2ஆவது போட்டியிலும் தோல்வியடைந்ததால் தொடரை பறிகொடுத்த இலங்கை A அணி

1950

இலங்கை A அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று குருனாகல் வெலகதர சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பான பந்து வீச்சு, துடுப்பாட்டம் என்பவற்றை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் A அணி 109 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இன்றைய வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் A அணியினர் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-0 என முன்னிலை வகித்து தொடரினையும் தம்வசமாக்கியுள்ளனர்.

இன்று காலை ஆரம்பித்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் A அணியின் தலைவர் ஜேசன் மொஹம்மட் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இந்த போட்டியின் மூலம் முதல் தர போட்டியொன்றில் முதன் முறையாக விளையாடும் வாய்ப்பை இலங்கை A அணி சார்பாக சம்மு அஷான் பெற்றார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் A அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சட்விக் வோல்டன், கைல் ஹோப் ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் A அணியின் முதலாவது விக்கெட்டாக அதிரடியாக ஆடிய சட்விக் வோல்டன் 57 பந்துகளிற்கு 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உள்ளடங்களாக 70 ஓட்டங்களை விளாசியிருந்த நிலையில், இலங்கை A அணித்தலைவர் மிலிந்த சிறிவர்தனவின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து வந்த ஏனைய துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் A அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஹைல் ஹோப் 110 பந்துகளிற்கு 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்ளடங்களாக 107 ஓட்டங்களை பெற்று தனது முதலாவது சதத்தை முதல்தர போட்டியொன்றில் பதிவு செய்தார்.

இவருடன்  ரோவ்மன் பவல் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்ளடங்களாக பெற்ற  52 ஓட்டமும் மேற்கிந்திய தீவுகள் A அணி இந்த பலமான மொத்த ஓட்ட எண்ணிக்கையை பெற உதவியது.

பந்து வீச்சில் இலங்கை A அணி சார்பாக ஷெஹான் ஜயசூரிய 9 ஓவர்களை வீசி 54  ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும், பினுர பெர்னாந்து 9 ஓவர்களை வீசி 70 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும், குணத்திலக்க, சிறிவர்தன, தசுன் ஷானக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து 348 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தொடங்கிய இலங்கை A அணியினர் முதலாவது ஓவரிலேயே ரொன்ஸ்போர்ட் பீட்டோனின் பந்தில் தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடியின் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஓட்டம் எதுவும் பெறாமலேயே அவர் களத்தை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு  இலங்கை A அணியின் இரண்டாவது விக்கெட்டும் 10  ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், 3 ஆவது ஓவரில் அதே பீட்டோனின் பந்தில் பறிபோனது. இம்முறை மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க ஒரு ஓட்டம் மாத்திரம் பெற்று மேற்கிந்திய தீவுகள் A அணியின் விக்கெட் காப்பாளர் சட்விக் வோல்டனிடம் பிடிகொடுத்து களத்தை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்காக ஆறுதலான இணைப்பாட்டம் பெறப்பட்ட போதிலும் அடுத்தடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் A அணியின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் தடுமாறியமையினால், 42.1 ஓவர்கள் முடிவில் இலங்கை A அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 109 ஓட்டங்களினால் தோல்வி அடைந்தது.

இலங்கை A அணி சார்பாக 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் உள்ளடங்களாக 113 ஓட்டங்களைப் பெற்ற ஷெஹான் ஜயசூரிய சதத்தை பூர்த்தி செய்திருந்த போதும் அது வீணானது. இது அவரது 5 ஆவது முதல்தர ஒரு நாள் போட்டிக்குரிய சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய இலங்கை A அணி வீரர்களில் சரித் அசலன்க, தசுன் ஷானக தவிர்ந்த ஏனையோர் துடுப்பாட்டத்தில் சரிவர பிரகாசிக்கவில்லை.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பாக ரோவ்மென் பவல் 7.1 ஓவர்களை வீசி 44 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், ரொன்ஸ்போர்ட் பீட்டன் 7 ஓவர்களை வீசி 41 ஓட்டங்களிற்கும், கைல் மேயர்ஸ் 8 ஓவர்களை வீசி 57 ஓட்டங்களிற்கும் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், வீரசாமி பெருமாள் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தற்பொழுது ஒரு நாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் A அணி கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி ஆர். பிரேதமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெறும்.

போடியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் A அணி: 347/9(50) கைல் ஹோப் 107(110), சட்விக் வோல்டன் 70(57), அசாத் புடாடின் 57(70), ரோவ்மென் பவல் 52(22), ஷெஹான் ஜயசூரிய 54/4(9), பினுர பெர்னாந்து 70/2(9)

இலங்கை A அணி: 238/10(42.1) ஷெஹான் ஜயசூரிய 119(113), சரித் அசலன்க 44(59), தசுன் ஷானக 32(34), ரோவ்மென் பவல் 44/3(7.1),  ரொன்ஸ்போர்ட் பீட்டோன் 41/2(7), கைல் மேயர்ஸ் 57/2(8), வீரசாமி பெருமாள் 38/1(10)