உபாதைகளின் பின்னர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ள அசேல குணரத்ன

1725

இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 2-0 என பறிகொடுத்திருக்கும் தென்னாபிரிக்க அணி, தம்முடைய இலங்கை சுற்றுப் பயணத்தில்  அடுத்த கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் (இலங்கை அணியுடன்) விளையாடவிருக்கின்றது.

தென்னாபிரிக்க அணி இந்த ஒரு நாள் தொடருக்கு முன்னதாக, இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் பயிற்சிப் போட்டியொன்றிலும் ஆடுகின்றது. இந்த பயிற்சிப் போட்டிக்கான பலம் மிக்க வீரர்கள் அடங்கிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக் குழாம் இன்று (23) வெளியிடப்பட்டிருக்கின்றது.

அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஜூலை 26ஆம் திகதி கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியை முன்வரிசை துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வா தலைமை தாங்குகின்றார்.

இலங்கை அணியின் வெற்றியின் இரகசியம்

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக SSC மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும்…

தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற திமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியில் உள்வாங்கப்பட்டிருப்பதுடன், காயம் காரணமாக நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாது போயிருந்த அதிரடி சகலதுறை வீரரான அசேல குணரத்னவும் இந்த பயிற்சி ஆட்டம் மூலம் கிரிக்கெட் போட்டிகளில் மறு பிரவேசத்தினை மேற்கொள்கின்றார்.

இந்த ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கடைசியாக ஆடியிருந்த அசேல குணரத்ன அதன் பின்னர், களத்தடுப்பு பயிற்சிகளின் போது ஏற்பட்ட தசை உபாதையினால் சுதந்திர கிண்ண முக்கோண T20 தொடரிலிருந்து  இலங்கை அணி விளையாடிய எந்தவிதமான சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த பயிற்சிப் போட்டியில் இலங்கை சார்பிலான அணிக்கு பலம் சேர்க்க தேசிய அணியின் சகலதுறை வீரர்களான ஷெஹான் ஜயசூரிய, தசுன் சானக்க ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதோடு அறிமுக வீரர்களான சுழல் வீரர்களான பிரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ் மற்றும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் மினோத் பானுக்க ஆகியோருக்கும் திறமையை நிரூபிக்க சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் குழாம் – தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, தசுன் சானக்க, ஷெஹான் ஜயசூரிய, அசேல குணரத்ன, மினோத் பானுக்க, இசுரு உதான, பிரபாத் ஜயசூரிய, அசித்த பெர்னாந்து, பினுர பெர்னாந்து, நிஷான் பீரிஸ்

மேலதிக வீரர்கள் – லஹிரு மிலந்த, லசித் எம்புல்தெனிய, ஷெஹான் மதுஷங்க

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் ஜூலை மாதம் 29 ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க