சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும், இலங்கை A அணிக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில், இலங்கை A அணி தமது பந்து வீச்சு துறையில் ஆதிக்கம் செலுத்தியிருப்பினும் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டதால், இங்கிலாந்து லயன்ஸ் அணி 261 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

சதத்தினை தவறவிட்ட டொம் வெஸ்லி; முதல் நாளில் இங்கிலாந்து லயன்ஸ் வலுவான நிலையில்

பல்லேகல சர்வதேச மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின் இரண்டாம் நாளான இன்று, இலங்கை A அணி தமது முதல் இன்னிங்சினை 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் ஓட்டங்கள் குவிக்க வேண்டிய கடப்பாட்டில் தொடர்ந்தது.

போட்டி ஆரம்பித்து அரைமணி நேரத்திற்குள் இலங்கை A அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மூன்று ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், இலங்கை அணி 58 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து பாரிய பின்னடைவை எதிர்நோக்கியது.

எனினும், ஆறாவது விக்கெட்டுக்காக சந்துன் வீரக்கொடி மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் 51 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர் இதனால், இலங்கை தரப்பு 100 ஓட்டங்களினை கடந்தது. இதன்போது இலங்கை A அணிக்கு வலுச்சேர்க்க முயன்றிருந்த சந்துன் வீரக்கொடி அரைச் சதம் கடந்து 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை A அணி 7ஆவது விக்கெட்டுக்காகவும் மலிந்த புஷ்பகுமார மற்றும் தில்வருவான் பெரேரா மூலம் சற்றுப்போராடி 45 ஓட்டங்களை சேர்த்தது. எனினும், இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை தொடர்ந்து சமாளிக்க முடியாத இலங்கை A அணி, 167 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இலங்கை A அணியில் பின்வரிசையில் சற்றுப் போராடியிருந்த தில்ருவான் பெரேரா 7 பவுண்டரிகளை விளாசி 37 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சில், மொத்தமாக டொபி ரொலன்ட் ஜோன்ஸ் நான்கு விக்கெட்டுக்களை சரித்ததோடு, வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஒல்லி ரெய்னர் 3 விக்கெட்டுக்களையும், குமார் சங்கக்காரவின் சக அணியான சர்ரேய் அணியில் விளையாடும் டொம் குர்ரன், டொம் ஹெல்ம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், 149 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை தொடக்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி போட்டியின் இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது, 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 112 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்சில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்திருந்த ஹஸீப் ஹமித் ஓட்டம் எதனையும் பெறாமல், லஹிரு கமகேயினால் போல்ட் செய்யப்பட்டிருந்தார். இங்கிலாந்து லயன்ஸ் அணியில் பறிபோன ஏனைய 5 விக்கெட்டுக்களில் அவ்வணியின் தலைவர் கீட்டோன் ஜென்னிங்ஸ் தவிர ஏனைய அனைவரும் 20 ஓட்டங்களையேனும் பெறவில்லை. கீட்டோன் ஜென்னிங்ஸ் 37 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை A அணியின் பந்து வீச்சில் இரண்டாவது இன்னிங்சிலும் திறம்பட செயற்பட்டிருந்த மலிந்து புஷ்பகுமார இன்றைய நாளில் மூன்று விக்கெட்டுக்களை சாய்த்ததோடு, தனது பங்கிற்கு தில்ருவான் பெரேராவும் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நேர நிறைவின் போது, இங்கிலாந்து லயன்ஸ் அணியில் 14 மற்றும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் சேம் குர்ரன் மற்றும் டொம் குர்ரன் ஆகியோர் நின்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து லயன்ஸ் அணி (முதல் இன்னிங்ஸ்) – 316 (80.2) டொம் வெஸ்லி 97, டோபி ரொலன்ட் ஜோன்ஸ் 82, லியாம் லிவிங்ஸ்ட்ன் 59, மலிந்த புஷ்பகுமார 97/4, அசித்த பெர்னாந்து 31/2

இலங்கை A அணி(முதல் இன்னிங்ஸ்) – 167 (47.4) சந்துன் வீரக்கொடி 68, தில்ருவான் பெரேரா 37, மலிந்து புஷ்பகுமார 26, டொபி ரொலன்ட் ஜோன்ஸ் 51/4, ஒல்லி ரெய்னர் 27/3

இங்கிலாந்து லயன்ஸ் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 112/6 (40) கீட்டோன் ஜென்னிங்ஸ் 37, மலிந்த புஷ்பகுமார 28/3, தில்ருவான் பெரேரா 42/2

போட்டியின் மூன்றாம் நாள் நாளை தொடரும்