இலங்கையை வீழ்த்தி கனிஷ்ட ரக்பி உலகத் தொடருக்கு தெரிவான ஹொங்கொங்

137

கனிஷ்ட வீரர்களுக்கான ரக்பி உலகத் தொடரின் தகுதிகாண் ஆட்டமொன்றில் முதல் பாதியில் சிறப்பாக செயற்பட்ட போதிலும் ஹொங்கொங் கனிஷ்ட அணியின் பலமான ஆக்கிரமிப்பினால் இலங்கை கனிஷ்ட அணி 40-7 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

19 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஹொங்கொங் நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஹொங்கொங் கால்பந்து அரங்கில் இடம்பெற்றிருந்த இந்த இராண்டம் கட்டப் போட்டியில் தொடரின் நடப்பு சம்பியனான ஹொங்கொங் மற்றும் இலங்கை அணிகள் சனிக்கிழமை (16) மோதியிருந்தன.

ஹொங்கொங் அணி கொழும்பில் இடம்பெற்ற ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரின் முதல் கட்டப் போட்டிகளில் ஏற்கனவே இலங்கையை 37-8 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முதல் நிமிடங்களில் இலங்கை வீரர்கள் ஹொங்கொங் அணியின் பலமான பின்களத்துக்கு சவாலாக காணப்பட்ட போதிலும் ஹொங்கொங் அணியின் இளம் வீரர்களினாலேயே போட்டியில் முதல் புள்ளிகள் பெறப்பட்டிருந்தது. மார்கஸ் ரமகே வைத்த ட்ரையை, போல் அல்சியர் மேலதிக புள்ளிகளாக மாற்றியிருந்தார். (ஹொங்கொங் 7- 0 இலங்கை)

எனினும் தொடர்ந்து இலங்கை வீரர்கள் சில மாற்றங்களை செய்ததன் மூலம் போட்டியில் சம பலத்தை வெளிப்படுத்தினர்.

கடற்படை அதிர்ச்சி கொடுத்த CH&FC : தொடர் தோல்விக்கு முடிவு கட்டிய CR&FC

நிலைமை இவ்வாறு இருந்த போதிலும் ஹொங்கொங் அணியின் உப தலைவர் மெக்ஸ் டென்மார்க் சிறப்பான முறையில் எதிரணி வீரர்களைக் கடந்து வைத்த இரண்டாவது ட்ரையின் மூலம் தனது தரப்பை வலுப்படுத்தினார்.

எனினும், இலங்கை வீரர்களின் முயற்சிகளும் வீணாகவில்லை. 25 ஆவது நிமிடத்தில் சமோத் பெர்னாந்து வைத்த ட்ரையை அவரே கொன்வெரசன் மூலம் மேலதிக புள்ளிகளாக மாற்ற போட்டியின் முதல் பாதி நிறைவடையும் போது இலங்கை இளம் அணி உயிர்ப்படைந்து கொண்டது.

முதல் பாதி: ஹொங்கொங் 14 – 7 இலங்கை

முதல் பாதியில் இரண்டு அணிகளுக்கும் இடையில் போட்டித்தன்மை காணப்பட்ட போதிலும் இரண்டாம் பாதி அவ்வாறு அமைந்திருக்கவில்லை. இந்தப் பாதியில் ஹொங்கொங் அணியின் இளம் வீரர்கள் கலவரம் நடாத்தி புள்ளிகள் சேர்த்திருந்தனர்.

போட்டியின் ஆதிக்கத்தை மைதான சொந்தக்காரர்களான ஹொங்கொங் அணியே வைத்திருக்க போட்டி தமது கைமீறியதை இலங்கை வீரர்கள் உணர்ந்திருந்தனர். இவ்வாறனதொரு தருணத்தில் ஹொங்கொங் அணியின் ஜேய் கூக் மற்றும் கெல்லம் டாம் ஆகியோரினால் இரண்டு ட்ரைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒன்றை போல் அல்சியர் கொன்வர்சன் செய்து புள்ளிகளாக மாற்றியிருந்தார். (ஹொங்கொங் 33 – 7 இலங்கை)

போட்டியின் இறுதி ட்ரையை துரித கதியில் செயற்படும் மார்கஸ் ரமகே வைக்க, ஹொங்கொங் அணி கனிஷ்ட உலக ரக்பி தொடரில் பங்கெடுப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டது. (ஹொங்கொங் 40 – 7 இலங்கை)

கொழும்பு ஸாஹிரா ரக்பி அணியின் புதிய தலைவராக முஅம்மர் டீன்

இலங்கையின் இளம் வீரர்களுக்கும் இப்போட்டியை சமப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் கிடைத்திருந்த போதிலும் அதனை அவர்கள் சரியான முறையில் உபயோகம் செய்யத் தவறியிருந்தனர்.

அத்தோடு இலங்கை வீரர்கள் ஒரு  ஆறுதல் ட்ரை பெறும் முயற்சியையும்  மேற்கொண்டிருந்தனர். எனினும், அதை ஹொங்கொங் அணியின் ரமகே முறியடித்திருந்தார்.

இந்தப் போட்டியோடு சேர்த்து இரண்டு தோல்விகளுடன் இலங்கை கனிஷ்ட ரக்பி அணி இந்த வருடத்தை முடித்துக் கொள்ள, ஹொங்கொங் உருகுவேயில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கனிஷ்ட வீரர்களுக்கான உலக ரக்பி தொடரில் பங்கேற்கும் அணியாக மாறிக் கொள்கின்றது.

முழு நேரம் : ஹொங்கொங் 40 (6T, 5C) – இலங்கை 7 (1T, 1C)

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: போல் அல்சியர்

புள்ளிகள் பெற்றோர்

ஹொங்கொங் – மார்கஸ் ரமகே (2T), மெக்ஸ் டென்மார்க் (1T), ஜேய் கூக் (1T), கெல்லம் டாம் (1T), போல் அல்சியர் (1T, 5C)

இலங்கை – சமோத் பெர்னாந்து (1T, 1C)