ஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடருக்காக இலங்கை அணி ஈரான் பயணம்

118

ஈரானின் தெப்ரிஸ் நகரில் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பன்னிரெண்டாவது ஆசிய கனிஷ்ட ஆண்கள் கரப்பந்தாட்டத் தொடரில் பங்ககேற்கவுள்ள இலங்கை அணி, நேற்று (26) ஈரான் நோக்கி பயணமாகியது.

ஆசிய கனிஷ்ட பெண்கள் கரப்பந்தாட்டத் தொடரில் சாதிக்குமா இலங்கை?

வியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெறவுள்ள 16 நாடுகளுக்கு இடையிலான..

எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜுலை 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்முறைப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் தலைவராக மாரவில புனித சேவியர் கல்லூரியின் யூ.என் மிலிந்த நிர்மால் செயற்படவுள்ளதுடன், அதே கல்லூரியைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் இலங்கை அணியைப் பிரதிநித்துவப்படுத்தவுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதேநேரம், இலங்கையின் கரப்பந்தாட்டப் போட்டிகளில் முன்னிலை பாடசாலைகளாக விளங்குகின்ற வென்னப்புவ ஜோசப் வாஸ் மற்றும் நாத்தான்டிய தம்மிஸ்ஸர கல்லூரிகளைப் பிரிதிநித்துவப்படுத்தி தலா இரண்டு வீரர்களும் இலங்கைக்காக விளையாடவுள்ளனர்.

சீனா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம், தென் கொரியா, சீன தாய்ப்பே, கஸகஸ்தான், இந்தியா, ஈரான், அவுஸ்திரேலியா, ஹொங்கொங், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட 18 ஆசிய நாடுகள் இம்முறை போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளன.

இதில் குழு சி இல் அவுஸ்திரேலியா, ஹொங்கொங் ஆகிய பிரபல நாடுகளுடன் இலங்கை அணி போட்டியிடவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி தமது முதல் போட்டியில் ஹொங்கொங் அணியை சந்திக்கவுள்ள இலங்கை அணி, ஜுலை முதலாம் திகதி அவுஸ்திரேலியாவையும் எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மாத்திரமே இலங்கைக்கு இரண்டாவது சுற்றில் விளையாடும் வாய்ப்பு கிட்டவுள்ளது.

எனினும், இம்முறைப் போட்டித் தொடரில் இறுதி எட்டு அணிகளுக்கு தெரிவாகுவதே தமது இலக்கு என இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் .எஸ் நாலக தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கை கரப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக சிசிர குமார வெண்டகோனும், உதவிப் பயிற்றுவிப்பாளராக நிஷான் இந்திக்கவும், உடற்கூற்று மருத்துவராக உபேந்திர பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் மூவரும் கல்வி அமைச்சினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த தொடரில் இலங்கை அணியை வழிநடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த வருடம் ஜப்பானில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கரப்பந்தாட்டப் போட்டியில் 18 நாடுகள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் இலங்கை அணி 12ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை கனிஷ்ட ஆண்கள் கரப்பந்தாட்ட அணி விபரம்

யூ.என் மிலிந்த நிர்மால், சமித் பிரமுதிக, அஷேன் மலின்த, தனுஷ்க கௌஷல்ய (மாரவில புனித சேவியர் கல்லூரி), தரூஷ சமத் டில்ஷான், துலான் சந்தீப பிரசாத் (வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி), எம்.எம்.எச் தனன்ஞய, ஆர்.கே.டீ.ஆர் அபிமன்சு (நாத்தான்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலை), மதுஷ சங்கல்ப விக்ரமசிங்க (கேகாலை சுவர்ண ஜயன்தி கல்லூரி), ருக்ஷான் துலன்த (சீதுவ தவிசமர கல்லூரி), தசுன் மதுவன்த (ஹுங்கம தேசிய பாடசாலை)

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<