பங்கபந்து தங்க கிண்ண தொடருக்கான இலங்கை குழாமில் புதிய வீரர்கள்

140

பங்களாதேஷில் இந்த மாதம் 15ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள பங்கபந்து தங்க கிண்ண சர்வதேச கால்பந்து தொடருக்கான இலங்கை குழாத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் இன்று (09) அறிவித்துள்ளது. 

மொஹமட் பசால் தலைமையிலான இந்த குழாத்தில், ஏற்கனவே தேசிய அணியில் இருந்த பல வீரர்கள் விலக்கப்பட்டுள்ள அதேவேளை, சில வருடங்களுக்கு முன்னர் தேசிய அணியில் விளையாடிய அனுபவம் பெற்ற சிரேஷ்ட வீரர்கள் உட்பட பல புதிய வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

Vantage FA கிண்ண காலிறுதி மோதல் விபரம்

Vantage FA கிண்ண கால்பந்து தொடரின்….

இதில், ஏற்கனவே தேசிய அணியில் ஆடிய அனுபவம் பெற்ற வட மாகாண வீரர்களான எடிசன் பிகுராடோ, ஞானரூபன் வினோத் ஆகியோருடன் அமித் குமாரவும் புதிதாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கான இலங்கை அணியில் ஆரம்பத்தில் இணைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சர்வான் ஜோஹரும் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். 

வட மாகாணத்தில் இருந்து தேசிய அணிக்குள் புது முக வீரராக உள்வாங்கப்பட்ட வீரராக இலங்கை சிறைச்சாலைகள் விளையாட்டுக் கழக வீரர் தர்மகுலநாதன் கஜகோபன் காணப்படுகின்றார். அதேவேளை, ஜேர்மனியில் தொழில்முறை கால்பந்து ஆடும் வசீம் ராசிக்கும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டள்ளார்.  

இதேவேளை, உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று மற்றும் தெற்காசிய விளையாட்டு விழா (SAG) என்பவற்றில் இறுதியாக ஆடிய சிரேஷ்ட வீரர்களான கோல் காப்பாளர் சுஜான் பெரேரா மற்றும் மத்திய பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸ் ஆகியோர் பங்கபந்து தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. 

குறிப்பாக, அண்மைக்காலங்களில் இலங்கை தேசிய அணிக்கு அரணாக இருந்து சிறந்த தடுப்புக்களை மேற்கொண்டு வந்த சுஜான் பெரேரா இந்த குழாத்தில் இல்லாமை அணிக்கு பெரிதும் பாதிப்பாக அமையலாம். அவருக்குப் பதிலாக, ஏற்கனவே தேசிய அணியில் ஆடிய அனுபவம் பெற்ற கோல் காப்பாளரான ருவன் அறுனசிறி பங்கபந்து தொடருக்கான குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தேசிய அணியில் உள்ள இளம் வீரர் ஜூட் சுபன் மற்றும் தற்போது மீண்டும் தேசிய குழாமில் பிரவேசித்துள்ள ஞானரூபன் வினோத் ஆகியோர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது நீண்ட இடைவெளியின் பின்னர் சகோதரர்கள் தேசிய குழாத்தில் ஒரே நேரத்தில் இணைந்த சந்தர்ப்பமாகும்.

இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் கபீர், அனீஸ் மற்றும் புவாட் ஆகிய சகோதரர்கள் இலங்கை தேசிய அணியில் ஒரே நேரத்தில் இடம்பிடித்திருந்தனர். அவர்கள் மூவரும் முதல் பதினொருவர் அணியில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இலங்கை குழாத்தில் இடம்பெற்ற இளம் வீரர்களான மொஹமட் ஆகிப், மொஹமட் முஸ்தாக், சசன்க டில்ஹார, நவீன் ஜூட், சமோத் டில்ஷான் ஆகியோருடன் அனுபவ வீரர் மதுஷான் டி சில்வாவும் இந்த புதிய குழாத்தில் தமக்கான இடத்தைப் பெறவில்லை.

பங்கபந்து தங்க கிண்ண தொடரில் இலங்கை, பங்காளதேஷ், பலஸ்தீன், மொரிசியஸ், புருண்டி மற்றும் சீசெல்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏ குழுவில் இலங்கையுடன் பங்களாதேஷ் மற்றும் பலஸ்தீன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

இலங்கை அணி தமது முதல் போட்டியில் பலஸ்தீனை இம்மாதம் 17ஆம் திகதியும், பங்களாதேஷை 19ஆம் திகதியும் எதிர்கொள்ளவுள்ளது.  

இலங்கை குழாம் 

மொஹமட் பசால் (அணித் தலைவர்), ஷரித்த ரத்னாயக்க, மொஹமட் இஷான், மனரம் பெரேரா, ஜூட் சுபன், மரியதாஸ் நிதர்சன், நிகலஸ் ஹர்ஷ பெர்னாண்டோ, சபீர் ரசூனியா, மொஹமட் சஹீல், ஷலன சமீர,  காலித் அஸ்மில், திலிப் பீரிஸ், அமித் குமார, லக்ஷான் தனன்ஜய, நுவன் அறுனசிறி, அமான் பைசர், நுவன் கிம்ஹான, தர்மகுலநாதன் கஜகோபன், சர்வான் ஜோஹர், எடிசன் பிகுராடோ, ஞானரூபன் வினோத், வசீம் ராசிக், சுந்தரராஜ் நிரேஷ் 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<