆடிய தென்னாபிரிக்க அணியின் தலைவர் பாப் டு ப்ளேசிஸ் பெற்றுத்தந்தார். கொஞ்சம் அதிரடியாகவே துடுப்பாடிய டு ப்ளேசிஸ் 13 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 85 பந்துகளுக்கு 79 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 21 வயதேயான இடதுகை சுழல் வீரர் லசித் அம்புல்தெனியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ச்சியான சதங்களுடன் இலங்கை A அணிக்காக பிரகாசித்து வரும் திரிமான்ன

டு ப்ளேசிஸின் விக்கெட்டை அடுத்து தென்னாபிரிக்காவின் ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிய நிலையில் அவ்வணி 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்சுக்காக 338 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணியின் பந்து வீச்சு சார்பாக வனிது ஹஸரங்க 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா மற்றும் லசித் அம்புல்தெனிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

தென்னாபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து அவ்வணி இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணியை விட 51 ஓட்டங்கள் முன்னிலையில் காணப்பட்ட போதிலும், இலங்கை கிரிக்கெட்  சபைத் தலைவர் பதினொருவர் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்க இரண்டாம் நாள் ஆட்டத்தில் நேரம் இல்லாத காரணத்தினால் போட்டி சமநிலையில் முடிந்தது.

ஸ்கோர் விபரம்

முடிவு – ஆட்டம் சமநிலையில் முடிந்தது.