காலி அணிக்கெதிராக இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்த பாணந்துறை அணி

89

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டு உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் 6 ஆவது வாரத்திற்கான போட்டிகள் அனைத்தும் இன்று (21) நிறைவுக்கு வந்தன.

காலி கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

காசிப் நவீடின் அபார சதம் மற்றும் தனுஷ்க பண்டார, சமீர மதுஷானின் அபார பந்துவீச்சின் உதவியுடன் காலி அணிக்கு எதிராக அதன் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் பாணந்துறை விளையாட்டுக் கழகம் வெற்றியைப் பதிவுசெய்தது.

காசிப் நவீடின் சதத்தின் உதவியுடன் காலி அணிக்கு எதிரான போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழகம் தமது முதல் இன்னிங்சிற்காக 433 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இப்பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரில் காசிப் நவீட் பெற்றுக் கொண்ட 2 ஆவது சதம் இதுவாகும்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி, தமது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அசந்த பெர்னாண்டோ அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

காசிப் நவீடின் சதத்தால் பாணந்துறை அணி முன்னிலையில்

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாணந்துறை அணி, காசிப் நவீடின் 159 ஓட்டங்கள், சுரேஷ் பீரிஸ் மற்றும் ரசிக்க பெர்னாந்துவின் அரைச் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 433 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் காலி அணி சார்பாக கயான் சிறிசோம 4 விக்கெட்டுக்களையும், கொஹார் பாயிஸ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து 216 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய காலி அணி, 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியது. தனுஷ்க பண்டார மற்றும் சமீர மதுஷான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பாணந்துறை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 217 (62.1) – அசந்த பெர்னாந்து 55, சரித புத்திக 42, கயான் சிறிசோம 30, மொஹமட் ரமீஸ் 2/31, சமிந்திர மதுஷன் 2/43, வினோத் பெரேரா 4/44

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 433 (112.1) – காசிப் நவீட் 159,  சுரேஷ் பீரிஸ் 84, ரசிக்க பெர்னாந்து 64, அஷேன் கவிந்த 42, கயான் சிறிசோம 4/102,  கொஹார் பாயிஸ் 3/135

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 191 (44.2) – தமித்த ஹுனுகும்புர 70, சரித புத்திக 27, தனுஷ்க பண்டார 4/41, சமீர மதுஷான் 4/59

முடிவு – பாணந்துறை விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் வெற்றி


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர சபை விளையாட்டுக் கழகம்

எரங்க ரத்னாயக்க மற்றும் நிலூஷன் நோனிஸின் சதங்களின் உதவியால் லங்கன் அணிக்கு எதிரான போட்டியை, களுத்துறை நகர சபை அணி சமநிலையில் முடித்துக் கொண்டது

மக்கொன சர்ரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய லங்கன் கிரிக்கெட் கழகம், தமது முதல் இன்னிங்ஸிற்காக 8 விக்கெட்டுக்களை இழந்து 534 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக சஷின் பெர்ணாந்து (122 ஓட்டங்கள்) மற்றும் லக்‌ஷான் ரொட்ரிகோ (121 ஓட்டங்கள்) ஆகியோர் சதங்களைக் குவித்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சைத் தொடங்கிய களுத்துறை நகர சபை அணி, எரங்க ரத்னாயக்க ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 130 ஓட்டங்களுடன் 296 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. பந்துவீச்சில் லங்கன் அணி சார்பாக கல்ஹான் கீத் குமார 4 விக்கெட்டுக்களையும் நவீன் கவிகார 3  விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பெரேரா சகலதுறைகளிலும் அசத்த முக்கோண தொடரில் இலங்கைக்கு முதல் வெற்றி

இதனால் போட்டியின் இறுதி நாளான இன்றைய தினம் 238 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பலோவ் ஒன் (Follow on) முறையில் தமது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த களுத்துறை அணி, 263 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த வேளை ஆட்ட நேரம் முடிவடைய, போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் நிலூஷன் நோனிஸ் 117 ஓட்டங்களையும், நிபுன கமகே 97 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 534/8d (111.1) – சஷின் பெர்ணாந்து 122,  லக்‌ஷான் ரொட்ரிகோ 121, கீத் குமார 81, துசிர மதநாயக்க 64, யஷான் சமரசிங்க 52*, எம். நிமேஷ் 2/77, மதீஷ பெரேரா 2/82, ரவிந்து திலகரத்ன 2/120

களுத்துறை நகர சபை கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 296 (82.3) – எரங்க ரத்னாயக்க 130*, நிபுன காரியவசம் 32, கீத் குமார 4/34, நவீன் கவிகார 3/91, ரஜீவ வீரசிங்க 2/54

களுத்துறை நகர சபை கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 263/5 (71) – நிலூஷன் நோனிஸ் 117, நிபுன கமகே 97, துசிர மதநாயக்க 2/34, ரஜீவ வீரசிங்க 2/45

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

நீர்கொழும்பு அணித் தலைவர் உமேக சதுரங்கவின் சகலதுறை ஆட்டத்துக்கு சவால் விடுக்கும் வகையில் விளையாடிய பொலிஸ் அணியினர், தரிந்து  டில்ஷானின் சதம் மற்றும் கல்யாண ரத்னப்பிரியவின் 10 விக்கெட்டுக்கள்  உதவியால் நீர்கொழும்பு அணியுடனான போட்டியை சமநிலையில் நிறைவுக்கு கொண்டு வந்தது.

கதிரான கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பொலிஸ் அணியினரின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு அணி, முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அணித் தலைவர் உமேக சதுரங்க ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதன்போது பொலிஸ் அணி சார்பில் நிமேஷ் விமுக்தி மற்றும் கல்யாண ரத்னப்பிரிய ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணி, உமேக சதுரங்கவின் அபார பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 100 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில், தமது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நீர்கொழும்பு அணி, 9 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இவ்விரண்டு இன்னிங்சுகளிலும் பொலிஸ் அணி சார்பாக அபார பந்துவீச்சில் ஈடுபட்ட கல்யாண ரத்னப்பிரிய தலா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதன்படி, 355 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இன்றைய தினம் தமது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த பொலிஸ் அணி, 288 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த வேளை ஆட்ட நேரம் முடிவடைய, போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 178 (63.3) – உமேக சதுரங்க 56*, லசித் குரூஸ்புள்ளே 22, அகீல் இன்ஹாம் 22, நிமேஷ் விமுக்தி 5/66, கல்யாண ரத்னப்பிரிய 5/79

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 100 (51.4) – தினூஷ பெர்ணாந்து 41,  உமேக சதுரங்க 5/33, செஹான் வீரசிங்க 2/16, சந்துன் டயஸ் 2/43

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 276/9d (84.4) – பிரவீன் பெர்னாந்து 70, சந்துன் டயஸ் 55, ஷெஹான் வீரசிங்க 53, அகீல் இன்ஹாம் 50, கல்யாண ரத்னப்பிரிய 5/98, நிமேஷ் விமுக்தி 4/95

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 288/9 (80) – தரிந்து டில்ஷான் 102, சமித் துஷாந்த 80, தினூஷ பெர்னாந்து 52*, ஷெஹான் வீரசிங்க 3/39, ரவீந்திர கருணாரத்ன 2/82, உமேக சதுரங்க 2/104

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குருநாகல் யூத் கிரிக்கெட் அணி,  முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக சரிந்த தஸநாயாக்க 63 ஓட்டங்களையும் ஹஷான் பிரபாத் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த விமானப்படை அணி, குருநாகல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

பதுரெலிய அணியை வீழ்த்திய NCC அணிக்கு சுப்பர் 8 வாய்ப்பு

இந்நிலையில், 128 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த குருநாகல் அணி, 196 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. விமானப்படை அணி சார்பாக சதுர சமந்த 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து வெற்றி இலக்காக 325 ஓட்டங்களை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த விமானப்படை அணி, 261 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்திருந்த வேளை ஆட்ட நேரம் முடிவடைய, போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 286 (104) – சரிந்த தசநாயக்க 63, ஹஷான் பிரபாத் 56*, சரித் மெண்டிஸ் 40, ஹஷான் ஜேம்ஸ் 3/29,  மிலான் ரத்நாயக்க 2/61, லக்‌ஷான் பெர்னாந்து 2/75

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 158 (49) – லியம் சாமிகர 45, ஹஷான் ஜேம்ஸ் 34, ரொஸ்கோ டெட்டில் 29, சிவகுமார் டிரோன் 4/29,  கேஷான் விஜேரத்ன 3/34

குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 196 (54.5) – கேஷான் விஜேரத்ன 62*, மலித் குரே 48, தனுஷ்க தர்மசிறி 23, சதுர சமந்த 6/57, ஹஷான் ஜேம்ஸ் 2/50

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 261/8 (54) – சுமிந்த லக்‌ஷான் 75, ரொஸ்கோ டெட்டில் 46, துலாஷ் உதயங்க 39, சரிந்த தசநாயக்க 2/36

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.