போர்டுனின் சுழலில் சுருண்டது இலங்கை அபிவிருத்தி அணி

187

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியுடன்  மோதி தோல்வியை தழுவினர். இது சென்வஸ் பார்க்  மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும்  அணியினர் தனது முதலாவது இனிங்ஸ் முடிவில்  சகல விக்கட்டுகளையும் இழந்து 394 ஓட்டங்களைப் பெற்றனர். ஸ்மித் முதல் இனிங்ஸ் முடிவில் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கலாக 124 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து 1ஆவது இனிங்ஸில் களமிறங்கிய இலங்கை அபிவிருத்தி அணியினர்  315 ஓட்டங்களுக்கு  சகல விக்கட்டுகளயும் இழந்தனர் சதுரங்க ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள குவித்தார். சந்துன் வீரக்கொடி 56 ஓட்டங்களை பெற்ற நிலையில் போர்டுன் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்கப்பட்டார். போர்டுன் 103 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். சிக்கவிலி 90 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

3ஆவது நாளில் 2ஆவது இனிங்ஸைத் தொடர்ந்த தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியினர் அபோன்சோவின் பலத்த பந்துவீச்சில் 266 ஓட்டங்களுக்கு சுருண்டனர். இதில் மீண்டும் ஸ்மித் 87, டு ப்ளூய் 53 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் அமிலோ அபோன்சோ 112 ஓட்டங்களைக் கொடுத்து 8 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். 346 ஓட்ட இலக்கைக் கொண்டு மீண்டும் தனது 2ஆவது இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அபிவிருத்தி அணியினர் 2 விக்கட்டுகளை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 3ஆவது நாள் நிறைவடைந்தது. களத்தில் மிலந்த 35, புத்திகே 26  ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றனர்.

நான்காவதும் இறுதியுமான நாளான நேற்று ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அபிவிருத்தி அணியினர் போர்டுன் அபாரப் பந்து வீச்சின் காரணமாக சகல விக்கட்டுகளயும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தனர். அதிக பட்சமாக அணித்தலைவர் 50 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அபோன்சோ 44 ஓட்டங்களைப் பெற்றார். தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி சார்பாகப் பந்து வீச்சில் போர்டுன் 98 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளைக் கைப்பற்றி தனது அணிக்கு வெற்றியை வழங்கினார்.

போட்டியின் சுருக்கம் :

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி – 394
ஸ்மித் 124* ,டு ப்ளூய் 46, கோமாரி 43, மகன்யா 30, குருக்கர் 59*
அமிலோ அபோன்சோ 5/95, விஜேரத்தன 2/76, சதுரங்க 1/92, புத்திக்க 1/29

இலங்கை அபிவிருத்தி அணியினர் – 315
சஞ்சய சதுரங்க 86*, சந்துன் வீரக்கொடி 56, அணுக் பெர்னாண்டோ 39
போர்டுன் 7/103, சிக்கவிலி 2/90, சிமித் 1/21

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி – 266
ஸ்மித் 87 , டு ப்ளூய் 53, கோமாரி 29, அக்கர்மன் 31
அமிலோ அபோன்சோ 8/112, பெர்னாண்டோ 1/19, புத்திக்க 1/66

இலங்கை அபிவிருத்தி அணியினர் – 224
மிலந்த 35, புத்திகே 50, அபோன்சோ 44
போர்டுன் 5/98, சிக்கவிலி 1/25, மகன்யா 2/32

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியினர் 121 ஓட்டங்களால் வெற்றியடைந்தனர்.