இலங்கை வளர்ந்துவரும் ஒருநாள் அணித்தலைவராக சந்திமால்

1245

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியுடனான மூன்று போட்டிள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு தினேஷ் சந்திமால் தலைமை வகிக்கவுள்ளார்.

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் தொடரை கௌஷால் சில்வா தலைமையிலான இலங்கை வளர்ந்து வரும் அணி 1-0 என வென்றது.  

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளும் ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் தம்புள்ளையில் நடைபெறவிருப்பதோடு கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போராடித் தோல்வியை தவிர்த்த இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு தொடர் வெற்றி

போட்டி உணர்வுக்கு எதிரான நடத்தையை வெளிக்காட்டிய மூன்றாம் நிலை குற்றத்திற்காக மேற்கிந்திய தீவுகளில் செயின்ட் லூசியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.   

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவுடன் தற்போது இலங்கை ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவும் இலங்கை வளர்ந்து வரும் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் இதுவரை விளையாடாத ஷானக்க எதிர்வரும் நான்கு மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாத பட்சத்தில் அவர் தம்புள்ளை சென்று இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது.    

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் கடைசியாக விளையாடிய அசேல குணரத்ன இந்த குழாமில் இடம்பெற்றுள்ளார். குணரத்ன களத்தடுப்பு பயிற்சியின் போது தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண தொடரில் இருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வளர்ந்து வரும் ஒருநாள் குழாம் – தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, அசேல குணரத்ன, ஷம்மு அஷான், சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, ஜெஹான் டானியல், நிஷான் பீரிஸ், ஜெப்ரி வென்டர்சே, அமில அபொன்சோ, ஷெஹான் மதுஷங்க, அசித்த பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ

மேலதிக வீரர்கள் – ஓஷத பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, நிசல தாரக்க

போட்டி அட்டவணை

  • முதலாவது ஒருநாள் போட்டி – தம்புள்ளை – ஆகஸ்ட் 9ஆம் திகதி
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – தம்புள்ளை – ஆகஸ்ட் 11ஆம் திகதி
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – SSC மைதானம் – ஆகஸ்ட் 14ஆம் திகதி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க