நியூசிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் வலுவடைந்துள்ள இலங்கை தரப்பு

4205

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தரப்பு இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம மற்றும் அஷான் பிரியன்ஜனின் அரைச் சதங்களின் உதவியுடன் வலுவான நிலையை அடைந்தது. 

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸ்

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர்  அணிகளுக்கிடையிலான 3 நாட்கள் கொண்ட முதலாவது பயிற்சிப் போட்டி இன்று (08) கட்டுநாயக்கவில் ஆரம்பமாகியது

கொழும்பை அண்மித்த பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக போட்டியின் நாணய சுழற்சி மதிய போசன இடைவேளையின் பின்னரே இடம்பெற்றிருந்தது. அதில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் ஷான் பிரியன்ஜன் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்திருந்தார்

Photos: Sri Lanka Board President’s XI vs New Zealand | Tour Match – Day 1

இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்காக சதீர சமரவிக்ரம மற்றும் தனுஷ் குணத்திலக்க ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்தனர்.

தொடக்க வீரர்கள் இருவரினாலும் முதல் விக்கெட்டுக்காக 154 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டிருந்தது. எனினும், நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்த சதீர சமரவிக்ரமவின் விக்கெட் அஜாஸ் பட்டேலினால் கைப்பற்றப்பட்டிருந்தது. ஆட்டமிழக்கும் போது சதீர சமரவிக்ரம 90 பந்துகளுக்கு 13 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தேநீர் இடைவேளைக்கு முன் இலங்கையின் மேலும் இரண்டு விக்கெட்டுக்கள் குறுகிய ஓட்டங்களுக்குள் பறிபோயிருந்தன. இதில் ஓசத பெர்னாண்டோ 4 ஓட்டங்களுடனும், பானுக ராஜபக் ஓட்டமேதுமின்றியும் ஓய்வறை திரும்பினர்.

மூன்று முக்கியமான மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களையும் பறிகொடுத்த இலங்கை அணி தேநீர் இடைவேளைக்கு போட்டி நிறுத்தப்படும் போது 194 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது

தேநீர் இடைவேளையை அடுத்து தனுஷ் குணதிலக்கவுடன் ஜோடி சேர்ந்த அஞ்சலோ பெரேரா நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் மாற்றம் ஏற்படலாம் – திமுத்

நிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 4ஆவது விக்கெட்டுகாக 37  ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, தனுஷ் குணதிலக்க 98 ஓட்டங்களைப் பெற்று 2 ஓட்டங்களினால் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்

இதனைத்தொடர்ந்து அஞ்செலோ பெரேரா 32 ஓட்டங்களை எடுத்த நிலையில் அஜாஸ் பட்டேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்

அடுத்து அணித் தலைவர் ஷான் பிரியன்ஜன் இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்கவுடன் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 6ஆவது விக்கெட்டுக்கு 81 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் பெதும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களை எடுத்து வில்லியம் சொமர்வில்லின் பந்துவீச்சில் வெளியேறினார்

இறுதியில் ஷான் பிரியன்ஜனின் அரைச் சதத்தின் உதவியோடு இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, போதிய வெளிச்சமிண்மை காரணமாக போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்ஸுக்காக 65.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 323 ஓட்டங்களை எடுத்தது

Photos: Joint Media Conference – Launching of the Sri Lanka vs New Zealand Cricket Series

இதன்போது, அஷான் பிரியன்ஜன் 56 ஓட்டங்களையும், மினோத் பானுக 14 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்று களத்தில் இருந்தனர்

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான அஜாஸ் பட்டேல் 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்

நாளை (09) போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<