முதல் போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி

676
Sri Lanka U15 Football

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) 15 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து தொடரில், தமது முதல் போட்டியில் மிகவும் மோசமான திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் 4-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது.

கத்மண்டு ANFA விளையாட்டுத் தொகுதியில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகியது முதல் பங்களாதேஷ் அணியினர் தமது வீரர்களுக்கு இடையில் மிக வேகமாக பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர். மறுபுறம், இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் தமது எல்லைக்குள்ளேயே இருந்து தடுப்பாட்டத்தை மேற்கொண்டு வந்தனர். எனினும் இலங்கை வீரர்களின் கால்களுக்கு பந்து கிடைப்பது மிகவும் குறைவாகவே இருந்தது.   

ஆட்டத்தின் 21ஆவது நிமிடம் பங்களாதேஷ் வீரர் ஒருவரை முறையற்ற விதத்தில் வீழ்த்திய மெஹமட் நபீல் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு நடுவரின் எச்சரிக்கைக்கு உள்ளாகினார்.  

இதனால் பங்களாதேஷ் வீரர்களுக்கு ப்ரீ கிக் வாய்ப்பும் வழங்கப்பட்டது.  இதன்போது மிக வேகமாக அடிக்கப்பட்ட பந்தை கோல் காப்பாளர் சன்தீப வாஸ் தடுத்து நிறுத்திக்கொண்டார்.  

சில நிமிடங்களின் பின்னர் இலங்கை வீரர் மொஹமட் ரிகாஸ் உபாதைக்குள்ளாகியதனால், அவருக்கு மாற்றீடாக யாழ் பத்திரிசியார் கல்லூரி வீரர் இக்கினம் டினியாஸ் மைதானத்திற்குள் உள்வாங்கப்பட்டார்.  

போட்டியின் முதலாவது கோல் ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர் மொஹமட் பாஹிம் மூலம் பெறப்பட்டது. இலங்கை அணியின் பல வீரர்களைத் தாண்டிச் சென்ற அவர், சிறந்த முறையில் அந்த கோலைப் பெற்றார்.

தொடர்ந்து, 32 நிமிடங்கள் கடந்த நிலையில் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே வைத்து பங்களாதேஷ் வீரர்களுக்கு கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் மூலம் அவர்கள் இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டனர். சக வீரர் தன்னிடம் இலேசாகத் தட்டிவிட்ட பந்தை மிக வேகமாக கோலுக்குள் உருட்டி அடித்த பாஹிம் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

முதல் பாதியின் இறுதித் தருவாயான 45ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர்களுக்கு கிடைக்கப்பெற்ற கோணர் உதை வாய்ப்பின்போது, உதையப்பட்ட பந்து எதிர் திசைக்கு செல்ல, அங்கே சென்ற பின்கள வீரர் நஸ்முல் பிஸ்வாக், மிகத் தொலைவில் இருந்து கோல் நோக்கி உதைந்து அவ்வணிக்கான மூன்றாவது கோலையும் பெற்றுக்கொடுத்தார்.  

முதல் பாதி: இலங்கை 0 – 3 பங்களாதேஷ்

இரண்டாவது பாதியின் சிறந்த ஒரு முயற்சியாக பங்களாதேஷ் அணியின் மத்திய கள வீரர் ஒருவர் நீண்ட தூரத்தில் இருந்து சிறந்த முறையில் கோலை இலக்கு வைத்த உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்குள் வந்தது.

ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர் கோல் நோக்கி உதைந்த பந்தை மாற்று கோல் காப்பாளராக மைதானத்திற்குள் நுழைந்திருந்த அசன்க மிஹிரு தடுத்தார்.

70 நிமிடங்கள் கடந்த நிலையில் பல வீரர்களுக்கு இடையிலான பந்துப் பரிமாற்றத்தின் பின்னர் மீண்டும் கோல் நோக்கி உதையப்பட்ட பந்தையும் அசன்க மிஹிரு பிடித்துக்கொண்டார்.

மேலும் 5 நிமிடங்களில் இலங்கை தரப்பினரால் தமது வீரர் ஒருவர் பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டமையினால் பங்களாதேஷ் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இதன்போது உதையைப் பெற்ற பாஹிம் தனது ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

இந்தப் போட்டியில் 85 நிமிடங்கள் கடந்த பின்னரே இலங்கை அணிக்கான முதல் கோணர் உதை வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும், அதன் மூலமும் இலங்கைக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

இறுதியில் போட்டி நிறைவடையும்பொழுது, பங்களாதேஷ் அணி நான்கு கோல்களினால் வெற்றி பெற்று தமது முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது.

முழு நேரம்: இலங்கை 0 – 4 பங்களாதேஷ்

கோல் பெற்றவர்கள்

பங்களாதேஷ் – மொஹமட் பாஹிம் 28’ 33’ & 75’, நஸ்முல் பிஸ்வாக் 45’

மஞ்சள் அட்டை

இலங்கை – மெஹமட் நபீல் 21’, விஷல்க சுலக்ஷன 57’