மலேசிய – இலங்கை நட்புறவு போட்டிக்கான அணிக் குழாம் அறிவிப்பு

1589

இலங்கை – மலேசிய அணிகளுக்கு இடையில் சுகததாஸ அரங்கில் நாளை (12) நடைபெறவுள்ள நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிக்கான அணி வீரர்கள் விபரத்தினை இலங்கை கால்பந்து சம்மேளனம் இன்று (11) அறிவித்துள்ளது.  

மலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி

இலங்கை மற்றும் மலேசிய …

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி, இறுதியாக கடந்த மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற சாப் (SAFF) சுசுகி கிண்ண தொடரில் பங்கேற்றிருந்தது. இதன் பின்னர் நாடு திரும்பி ஓய்வில் இருந்த வீரர்கள், மலேசிய அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டிக்கான பயிற்சியை, பெத்தகான கால்பந்து பயிற்சி நிலையத்தில் இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து மேற்கொண்டு வருகின்றனர்.  

இதேவேளை, சாப் சுசுகி கிண்ணத்தில் இம்முறை பங்கேற்றிருந்த இலங்கை அணி, கடந்த காலங்களை விட சிறப்பாக விளையாடியிருந்தது. போட்டித் தொடருக்கு முன்னர் நடைபெற்ற நட்புரீதியிலான போட்டியில் பங்களாதேஷ் அணியை 1-0 என வீழ்த்தியிருந்த இலங்கை, தொடரின் முதல் லீக் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியிடம் 2-0 என தோல்வியடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாலைத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியை கோல்கள் ஏதுமின்றி சமப்படுத்தியிருந்தனர்.

எனினும், பி குழுவில் இடம்பெற்றிருந்த இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் அணிகள், புள்ளிகள் மற்றும் கோல்கள் கணக்கில் சமனிலையில் இருந்ததால், நாணய சுழற்சியின் மூலம் அரையிறுதிக்கான அணி தேர்வு செய்யப்பட்டது. இதில் தோல்வியடைந்த இலங்கை அணி ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

தற்போது பயிற்சிகளை மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மலேசிய அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியை வெற்றி கொள்ளும் நோக்குடன் களமிறங்கவுள்ளது. அத்துடன் புதிய பயிற்றுவிப்பாளர் நிசாம் பகீர் அலியின் பயிற்றுவிப்பின் கீழ் சிறந்த முறையில் விளையாடி வரும் இலங்கை அணி, தொடர்ந்து அதிக போட்டிகளில் விளையாடி உலக கால்பந்து தரவரிசையில் முன்னேறுவதற்கு எதிர்பார்த்துள்ளது.

இதன்படி, மலேசிய அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள போட்டிக்கு இலங்கை அணியின் 23 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக ஏற்கனவே இடம்பற்ற போட்டிகளுக்கு அணியை வழி நடாத்திய சுபாஷ் மதுஷான் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சாப் சுசுகி கிண்ணத்தின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் கோலடித்து அணியை வெற்றிபெறச் செய்த மொஹமட் பசால் முன்கள வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சாப் சுசுகி கிண்ண குழாத்தில் மூன்று முன்கள வீரர்கள் பெயரிடப்பட்டிருந்தமை போன்று, இம்முறையும் மூன்று முன்கள வீரர்கள் மாத்திரமே பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களுடன் பத்து மத்தியகள வீரர்கள், ஏழு பின்கள வீரர்கள் மற்றும் மூன்று கோல் காப்பாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.   

இதில் இலங்கை அணி சார்பில் சாப் சுசுகி கிண்ண குழாமில் இடம்பெற்றிருந்த கொழும்பு கால்பந்து கழக கோல் காப்பாளர் கவிஷ் பெர்னாண்டோ நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரினௌன் விளையாட்டு கழகத்தின் ராஷிக் ரிஷாட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

FA கிண்ண 16 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின்…

இதேவேளை மலேசிய அணியின் சார்பில் 22 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அணித் தலைவராக மொஹமட் சகுவான் செயற்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

பின்கள வீரர்கள் – சுபாஷ் மதுஷான் (தலைவர்), டக்சன் பியுஸ்லஸ், அனுருத்த வரகாகொட, ஜுட் சுபன், சரித்த ரத்நாயக்க, ஹர்ஷ பெர்னாண்டோ, உதய கீர்த்தி குமார

மத்தியகள வீரர்கள் – சஜித் குமார மெண்டிஸ், மொஹமட் ரிப்னாஸ், அபீல் மொஹமட், அசிகுர் ரஹ்மான், மரியதாஸ் நிதர்சன், கவிந்து இஷான், சசங்க டில்ஹார ஜயசேகர, டிலான் கௌசல்ய டி சில்வா, மொஹமட் முஷ்தாக், ஜீவந்த பெர்னாண்டோ

முன்கள வீரர்கள் – மொஹமட் பசால், அசேல மதுசான், சபீர் ரசூனியா

கோல் காப்பாளர்கள் – ராசிக் ரிஷாட், சுஜான் பெரேரா, தனுஷ்க ராஜபக்ஷ

மலேசிய குழாம்

முஹமட் ஹெஷிக் நட்ஷ்லி, மெதிவ் டெவிஸ், சஹருல் மொஹ்ட் சாட், பஷ்லி மஷ்லான், எடம் நொர் அஷ்லின், மொஹ்ட் நொர் ஹகீம் ஹசன், முஹமட் அக்யார் அப்துல் ரஷிட், மொஹமட் சகுவான் (தலைவர்), நொர்ஷரூல்டன் தலஹா, முஹமட் சஹெரல் பிக்ரி, மொஹமடோ சுமரேஹ், அமிருல் அஷான் அஷ்னான், மொஹமட் சைமர் குட்டி அபா, கென்னி பல்ராஜ் தேவரகி, மொஹ்ட் சிஷ்வான் ஷைனொன், முஹமட் இர்பான் ஷக்ரியா, மொஹால்லி ஜசூலி, முஹமட், சியாமி சபாரி, முஹமட் சிஷ்வான் அன்டிக் மொஹ்ட் இசாக், கஹ்ருல் பஹ்மி சீ மெட், முஹமட் ஹபிசுல் ஹகீம் கஹ்ருல்

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க