சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டி இன்று கண்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர நிறைவில் இங்கிலாந்து லயன்ஸ் அணியானது தமது துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டத்துடன் வலுப்பெற்றுள்ளது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியானது, இலங்கை A அணியுடன் உத்தியோகபூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.

இன்றைய இப்போட்டியின் நாணய சுழற்சியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

அணித்தலைவர் மற்றும் இளம் வீரர் ஹஸிப் ஹமீத் ஆகியோருடன் தங்களது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இங்கிலாந்து லயன்ஸ் அணியின் முதல் விக்கெட்டானது போட்டியின் ஆரம்பத்திலேயே அசித்த பெர்னாந்துவின் பந்து வீச்சில் பறிபோனது. இதனால் வெறும் 4 ஓட்டங்களுடன் ஹமீத் ஓய்வறை திரும்பினார். புதிதாக வந்த துடுப்பாட்ட வீரரும் பெர்னாந்துவின் அடுத்த ஓவரில் LBW முறையில் ஓட்டம் ஏதுமின்றி ஆட்டமிழக்கச் செய்யப்பட, களத்தில் நின்ற வீரர்களான அணித் தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் மற்றும் டொம் வெஸ்லி ஆகியோர் நிதானமாக ஆடி, ஒரு வலுவான இணைப்பாட்டத்திற்கு அத்திவாரமிட முயற்சி செய்தனர். எனினும், அது தேசிய அணி வீரர் தில்ருவன் பெரேராவின் சுழல் பந்துவீச்சு மூலம் சிறிது நேரத்திலேயே நிர்மூலமாக்கப்பட்டது. இதனால் அணித்தலைவர் ஓய்வறை திரும்ப மீண்டும் ஒரு வலுவான இணைப்பாட்டத்திற்கு வித்திட்டு அது கை கொடுக்க, லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் டொம் வெஸ்லி ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்காக 147 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது.

4 ஆவது விக்கெட்டாக பறிபோன, வெஸ்லி 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதம் கடக்க தவறினார். சிறிது நேரத்தில் அரைச்சதம் (59) கடந்திருந்த லிவிங்ஸ்ட்ன் மலிந்த புஷ்பகுமாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், அதன் பின்னர் வந்த மத்திய வரிசை வீரர்களை குறைந்த ஓட்டங்களிற்குள் இலங்கை A அணி ஆட்டமிழக்கச்செய்தது. எனினும் பின்வரிசை வீரராக இன்று வந்த டொபி ரொலன்ட் ஜோன்ஸ், சிறப்பாக ஆடி பெற்றுக்கொண்ட 82 ஓட்டங்களினால் இங்கிலாந்து லயன்ஸ் அணி தமது முதல் இன்னிங்சுக்காக 80.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 316 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை A அணி சார்பாக பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்ட சிலாபம் மேரியன்ஸ் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி, தமது முதல் இன்னிங்சுக்கான துடுப்பாட்டத்தினை ஆரம்பித்தது. மூன்றாவது வீரராக களமிறங்கிய சந்துன் வீரக்கொடியை தவிர ஏனைய துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, சரித் அசலங்க, ரொஷென் சில்வா மற்றும் உதார ஜயசுந்தர ஆகியோரை பத்திற்கு குறைவான ஓட்டங்களிற்குள் பறிகொடுத்த இலங்கை A அணி போட்டியின் ஆட்ட நேர நிறைவின் போது, 4 விக்கெட்டுகளை இழந்து 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

களத்தில், 15 ஓட்டங்களுடன் சந்து வீரக்கொடி ஆட்டமிழக்காமல் நிற்க இலங்கை A அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியைவிட 287 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

பறிபோன விக்கெட்டுக்களில் இரண்டினை சிறப்பான துடுப்பாட்டத்தினை முன்னதாக வெளிப்படுத்திய, டொபி ரொலன்ட் ஜோன்ஸ் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து லயன்ஸ் அணி (முதல் இன்னிங்ஸ்): 316 (80.2) – டொம் வெஸ்லி 97, டொபி ரொலன்ட் ஜோன்ஸ் 82, லியாம் லிவிங்ஸ்ட்ன் 59, மலிந்த புஷ்பகுமார 97/4, அசித்த பெர்னாந்து 31/2

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்):  29/4 (6.5) – சந்துன் வீரக்கொடி 15*, டொபி ரொலன்ட் ஜோன்ஸ் 12/2

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.