உத்தியோகபூர்வமற்ற முதல் ஒருநாள் போட்டியின் தொடர்ச்சி நாளை

1400

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இலங்கை A மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டி கனமழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சி நாளை இடம்பெறும் என்று போட்டி ஏற்பட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் A அணித்தலைவர் ஜேசன் முகமது முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய விக்கெட் காப்பாளர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சாட்விக் வோல்டன் மற்றும் இடது கை துடுப்பாட்ட வீரர் கைல் ஹோப் ஆகியோர் இணைந்து 4.5 ஓவர்களில் 40 ஓட்டங்களை விளாசியிருந்த நிலையில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. சாட்விக் வோல்டன் 16 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, கசுன் ராஜிதவின் பந்து வீச்சில் லஹிரு மிலிந்தவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இடது கை துடுப்பாட்ட வீரர் அசாத், இரண்டாம் விக்கெட்டுக்காக 19 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை, 10 பந்துகளுக்கு முகம் கொடுத்து 14 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அமில அபோன்சுவின் பந்து வீச்சில் தசுன் ஷானகவிடம் இலகு பிடியோன்றை கொடுத்து அவர் ஆட்டமிழந்த போது மேற்கிந்திய தீவுகள் அணி மொத்தமாக 59 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதே நேரம், மறு முனையில் கைல் ஹோப் 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களை பெற்று சிறப்பாக துடுப்பாடிக்கொண்டிருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 69 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில்மழை குறுக்கிட்டதனால், காலை 10.45 மணியளவில் போட்டி இடைநிறுத்தப்பட்டதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியின் தொடர்ச்சியை நாளை (25ஆம் திகதி) காலை 9.45 மணியளவில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் A அணி – 69/2 (12.5) கைல் ஹோப் 28*, சாட்விக் வோல்டன் 16, அசாத் 14, அமில அபோன்சோ 1/13, கசுன் ராஜித 1/22.