மீன்பாடும் தேனாட்டில் இடம்பெறும் ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப்போட்டிகள் யாவும் நிறைவுபெற்றுள்ள இத்தருணத்தில், அரையிறுதிப்போட்டிகளில் அபாரம் காட்டியிருந்த இலங்கை இராணுவப்படை மற்றும் இலங்கை விமானப்படை அணிகள் இறுதிப்போட்டியில் கிண்ணத்திற்காக மோதவிருக்கின்றன.

இலங்கை இராணுவப்படை எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

00DSC_2495

குழு A இன் வெற்றியாளர்களாக காணப்பட்ட இலங்கை இராணுவப்படை அணியினர் குழு B இல் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருந்த பொலிஸ் அணியுடன் மோதிக்கொண்ட இப்போட்டி ஹேர்பேர்ட் கிண்ணத்திற்கான முதாலவது அரையிறுதிப் போட்டியாக அமைந்திருந்தது.

போட்டி ஆரம்பித்த கணத்திலிருந்து புள்ளிகள் சேகரிப்பதில் இராணுவப்படை அணியானது முன்னிலை பெற்றிருப்பினும் பொலிஸ் அணி வீரர்களும் தங்களது திறமைகளை தொடர்ந்து காட்டியிருந்தனர். எது எவ்வாறு அமைந்திருப்பினும், முதல் கால்பகுதியில் இராணுவ அணியே தமது சிறப்பான ஆட்டம் மூலம் 18:12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை அடைந்தது.

முதலாம் கால்பகுதியில் பெற்றிருந்த அதே  புள்ளிகளை இராணுவ அணியினர் போட்டியின் முதல் அரைப்பகுதி நிறைவடைய முன்னரும் பெற்றனர். முதலாம் அரைப்பகுதி நிறைவடைய முன்னர் பொலிஸ் அணியினர் சற்று முன்னேற்றகரமான ஆட்டத்தினை காட்டியிருந்தனர். இக்கால்பகுதியில் மொத்தமாக 16 புள்ளிகளை அவர்கள் சேர்த்திருந்தனர். இதனால், முதலாம் அரைப்பகுதி 36:28 என்ற புள்ளிகள் கணக்கில் இராணுவப்படை அணியின் முன்னிலையுடன் நிறைவடைந்தது.

மூன்றாம் கால்பகுதியில், அதிக தவறுகளை பொலிஸ் அணியினர் மேற்கொண்டிருந்ததன் காரணமாக, இராணுவப்படை அணிக்கு புள்ளிகள் சேர்ப்பது மிகவும் இலகுவாகக் காணப்பட்டிருந்தது. இக்கால்பகுதியில் 25 புள்ளிகளை சேர்த்துக்கொண்ட இராணுவப்படை 61:44 என மூன்றாம் கால்பகுதியினை தமதாக்கியிருந்தது.

Photos : Hebert Memorial Cup Basketball Tournament – Semi Finals

இறுதி கால்பகுதியில் பொலிஸ் அணி சிறப்பாக செயற்பட்டு இராணுவப்படையைவிட அதிக புள்ளிகள் சேர்த்திருந்த போதிலும், முன்னைய கால்பகுதிகளில் பெற்ற புள்ளிகளும் இந்த பாதியில் பெற்ற புள்ளிகளும் இராணு அணியை இறுதிப்போட்டிக்கு தகுதியாக்க போதுமானதாக காணப்பட்டிருந்தது.

முடிவில், இராணுவ அணி 73:60 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொலிஸ் அணியினரை வீழ்த்தி இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளில் முதலாவதாக தமது நாமத்தினை பதித்துக்கொண்டது.


யாழ்ப்பாண கூடைப்பந்தாட்ட கழகம் எதிர் இலங்கை விமானப்படை

jaffna vs air force

குழு B இல் முன்னிலை பெற்றிருந்த விமானப்படை அணியும், குழு A இல் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண அணியினரும் தொடரின் இந்த இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் மோதியிருந்தனர்.

திறமைவாய்ந்த பல இளம் வீரர்களுடன் இறுதிப்போட்டி கனவுகளை கருத்திற் கொண்டு ஆடியிருந்த யாழ்ப்பாண இளம் வீரர்களுக்கு அதிக பலம் வாய்ந்த விமானப்படை அணியினரை சமாளிப்பது முதல் கால்பகுதியில் சிரமாக காணப்பட்டிருந்தது. இதனால், முதல் கால்பகுதியை 16:6 என விமானப்படை விளையாட்டுக் கழக அணியினர் கைப்பற்றிக்கொண்டனர்.

எனினும், சசீந்திரன் யாழ்ப்பாண அணிக்காக முதல் அரைப்பகுதியில் புள்ளிகளை சேகரிக்க அதிக பங்களிப்பினை வழங்கியிருந்தார். எனினும், விமானப்படை அணியினரும் மறுமுனையில் முன்னேறிக்கொண்டே இருந்தனர். இதனால், போட்டியின் முதல் அரைப்பகுதியில் விமானப்படை அணியே 33:20 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை அடைந்திருந்தது.

போட்டியின் மூன்றாம் கால்பகுதியில் தமக்கு கிடைத்த வாய்ப்புக்களை தவறவிடாமல் பயன்படுத்தியிருந்த விமானப்படை அணியினர் இக்கால்பகுதியில் மொத்தமாக 25 புள்ளிகளை சேர்த்துக்கொண்டனர். யாழ்ப்பாண அணியினரால் 13 புள்ளிகளை மாத்திரமே சேர்க்க முடிந்தது. இதனால், எதிரணியினை விட 25 புள்ளிகள் முன்னிலையுடன் விமானப்படை அணி 33:58 என மூன்றாம் கால்பகுதியினை தமதாக்கியது.

நான்காம் கால்பகுதியில் பாரிய இடைவெளியில் விமானப்படை அணியினர் முன்னிலை அடைந்து காணப்பட்டதால், ஹேர்பேர்ட் கிண்ண இரண்டாம் அரையிறுதிப்போட்டியின் வெற்றியாளராக மாறுவது அவர்களுக்கு இலகுவாக காணப்பட்டிருந்தது.

முடிவில், 74:47 என்ற புள்ளிகள் அடிப்படையில் யாழ்ப்பாண இளம் அணியை வீழ்த்தி வெற்றிக்கிண்ணத்திற்காக இறுதிப் போட்டியில் இராணுவப்படை அணியுடன் போட்டியிட இலங்கை விமானப்படை அணி தகுதி பெற்றுக்கொண்டது.

இப்போட்டி நிறைவடைந்த பின்னர், ThePapare.com இற்கு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண அணியின் பயிற்றுவிப்பாளர், T. கெளசிகன் “முழுக்க இளம் வீரர்களைக் கொண்டிருந்த ஒரு அணியுடனே, தாம் இந்தளவிற்கு வந்திருந்ததாகவும், குழு A இல் இராணுவப்படை அணியுடனான போட்டியில் தோல்வியடைந்ததும் தமது அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்துவிட்டது” என்றும் கூறியிருந்தார். அத்தோடு, ”நடைபெற இருக்கும் ஹேர்பேர்ட் தொடரின் மூன்றாவது இடத்திற்குரிய அணி யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் நிச்சயமாக யாழ்ப்பாணம் வெற்றி பெறும் என்பதில் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.”