ஜிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்குமான, 13 வீரர்களைக் கொண்ட இலங்கை வீரர்கள் குழாமை சனத் ஜயசூரிய தலைமையிலான தேசிய தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இம்மாதம் 30ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ள முதலாவது ஒரு நாள் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் இன்று காலி நோக்கி புறப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் மற்றொரு வாய்ப்பைப் பெற்ற அதிரடி வீரர் அசேல

இந்த வீரர்கள் தெரிவு குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குறுசிங்க கருத்து தெரிவிக்கும்பொழுது, காலி மைதானத்தின் தன்மை மற்றும் காலநிலை என்பவற்றை அவதானித்து நாம் இந்த குழாமை தெரிவு செய்துள்ளோம். குறித்த 13 பேரில் 6 துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமே உள்ளனர். சில சகலதுறை வீரர்களும் உள்ளனர். இக்குழாம் சிறந்த முறையில் செயற்படும் என்ற முழு நம்பிக்கை எமக்கு உள்ளதுஎன்றார்.

அணியின் சிரேஷ்ட வீரர்களான தினேஷ் சந்திமல், திஸர பெரேரா, சாமர கபுகெதர மற்றும் நுவன் குலசேகர ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த தனன்ஜய டி சில்வாவும் அணியில் இணைக்கப்படவில்லை. உபாதைக்கு உள்ளாகியுள்ள குசல் ஜனித் பெரேரா மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் வீரர்கள் தெரிவின்போது கருத்தில் கொள்ளப்படவில்லை.  

இந்த குழாம் குறித்து அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் கருத்து தெரிவிக்கையில், இக்குழாம் ஓரளவு பலமான நிலையில் உள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். ஜிம்பேப்வேயுடனான தொடரை எமக்கு வெற்றியுடன் ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளதுஎனத் தெரிவித்தார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான துஷ்மந்த சமீர சுமார் 18 மாதங்களின் பின்னர் மீண்டும் ஒரு நாள் போட்டிக்கான அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார். அவர், தனது முதுகில் ஏற்பட்டிருந்த உபாதையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீண்டு, தென்னாபிரிக்க அணியுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் 153 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை மாத்திரமே அவர் கைப்பற்றியிருந்தார்.  

கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற T-20 உலகக் கிண்ணத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஓப் ஸ்பின் பந்து வீச்சாளர் அகில தனன்ஜய குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகளில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இவர், இதுவரை 39 முதல்தர ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் லசித் மாலிங்க

அதேபோன்று, 19 வயதுடைய வலது கை சுழற்பந்து வீச்சாளரும், சகலதுறை வீரருமான ரிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் வீரர் வனிந்து ஹசரங்க அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர், பங்களாதேஷில் இடம்பெற்ற 19 வயதின் கீழ் இளையோருக்கான உலகக் கிண்ண அணி, 23 வயதின் கீழ்ப்பட்ட இலங்கை வளர்ந்து வரும் அணி என்பவற்றில் அங்கம் வகித்த வீரருமாவார்.

தற்பொழுது கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடி வரும் இவர், இதுவரை 12 முதல்தரப் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைச் சதங்கள் உள்ளடங்களாக 775 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மற்றுமொரு சகலதுறை வீரராகக் கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர் லஹிறு மதுசங்கவுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளரும் சிரேஷ்ட வீரருமான லசித் மாலிங்கவும் இக்குழாமில் பெயரிடப்பட்டுள்ளார். எனினும், இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் மாலிங்கவுக்கு போட்டித் தடை விதிக்கும் எனில், அவருக்குப் பதிலான அணியில் சுரங்க லக்மால் இணைத்துக்கொள்ளப்படுவார்.

இலங்கை குழாம்

அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, வனிந்து ஹஸரங்க, லஹிரு மதுஷங்க, அகில தனன்ஜய, லக்ஷன் சண்டகன், நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க (ஒழுக்காறு முடிவுக்கு ஏற்ப)