பிரமோத்யவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இலங்கை வீரர்கள் கோரிக்கை

579

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் அணித் தேர்வாளருமான பிரமோத்ய விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இயற்கைக்கு மாறான மற்றும் மர்மமான போட்டி முறை பற்றிய அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி 40 ஒப்பந்த வீரர்கள் உட்பட இலங்கை தேசிய அணி வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எமது வீரர்களின் பாதுகாப்பே மிகவும் முக்கியம் : இலங்கை கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தானின் லாஹூர் நகரில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இலங்கை – பாகிஸ்தான்..

இலங்கை அணித் தலைவர்களான தினேஷ் சந்திமால் மற்றும் உபுல் தரங்க உட்பட வீரர்கள் கையொப்பமிட்டு இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) வழங்கிய மனுவில், பிரமோத்யவின் கூற்று பற்றி அவதானம் செலுத்தும்படி கோரப்பட்டுள்ளது.

பிரமோத்ய விக்ரமசிங்க தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த அறிவிப்பு அதிர்ச்சியூட்டுவதாகவும், புன்படுத்துவதாகவும் உள்ளது. அது பொதுமக்கள் முன் எம்மீது ஒரு சந்தேகப் பார்வையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று இலங்கை தேசிய அணி வீரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இயற்கைக்கு மாறான மற்றும் மர்மமான போட்டி முறை பற்றி விக்ரமசிங்க சுமத்தும் ஒன்பது விடயங்கள் குறித்து வீரர்கள் அவதானத்தை வெளியிட்டுள்ளதுடன் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று அதனை வீரர்கள் நிராகரித்துமுள்ளனர்.

வெற்றி என்ற இறுதி இலக்குக்காக, தமது குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தையும் தியாகம் செய்து, 200 மடங்கு அர்ப்பணிப்புடன், வீரர்கள் தேசிய கொடியின் கீழ் தமது தாய் நாட்டுக்காக விளையாடுகின்றனர் என்று தேசிய அணி வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவதூறு கொண்ட இந்த கொடூரமான குற்றச்சட்டால் தமது நற்பெயர்களுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைக்க விக்ரமசிங்கவை அழைத்து உடன் விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் சபையை வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தான் சுமத்தும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்படியும் இலங்கை கிரிக்கெட் தேசிய அணி வீரர்கள் விக்ரமசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.